Monday, July 19, 2010

வேலைதேடும் பேச்சுலரின் ஒருநாள் இரவு.. (கவிதை)

ஒரு பேச்சுலரின் மனம் எவ்வளவு கலைந்து கிடக்கிறது என்பதை, அவன் இருக்கும் அறை கலைந்து கிடப்பதைக் கொண்டு அளவிடலாம். அந்த குப்பைக்குள் நீங்கள் நீலப்படங்களையும் காணலாம்.. நீட்ஷேவையும் தேடலாம். உங்கள் கண்ணில் முதலில் படுவதைக் கொண்டு அவனை முடிவு செய்யாதீர்கள்.. இன்னும் சொல்லப்போனால் பேச்சுலர் அறையில் தான் ஒருவன் அசலாய் இருக்கிறான். அதை நீங்கள் இந்த கவிதையில் உணரலாம்...



கவிழ்த்து வைக்கப்பட்ட “ஜீ.கே.டுடே”க்கும்
“காம்படீஷன் சக்ஸஸ்”க்கும் இடையே
சுற்றிச் சுற்றி வரும்
கொசுக்களின் ரீங்காரத்தோடு
“ரீசனிங்”கின் ஐந்தாவது பட சிந்தனை

“ஆஸ்ட்ரே”வாகிப் போன
“கோல்கேட்” டப்பாவின் கீழ் படபடக்கும்
ஊரிலிருந்து வந்திருக்கும் லெட்டர்
அதில்
உறவினர் யாருக்கேனும் கல்யாணம் நடந்திருக்கும்
நண்பர்கள் யாருக்கேனும் வேலை கிடைத்திருக்கும்
“உனக்கு எப்போது?” என்னும் வார்த்தைகள்
எழுத நினைத்து விடப்பட்டிருக்கும்

ஒவ்வொரு கடிதத்திலும் இடம்பெற்றிருக்கும்
வார்த்தைகூட மாறாமல்
உடம்ப பார்த்துக்கோவும்
கடவுள் சீக்கிரம் நல்ல வழிகாட்டுவாரும்
கடைசி வரிகளாய்

வார இதழின் நடுப்பக்கங்களிலும்
ஜன்னலின் வழியே தெரியும் வானவெளியிலும்
தெரிந்தும் மறைந்தும் விளையாடிப் போகும்..
வருங்கால மனைவி பற்றிய கற்பனைகள்

குல்பி ஐஸ் மணியோசை..
எப்.எம். பாடலோசை..
எங்கேயேனும் கேட்கும் அலாரஓசை..
மற்றும்
மனதினுள் ஒலிக்கும் மௌனத்தின் ஓசை..
இப்படியாய் நகரும்

வேலை தேடும் பேச்சுலரின் ஒவ்வொரு இரவும்



.

No comments:

Post a Comment