Monday, July 19, 2010

தேடல்.. (கவிதை)

ஒவ்வொருமுறை வெளியே செல்ல நேர்கையிலும் தேடுகிறேன்

கடக்கும் வாகனங்களின்
சன்னலோர முகங்களில்..

வெயிலுக்காய் புத்தகத்தில்
முகம் மறைப்பவர்களில்..

பேருந்து நிறுத்தத்தில்
பின்பக்கம் காட்டிப் பேசிக் கொள்பவர்களில்..

தொலைவில் செல்லும்
ஒற்றை உருவத்தில்..

மழையைக் காரணங்காட்டி
குடையால் முகம் மறைப்பவர்களில்...

கவனித்துப் பார்க்கும் முன்பே
கடைக்குள் நுழைந்தவர்களில்..

மங்கிய தெருவிளக்கொளியில்
தெளிவின்றித் தெரியும் முகங்களில்..

இன்னும்.. இன்னும்..

முயற்சித்துப் பார்த்து பின் முகம் சுளிக்கிறேன்
இல்லையில்லை
இதுவல்ல நான் தேடும் முகமென்று
ஒவ்வொரு எனது பயணத்திலும் வேகம் காட்டுகிறேன்
வேகமாய்ச் சென்றால் பிடித்துவிடலாமென்று
ஒருவேளை அந்தமுகம் எனக்குப் பின்னால் வந்தால்..?!
வேகம் குறைத்துப் பின்
மெதுவாய்த் தொடரும் என் பயணம்

நான் போகும் பாதை
இரண்டு மூன்றாய் பிரிந்துவிட்டால் இன்னும் குழப்பம்
எதில் சென்று தேடுவதென
ஒவ்வொரு பாதையிலும் நுழைந்து
சிறிது தூரம் சென்று
பின் திரும்பி விடுகிறேன்

ஒருவேளை அந்த பாதையில் போயிருக்கக் கூடுமோ?

இப்படியாய் இப்போதும் கூட
வெளியே செல்லும்பொழுதெல்லாம் தேடுகிறேன்

அந்த “யாரோ”வை

No comments:

Post a Comment