Monday, July 19, 2010

சுவாஸம் தேடும் வாசம் (கவிதை)

வாசனைகள் தீராதிருக்க ஏதேனும் வழியுள்ளதா
இருந்தால் சொல்லுங்கள்

சேமிக்க நிறையவுள்ளது என்னிடம்
என் இதயப் பெட்டிக்குள் அவை இற்றுப் போகின்றன

அனைத்தும் மெல்லியவை
அடிக்கடி எடுத்து அனுபவிக்க வேண்டியவை

முகம் புதைத்துப் படுத்த
அம்மாவின் புடவை வாசனை..

வீட்டில் நட்டு வளர்த்த ரோஜாவின்
முதல் மொட்டு விரிந்த வாசனை..

வேலை முடித்து வரும் அப்பாவின்
தோளில் சாய்கையில் வீசும் வியர்வை வாசனை..

பள்ளிப்பருவ நோட்டுப் புத்தகத்தில்
பக்கம் பக்கமாய் நுகர்ந்த வாசனை..

படித்து முடித்து பரணில் போட்ட
பழைய புத்தக வாசனை..

அடிக்கடி திறந்து அந்தரங்கங்களை
அசைபோட்டுப் பார்க்கும் அலமாரி வாசனை..

முதல் மோகத்தின் போது
மூளை தொட்ட முத்த வாசனை..

முடிந்தால் காற்றை நிறுத்தி விடுங்கள்
அதுதான் என் முதல் எதிரி

கொஞ்ச காலத்திற்குத் தான்
என் மூச்சுக் காற்று நிற்கும் வரை.



.

2 comments:

  1. வாழ்த்தகள் நண்பரே நல்ல பதிவு நிறைய எழுதுங்கள்

    ReplyDelete
  2. //முதல் மோகத்தின் போது
    மூளை தொட்ட முத்த வாசனை..//

    ரசித்த வரிகள்..

    ReplyDelete