Wednesday, July 28, 2010

உளறல் (சிறுகதை)

            ‘குடித்துவிட்டு உளறாமல் இருப்பது எப்படி?’ என்று ஏதேனும் புத்தகம் இருந்தால் யாரேனும் எனக்கு அனுப்பி வைக்கவும். வி.பி.பி.யில் பெற்றுக் கொண்டு பணம் அனுப்பி வைக்கிறேன்.

             எங்கள் ரூமில் உள்ள ஐந்து பேரில்  நானும், நண்பர் நடராசும் மட்டுமே குடிமகன்கள். மீதமுள்ள மூன்று பேரும் காலியான குவாட்டர் பாட்டிலை ஏதோ செத்த எலியை தூக்குவது போல் தூக்கிப் போடுபவர்கள். எங்கள் இருவரிலும் நான் சமீபத்தில் தான் ஓப்பனிங் செய்து ‘குறைகுடம் கூத்தாடும்’ என்பதற்கேற்ப ஆடிக்கொண்டிருப்பவன். சக குடியானவர் பீடிங் பாட்டிலிலேயே ஊற்றி அடிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். அவர் உளர்வதோ, அதிகமாய் தள்ளாடுவதோ கிடையாது. ம்... நிறைகுடம்.

                இதே போல் தான் அன்று தண்ணியடித்துவிட்டு ‘மயூரி’ பற்றி கமெண்ட் அடித்து எல்லோரையும் வெறுப்பேற்றியிருக்கிறேன். மயூரி எங்கள் காலேஜில் படிக்கும் ஒரு மாடர்ன் மாதுசிராமணி..

                ‘ஏன்டா.. இந்த மயூரிக்கென்ன ஏஞ்சலினாஜோலினு நினைப்பா. இல்ல இந்த எழவு ஊர அமெரிக்கானு நினைச்சாளா? எப்ப பாரு ஜீன்ஸ், லெக்கின்ஸ், டி-சர்ட்... குட்டியானை மாதிரி இருந்துட்டு அவ சைஸ்க்கு இதெல்லாம் தேவையா.. அதுவும் அந்த ஜீன்ஸ் போட்டுகிட்டு தைச்சது மாதிரி அவ்வளவு டைட்.. அவசரம்னா எப்படித்தான்....’ என்ற ரேஞ்சுக்கு உளறியிருக்கிறேன்.

                    இன்னும் கூட யாரைப் பற்றியெல்லாமோ உள்ளே அடக்கி வைத்திருந்த அத்தனை விஷயத்தையும் போட்டு உடைத்திருக்கிறேன். என் அப்பாவை, என்னை சின்னதிலிருந்தே கோ-எஜிகேஷனில் சேர்க்காமல் பாய்ஸ் ஸ்கூலில் சேர்த்ததற்காக திட்டியிருக்கிறேன். லஷ்மியை சைட்டடிக்கிறானென்று என்னோடு படிக்கும் ஒருவனை, என் ரூம் மேட்களிடம் ஆளுக்கொரு கெட்ட வார்த்தை சொல்லச் சொல்லி அதைக் கொண்டே திட்டியிருக்கிறேன். லஷ்மி நான் ரூட் போட்டுக் கொண்டிருக்கும் பெண். இது போன்று எனக்கு பிடிக்காத நண்பர்கள்(!) பற்றியெல்லாம் பேசியதில் எங்களுக்கிடையேயான நட்பு கான்ட்ராக்ட் விட்டு கட்டிய பாலம் போல விரிசல் கண்டது. இதனால் தான் நான் புத்தகம் தேடுமளவுக்கு இந்த விஷயம் தீவிரமடைந்துள்ளது.

                “உளரல் ஏன் வருகிறது” என்று அந்த சக சிட்டிசனிடம் கேட்டதில், ‘மனசுக்குள்ள எதைப் பத்தியாது நினைச்சுகிட்டே தண்ணியடிச்சோம்னா.. அதப்பத்தி உளர ஆரம்பிச்சிடுவோம். அதான் லவ் பெயிலியர்ல தண்ணியடிக்கிறவன் காதலிய பத்தியே புலம்பிட்டிருக்கான்’ என்று சைக்கியாட்ரிஸ்ட் ரேஞ்சில் விளக்கம் கொடுத்தான்.

                அப்படியானால் இன்று எதைப்பற்றியும் நினைக்கக்கூடாதென முடிவெடுத்தேன். ஆமாம்.. இன்று நான் தண்ணியடிக்கப் போகிறேன். என் சக சிட்டிசன் ஏற்கனவே பாட்டில் வாங்க போய்விட்டான்... இதோ.. வந்தும்விட்டான்.

                     பாட்டிலைத் தட்டி, திறந்து, கலந்து பூமாதேவிக்கு கொஞ்சம் சமர்ப்பனம் பண்ணிவிட்டு குடிக்கப் போனவன், ஒருமுறை என் மனதை நோட்டம் விட்டேன். ஏதேனும் நினைத்திருக்கிறேனா என்று.. எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியானால் இன்று உளர மாட்டேன் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டோ, சந்தோஷப்படுத்திக் கொண்டோ குடிக்க ஆரம்பித்தேன்.

                       காலை.. மிகவும் சோம்பலாய் எழுந்தேன்.. லேசாய் தலைவலித்தது. உளறல் பற்றி ஞாபகம் வரவே, நண்பர்களை நோக்கி ஆர்வமாய்க் கேட்டேன்..

            “நைட்டு ஏதாவது உளறினேனா?”

            “ம்... ரொம்ப” என்றான் ஒருவன் சலிப்பாக..

            “ மாட்டேனே.. ஏன்னா நான் எதையுமே நினைச்சுட்டிருக்கலையே. அதனால கண்டிப்பா உளறியிருக்க மாட்டேனே... சான்சே... இல்ல..”

            “இதையே சொல்லிச் சொல்லிதான் நைட்டெல்லாம் உயிரை வாங்குன. இன்னும் தெளியலையா? என்றனர் கோபம் கலந்த கோரசாக.




.

No comments:

Post a Comment