Monday, July 19, 2010

நினைவலைகள்.. (கவிதை)

மழலையர் பள்ளிக்கு
மணிக்கணக்கில் தயாராகி
அழுதுகொண்டே நான் சென்ற மாட்டுவண்டி..
தினம் ஒரு “பாட்ஜ்” தொலைத்து
டீச்சரின் அடிக்கு பயந்து
திட்டுடன் அன்னையிடம் வாங்கிய ஒரு ரூபாய்..

அதிகாலை வேளையிலே
ஆச்சியுடன் அளவளாவி
நான் போகும் பால்பண்ணை பயணம்..

என் முகம்பிடித்து தலைவாரவும்
தொடையில் அடித்து பாடம் சொல்லவும்
என் சிற்றன்னை பயன்படுத்திய சீப்பு..
வெள்ளையடிக்கும் பண்டிகை நாளில்
வீட்டினை ஒதுங்க வைக்கையில்
பார்த்து மகிழ்ந்த பழைய புகைப்படங்கள்..
சிறாரோடு சேர்ந்தமர்ந்த
சினிமா கதை பேசி
சிரித்து சிரித்து வந்த கண்ணீர்..

பெண்வேடம் நான் அணிந்து
பள்ளிவிழாதனில் கலந்து
பாராட்டுடன் வாங்கிய பரிசு..

செய்திகள் வாசிக்க டி.வி.யில் வருவது
ஆணென்றும் பெண்னென்றும் கருத்து சொல்லி
போட்டியிடட பால்ய நண்பர்கள்..

தூரத்தில் இருந்து வந்து
இனந்தெரியா பயமேற்படுத்தும்
இரவுநேரத் தொழுகை ஒலி..

மேளக்காரன் கைகள் போல
விரலுக்கொன்றாய் மாட்டி
கடித்து ருசிபார்த்த அப்பளப்பூக்கள்..

விடுமுறையில் வரும் உறவுகளுடன்
முதல்நாள் ஒட்ட மறுத்து
கடைசிநாள் பிரிய மறுக்கும் அழுகை..

இன்னும்.. இன்னும்..

அடுக்குமாடிக் குடியிருப்பின் ஓர் அறைக்குள்
தூக்கம் வராமல் நான் புரண்டு படுக்கையிலெல்லாம்
இந்த பழைய ஞாபகங்கள் தான் வந்து
தாலாட்டிப் போகின்றன



(இது என் ஆரம்பகால கவிதைகளுள் ஒன்று)
 
 
.

2 comments:

  1. ஞாபகங்கள் அருமை. கவி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பள்ளிக்கு சென்ற மாட்டுவண்டி..
    அடிக்கடி தொலைத்த பாட்ஜ்
    ஆச்சியுடன் பால்பண்ணை பயணம்..
    தொடையில் அடித்து பாடம் சொல்லித்தர சீப்பு..
    வெள்ளையடிக்கும் பொது பழைய புகைப்படங்கள்..
    செய்திகள் வாசிக்கப் போவது ஆணா பெண்ணா
    விரலுக்கொன்றாய் மாட்டிய அப்பளப்பூக்கள்..

    எனக்கும் இந்த நியாபகங்கள் எல்லாம் !!!!

    ReplyDelete