Saturday, July 31, 2010

மீசை (சிறுகதை)


                 
                  அகிலனுக்கு வெளியே தலைகாட்ட முடியவில்லை. ஏதோ பெரிய அவப்பேரோ, கடன் தொல்லையோ என்றெல்லாம் நினைக்க வேண்டாம். பிரச்சனை இரண்டு அங்குல மீசை தான்.

                  இன்று காலை ஷேவிங் செய்யும் போது, திடீரென ஒரு எண்ணம்.. ‘மீசையில்லாவிட்டால் எப்படியிருப்பேன்’ கண்களை மேலே உயர்த்தி நினைத்துப் பார்த்தான். மாதவன், ஷாருக்கான், சச்சின், ஏ.ஆர்.ரஹ்மான், என ஆரம்பித்து அப்துல்கலாம் வரை நினைவிற்கு வரவே, ஒரு வினாடி சிலிர்த்துப் போய் கொஞ்சமும் யோசிக்காமல் மீசையை எடுத்துவிட்டான்.

                 ஆனால் மீசையின்றி இருந்த அகிலனைப் பார்த்த ஒருவரது ரியாக்ஷனும் அவ்வளவு சொல்லிக் கொள்வது போல் இல்லை.

                அம்மா, “என்னடா இது கண்றாவி” என்றாள். அப்பா எதுவும் சொல்லாமல் தலையிலடித்துக் கொண்டார். அப்படியே திரும்பி அருகில் விளையாடிக் கொண்டிருந்த அக்காவின் இரண்டு வயதுக் குழந்தையை பார்த்து அசட்டுத்தனமாய் சிரிக்க, அது மிரண்டு போய் கையிலிருந்த பொம்மையை கீழே போட்டுவிட்டு தன் அம்மாவை நோக்கி பாய்ந்தது. அக்கா அவளைத தூக்கிக் கொண்டு இவனைப் பார்த்து, “உனக்கு என்னாச்சு, எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்.. எந்த பொண்ணு சொன்னானு இப்படி கோபுர வாசலிலே கார்த்திக் மாதிரி மீசைய எடுத்திருக்க” என்றாள்..

                “நல்லாயில்ல..?”

                “கருத்து சொல்ல விரும்பல” என்றாள் அனுபவ அரசியல்வாதி போல்..

               ஆனால் அவன் நண்பன் பார்த்தி என்ற பார்த்தசாரதி கருத்து சொன்னான். சொன்ன கருத்து தான் வெளியே சொல்லமுடியாதபடி  இருந்தது. அதைக் கேட்ட அகிலனுக்கு ஏன்டா மீசையை எடுத்தோமென்று ஆகிவிட்டது. இப்படியே காலேஜிற்குப் போனால் என்னவாகும் என்று நினைத்தவனுக்கு 2012 அழியப் போவதாய் சொல்லும் உலகம் இப்போதே அழியக்கூடாதா என்று தோன்றியது... 

                   பழைய மாதிரி வளர்வதற்கு எப்படியும் ஒரு வாரமாவது ஆகும். அதுவரை காலேஜ் போகாமலிருப்பதென்பதும் முடியாது. பிராக்டிகல்ஸ் வேறு நெருங்குகிறது.. என்ற நிர்பந்தத்தில் காலேஜிற்குப் போக பைக்கில் ஏறி உட்கார்ந்தவனின் குறுக்கே, ஒரு பூனை கடந்து போனது. போய்க் கொண்டிருந்த பூனை நின்று இவனை ஒருமுறை உற்றுப் பார்த்தது. இவனும் உற்றுப்பார்க்க, அது தன் வலது காலைத்தூக்கி தனது மீசையை தடவி விட்டுக் கொண்டு ‘மியாவ்’ என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டு சென்றது. இவனுக்கு அது தன்னைக் கிண்டல் பண்ணுவதாய் தோன்ற, கோபத்தில் பைக்கின் கிக்கரை உதைத்துக் கிளப்பினான்.

                    வழியில் ஒருவர் மொட்டை போட்டு தலையில் தொப்பி வைத்தபடி இவனைக்கடந்து போனார். ‘இவரை மாதிரி தலைய ஷேவிங் பண்ணிருந்தாலாவது இந்த மாதிரி தொப்பி வச்சு மறைக்கலாம். முகத்தை எப்படி...? ஒட்டுமீசை.. ம்கூம்.. அதுசரிப்படாது. காட்டிக் கொடுத்துட்டா ரொம்ப கேவலமாயிடும்..” என்று புலம்பியபடியே பைக்கை ஒருவர் மேல் விடப்போய் கடைசி வினாடியில் பிரேக்கடித்து திட்டுவாங்கி கட்டிக் கொண்டான்.

                ரோட்டில் போகிறவர்களெல்லாம் தன்னையே உற்றுப் பார்ப்பது போலிருந்தது. யாரேனும் சிரித்தால் தன் மீசையில்லா முகத்தைப் பார்த்தே சிரிப்பது போலிருந்தது.

                 காலேஜில் கேட்கவே வேண்டாம். எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொண்டு கை தட்டி, ‘கொக்கர கோழி கூவுறவேளை.. ராசாதிராசன் வாரண்டி புள்ள’ என்று பாட்டுப் பாட அவன் மழுப்பலாய்ச் சிரித்துக் கொண்டே, “ஷேவ் பண்ணும் போது.. பை மிஸ்ட்டேக்கா..” என எத்தனையோ காரணங்களைச் சொன்னாலும், உள்ளுக்குள் பயங்கரமாய் கத்திக் கொண்டிருந்தான். அவனால் ‘மயிரே போச்சு’ என்று இருக்க முடியவில்லை.

                 அன்று சுவாலஜி புரொபசர் கரப்பான்பூச்சி படம் வரைந்து பாடமெடுத்துக் கொண்டிருக்க அவனோ அதற்கிருக்கும் பெரிய மீசையை மட்டுமே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

                  இனி யாராவது தன் மீசை சமாத்தாரத்தைப் பற்றிக் கேட்டால் அவர்களை கொலையே பண்ணிவிடும் அளவிற்கு வாழ்க்கையே வெறுத்துப் போய் வந்து கொண்டிருந்தவன் முன்னே வந்து நின்றாள் சுபஜா.

                 சுபஜாவும், இவனும் இதுவரை ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமல் (காதல் பற்றி..) உள்ளுக்குள்ளேயே லவ் பண்ணுகிறார்கள்..

                ‘இவள் மட்டும் இப்போது தன் முகத்தைப் பார்த்தால்..’ நினைத்தவனுக்கு வயிற்றில் சுனாமி பாய்வது போலிருந்தது. முகத்தை மூடிக் கொண்டு வேறு பக்கம் நோக்கி நடக்க முயன்றவனை அவள் குரல் தடுத்து நிறுத்தியது.

               “அகில்..”

              “ம்..” என்றான் மூக்கைத் தடவுவது போல் பாவனை செய்து மறைத்துக் கொண்டு..

              “ உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்னு ரொம்ப நாளா..” வெட்கத்தில் குனிந்து சொல்லிக் கொண்டிருந்தவள் அவன் முகத்தைப் பார்த்து நிறுத்திவிட்டு, “ஹேய்.. உங்க கைய எடுஙக்” என்றாள்

                அவனும் வேறு வழியின்றி மழுப்பலாய் சிரித்துக் கொண்டே கையை எடுத்தான்.

                “ வாவ்.. மீசையை எடுத்துட்டீங்களா. ஸோ.. நைஸ்.. இப்போ நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா?”

                “ நிஜமாவா?”

                “ ம்... நிஜ்ஜம்மா..”

                “எவ்ளோ...?”

                “ என்னை மாதிரி ஒரு சுமாரான  பொன்னு லவ் பண்ணுற அளவுக்கு..”

                இவன் ஆச்சரியமாய், “நிஜமாவே.. நிஜமாவா?” என்றான்

                “ம்.. ம்.. என்றாள் வெட்கத்தில் தலையைக் கவிழ்த்து சிரித்துக் கொண்டே..

                 அகிலன் மகிழ்ச்சி தாளாமல் “நீங்களும் தான்” என்றான்

                 “என்ன?”
 
                 “மீசையில்லாம ரொம்ப அழகாயிருக்கீங்க”

                 அவள் ‘க்ளுக்’கென சிரித்தாள்.




.

3 comments:

  1. நிஜமாகவே அருமை..

    நீரில் செல்வது போல தடங்கள் இல்லாமல் ஹாப்பி என்டிங் வேறு.

    வாழ்த்துகள்.

    http://sagotharan.wordpress.com

    ReplyDelete
  2. Nice story.
    Meera

    ReplyDelete