Wednesday, August 4, 2010

பறத்தல் (சிறுகதை)

              
                      நடராஜ்க்கு கடந்த ஒரு மாதத்திற்குள் மூன்று, நான்கு முறை இந்த கனவு வந்துவிட்டது. கனவில் அவர் மேலே ஃபேன் ஓடுவதை  பார்த்தவாறு படுத்திருக்கிறார். திடீரென தன்னை லேசாய் உணர்கிறார். மெதுவாய்.. காற்றில் எழும்பி மூன்றடி உயரத்தில்... அந்தரத்தில் மிதக்கிறார். பின் வாசல் பக்கமாய் பார்த்து வளைந்து மெது மெதுவாய் கைகளை மேலும் கீழும் அசைத்து பறந்து செல்கிறார். திடுக்கிட்டு கனவு கலைந்து விழித்துப் பார்த்தால் கீழே படுக்கையில் கிடக்கிறார்.

                    அந்த கனவின் தாக்கமோ என்னவோ நடராஜ் இப்போது உறுதியாக நம்ப ஆரம்பித்து விட்டார்.. தன்னால் நிச்சயம் பறக்க முடியுமென்று. அதுவும் கடைசி முறை தான் கண்டது கனவல்ல நிஜமாகவே பறந்ததாக நம்புகிறார்.

                    அன்று ஆபிஸிற்கு லீவு போட்டு விட்டு தான் வழக்கமாய் படுக்கும் அதே இடத்தில் தலையணை போர்வை சகிதமாய் படுத்துவிட்டார். வீட்டில் மனைவி மட்டும் தான் இருந்தாள். பிள்ளைகள் ஸ்கூலுக்கு போய்விட்டிருந்தார்கள். ‘இன்று எப்படியும் பறந்தே தீருவது’ என மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டார். அறைக்குள் வெளிச்சம் அதிகமாய் இருக்கவே எழுந்து போய் சன்னல்களை மூடி இருட்டை உண்டாக்கினார். மறுபடியும் வந்து இழுத்து மூடி படுத்துக் கொண்டவரை அறையின் கதவு திறக்கும் ஓசை விழித்துப் பார்க்கச் செய்தது. வாசலில் மனைவி நின்றிருந்தாள்.

                       “உடம்புக்கு ஏதாச்சும் முடியலையா?”

                       “அதெல்லாம் ஒன்னுமில்ல..”

                       “பிறகு படுத்திருக்கீங்க”

                       “ உடம்புக்கு முடியலைனாதான் படுக்கனுமா? என்னைய கொஞ்ச நேரத்துக்கு தொந்தரவு பண்ணாத“

                      அவள் எதுவும் பேசாமல் கதவை மூடிவிட்டு சென்றுவிட்டாள்.

                      ‘கடைசி முறை நான் கண்டிப்பா பறந்தேன்.... பறந்திருப்பேன். கண்டிப்பா ஒரு அடி உயரமாது இருக்கும்.. மிதக்குறேன். அப்போ பார்க்க யாரோ சனியன் மாதிரி வந்து கத்தி எழுப்பி... எழுப்பி இல்ல.. அது.. அத.. எப்படி சொல்லுறது... ஆனா சத்தியமா பறந்தேன். என்னல பறக்க முடியும்.. பறந்திடுவேன். 

                       குப்புறவாக்கில் படுத்து போர்வையை முழுவதுமாய் போர்த்திக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டார்.

                     ‘இன்னும் கொஞ்ச நேரத்தல் பறந்துவிடலாம்..’

                    அமைதியாக காத்திருந்தார். சிறிது நேரம் கழிந்தது. எந்த மாற்றமும் இல்லை.

                    ‘இன்னும் ஏன் பறக்க ஆரம்பிக்கவில்லை.?’

                    புரண்டு படுத்து போர்வையை விலக்கி பார்த்தார்.

                    ‘ஓ.. இது தான் காரணமா? வேற போர்வை இது. அன்னிக்கு நான் போர்த்தியிருந்த போர்வைய எங்க?’ எழுந்தவர் நேராக சமையலறைக்கு வந்தார்.

                   “லஷ்மி... லஷ்மி...”

                   “என்ன..?”

                   “அந்த ப்ளு போர்வைய எங்க?”

                  “ அதுவா.. அழுக்கா இருக்கேனு துவைக்க எடுத்துப் போட்டிருக்கேன். வேற போர்வை எடுத்து வச்சிருக்கேன் பாருங்க”

                  “ ஊற வச்சுட்டியா?”

                 “ இல்ல.. ஊற வைக்க எடுத்துப் போட்டிருக்கேன்”

                 “எங்க?”

                 “ அது ரொம்ப அழுக்கு..”

                 “ எங்....க?”

                 “ சோபா மேல இருக்கு”

மனதிற்குள் ஏதோ முணுமுணுத்தபடி கொதிக்கும் சாம்பாரில் கவனத்தை திருப்பினாள்.
            
                  போர்வையொடு வந்தவர் மீண்டும் படுத்து உடலில் ஒரு பாகமும் தெரியாத அளவு போர்த்திக் கொண்டு கண்களை மூடிக்கொண்டார்.

                   ‘இப்போது பிரச்சனையில்லை.. பறந்து விடலாம்’

                   சிறிது நேரம் காத்திருந்தார்.

                  ‘ இன்னும் பறக்கலையே.. முதல்ல பறக்கனும்னா தூக்கம் வரணும். அப்போ தான் பறக்க முடியும்னு நினைக்கேன். தூக்கம் வர என்ன செய்யலாம்..? ஒன்னு, ரெண்டு எண்ணுனா தூக்கம் வரும்னு சொல்லுவாங்க. முன்னயெல்லாம்.. மயக்க மருந்து கண்டுபிடிக்கிறதுக்கு முன்னனு நினைக்கேன், ஆஸ்பிடல்ல ஒருத்தன மயக்கத்துக்கு கொண்டு போக அவன சாய்ச்சு படுக்க வச்சு அவனுக்கு முன்னால ஒரு டாலரையோ ஏதோ ஒன்ன செயின்ல கட்டி ஆட்டுவாங்களாம். அப்படி ஆட்டும் போது... அவனை, அதை பார்த்துகிட்டே ஒன்னு, ரெண்டு சொல்லச் சொல்லுவாங்களாம். எல்லாரும் எப்படியும் நூறு எண்ணுறதுக்குள்ள ஏன் அதுக்கு முன்னாலேயே மயக்கமாயிடுவாங்களாம். அது அவங்க அவங்க மனச பொறுத்தது. சிலர் கொஞ்சம் அதிகமாகவும் எண்ணிட்டிருப்பாங்களாம். இப்படித்தான் ஒருத்தன உட்காரவச்சு ஒரு டாக்டர் முன்னால இருந்து செயின ஆட்டிகிட்டே இருந்தாராம். அவன் ஒன்னு, ரெண்டு சொல்லிகிட்டு இருந்தானாம். ரொம்ப நேரம் ஆயிடுச்சாம்.. டாக்டர் தூங்கி போயிட்டார். அவன் எண்ணிக்கிட்டே இருந்தானாம். இருபத்தி மூனு லட்சத்து அறுபத்தாராயிரத்து நானுத்தி எழுபத்தெட்டு.. இருபத்தி மூனு லட்சத்து அறுபத்தாராயிரத்து நானுத்தி எழுபத்தொன்பது.. இருபத்தி மூனு லட்சத்து...’

                     அவர் உள்ளுக்குள் லேசாய் சிரித்துக் கொண்டார்.

                    ‘சரி இப்போ நாம என்ன செய்யலாம். கடிகார சத்தத்தை கேட்டுகிட்டே இருந்தாலும் தூக்கம் வரும்னு சொல்லுவாங்க. இத செய்யலாம்.. இந்த ரூம்லயே ஒரு வால்கிளாக் இருக்கே.. அது சத்தத்தை கேட்கலாம்.’

                   காதை கூர்மையாக தீட்டிக் கொண்டு கவனமாகக் கேட்டார். எந்த சப்தமும் இல்லை. லேசாய் கேட்பது போல் இருந்தது. பின் நின்று விட்டது. பின் கேட்டது. இன்னும் கவனமாக கேட்க ஆரம்பித்தவர் காதில் சீறிப் புறப்படும் தீபாவளி ராக்கெட் போல் குக்கரின் விசில் சப்தம் பாய்ந்தது. திடுக்கிட்டு விழித்தார். கோபம் முட்டிக்கொண்டு வந்தது. போர்வையை எடுத்து விசிறியடித்து விட்டு எழுந்து உட்கார்ந்தார். விசில் சத்தம் நிற்கும் வரை காதை இரு கைகளாலும் மூடிக்கொண்டார். நின்றதும் எழுந்து வேகமாய் சமையலறையை நோக்கி நடந்தார். அங்கு அவர் மனைவி இல்லாது போகவே,

                     “லஷ்மி... லஷ்.......மி” என்று கத்தினார்..

                     “என்னங்க... என்னாச்சு” என்றபடி கையில் சோப்பு நுரையோடு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள்...

                    “குக்கரை இங்க வச்சுட்டு அங்க என்ன பண்ணுற?”

                    “ துணிய ஊர வச்சிட்டிருந்தேன். ஏன் என்னாச்சு?”

                    “ ஏன் இப்படி ஊரை கூட்டுற மாதிரி சத்தம் போடுது?” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அடுத்த விசில்  அடிக்க ஆரம்பித்தது. மறுபடியும் காதை மூடிக்கொண்டார். விசில் நின்றதும்.. “இதோ.. இப்படி.” என்றார்.

                     “எப்பவும்  போலத் தான் அடிக்குது”

                    “ எப்பவும் போலத் தான் அடிக்குது. ஆனா.. அத நிறுத்து. எரிச்சலா இருக்கு.”

                    “ஏன்... இன்னிக்கு உங்களுக்கு என்னாச்சு? காலையில இருந்தே..” அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் இடைமறித்து,
                   
                   “சும்மா, சும்மா கேள்வி கேட்காத. நிறுத்துனா.. நிறுத்து”

                   “இன்னும் ஒரு விசில் அடிக்க வேண்டி இருக்கு அடிச்சிரட்டும்”

                   “அதெல்லாம் முடியாது. இன்னும் ரெண்டு, மூனு மணி நேரத்துக்கு எந்த சத்தமும் கேட்கக் கூடாது அவ்வளவு தான்..” என்றபடியே உள்ளே சென்றவர் மறுபடியும் திரும்பி வந்து, “அப்புறம்.. ஊற வச்சிருக்கிற துணிய ‘டொம்.. டொம்’னு அடிச்சு துவைக்குறேன் பேர்வழினு உயிர வாங்காத.. சத்தம் வரக்கூடாது சொல்லிட்டேன்” என்றபடி திரும்பிச் செல்ல முயல்கையில் அடுத்த விசில் அடிக்க ஆரம்பித்தது. திரும்பிப் பார்த்து முறைத்தார்.

                    “முடிஞ்சிருச்சு.. முடிஞ்சிருச்சு..” என்று சத்தமாய் சொல்லிவிட்டு ‘என்னாச்சு இன்னிக்கு இந்த மனுஷனுக்கு’ என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு ஸ்டவ்வை அணைத்தாள்..

                    வந்து படத்தவருக்கு மனதினுள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். திருப்தி. எவ்வளவு பெரிய காரியத்தை செய்யப் போறோம். இதுவரை யாரும் செய்யாத சாதனைய.. சில ஞானிகள் பறந்ததா சொல்லுவாங்க.. யாரு பாத்திருக்கா..? நான் மட்டும் பறக்க ஆரம்பிச்சுட்டேன்னா என் பேரை வரலாற்றுல எழுதுவாங்க. இந்த மாதிரி.. நடராஜ் என்பவர் தான் மனித குலத்திலேயே முதன் முதலில் பறக்கும் சக்தி பெற்றிருந்தார்னு.. அப்போ இவ பேரை கூட எழுதுவாங்க. இவருக்கு லஷ்மினு அவரை புரிந்து கொள்ளாத ஒரு மனைவி இருந்தாள்னு. இந்த மாதிரி தான் ஐன்ஸ்டீனுக்கு கூட அவர புரிஞ்சுக்காத மனைவி வாய்ச்சுதாம். அவருக்கு மட்டுமில்ல நிறைய புத்திசாலிங்களுக்கு இப்படித்தான். அட அந்த கதையெல்லாம் நமக்கு எதுக்கு நாம ஆக வேண்டிய கதைய பார்ப்போம்.

                  மறுபடியும் போர்வையையும், கண்களையும் இறுக மூடிக்கொண்ட அப்படியே ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். சிறிது நேரத்தில் லேசாய் தூக்கம் வருவது போல் இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். திடீரென அவருக்கு மேலே எழுவதாய் தோன்றியது. அந்தரத்தில் மிதந்தார். போர்வையேதும் விலகவில்லை. ஆனால் அவர் மட்டும் அப்படியே அந்தரத்தில் மிதந்தார். இப்போது அவராலேயே அவரது போர்வை மூடியிருக்கும் உடலை பார்க்க முடிந்தது. அவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ‘கடைசியாய் நான் நினைத்தது நடந்துவிட்டது’ அப்போது சொன்னால் யாரும் நம்பியிருப்பார்களா..? இப்போது நம்பி தான் ஆகவேண்டும்.. ’ இன்னும் கொஞ்சம் மேலே எழும்பி அந்த அறையை ஒரு சுற்று சுற்றி வந்தார். அவருக்கு தனது உடலை ஒரு பஞ்சை விட மென்மையாய் உணர்ந்தார். இனி யார் தடுத்தாலும் நான் பறப்பதை நிறுத்த முடியாது. உடனே தனது மனைவியை கூப்பிட்டு காட்ட வேண்டும் என விரும்பியவர்,

                    “லஷ்மி.. லஷ்மி.. ” என்றார்

                      எந்த பதிலும் இல்லை. ‘நாம் ஏன் இங்கிருந்து கத்துவானேன்.. நேரடியாக பறந்து போய் அவள் முன்னால் நிற்கலாம்’ என நினைத்த போது கதவை திறந்து கொண்டு லஷ்மி உள்ளே வந்தாள். மேலே மிதந்து கொண்டிருந்த அவரை அவள் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. மெதுவாய் கீழே இருக்கும் உடலை அங்கங்கு தொட்டுப் பார்த்தாள். இவர் இறங்கி வந்து அவளது எதிரில் போய் நின்றார். அவள் கவனித்த மாதிரி தெரியவில்லை. மறுபடியும் கொஞ்சமாய் “என்னங்க.. என்னங்க..” என்று சொல்லி உடலை அப்படியும் இப்படியுமாய் அசைத்து, மூக்கிலும், நெஞ்சிலும்... கையையும், காதையும்  வைத்துப் பார்த்துவிட்டு கதறி அழ ஆரம்பித்தாள்..

                   “ஐயோ.. என்னை இப்படி தனியா விட்டுட்டு போயிட்டீங்களே”     

                  



(உங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவுசெய்யவும்..)



.

Tuesday, August 3, 2010

ஓஷோவின் 'F**k வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை

               கடந்த இரண்டு போஸ்ட்களான ‘அழுகை’, மற்றும் ‘முகம்’ சிறுகதைகளில் கொஞ்சம் ஃபீலிங் ஆன வாசகர்களை ‘குஷி’படுத்தவே இந்த போஸ்ட்.. Enjoy..

               ஓஷோ தனது சொற்பொழிவில் எவ்வளவோ விஷயங்களை சொல்லியிருக்கிறார். அதில் ஒரு முறை ஒரு சிஷயர் ”குருவே நீங்கள் பேசும் போது சர்வ சாதாரணமாக ”Fuck" என்ற வார்த்தையை உபயோகிக்கிறீர்கள். அது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்று சொல்ல, அதற்கு அவர்.. ”இந்த 'Fuck' என்னும் வார்த்தை மிகவும் அதிசமான, ஆச்சரியமான, அழகான வார்த்தை. இது ஒரே வார்த்தையாக இருந்தாலும் பல இடங்களில், பல அர்த்தங்களை தருகிறது” என்று சொல்லி அது உபயோகிக்கப்படும் இடங்களையும் அதற்கான பொருளையும் சொல்லியிருப்பார்.
                       அப்படியொரு தெய்வீகமான(?) வார்த்தைக்கு இணையான வார்த்தை தமிழில் இருக்கிறதா என்று பார்த்ததில்.. ஆச்சரியம்.. ஆம் இருக்கிறது. நாமும் அப்படி ஒரு ஈடு இணையற்ற வார்த்தை அதற்கு சற்றும் குறைவில்லாத புகழுடைய வார்த்தை ஒன்றை உபயோகித்து வருகிறோம். அந்த வார்த்தையை உபயோகிக்கும் இடங்களையும், அர்த்தத்தையும் கீழே பகிர்ந்துள்ளேன். வயது வந்தவர்கள் படிக்கவும்.. வராதவர்கள், இதே Blogல் ‘கிஸ்-ஓ-தெரப்பி’ என்ற பகுதி ஒன்று உள்ளது. அதைப்படித்துவிட்டு வரவும். அல்லது வயசுக்கு வந்தபின் படிக்கவும்.


அந்த அதிசய வார்த்தை.. (ஓ)த்தா..

இனி வாக்கியங்களும் அது பயின்றுவரும் இடங்களும்..


திட்டுதல் (கோபப்படுதல்) - உன்கென்ன? ...த்தானு போயிருவ.. நாங்க தான இங்க இருக்கனும்..
அறியாமை - த்தா.. தெரியாம போச்சேடா..
கவலை - இப்படியே நஷ்டத்துல கடைய நடத்துனா.. ...த்தானு போக வேண்டியது தான்.
சண்டையை ஆரம்பித்தல் - த்தா.. அடிச்சிருவியா நீ..

கடினமான தன்மை (தடை) - நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன்.. அசைக்க கூட முடியல.. த்தானு இருக்கு.. எப்படியும் 100 கிலோ இருக்கும்.

தகுதியற்ற நிலை (லாயக்கில்லாத) - அவன்ல்லாம் கத்திய எடுத்துட்டு முன்ன நிக்கான் மாமா... எனக்கு ..த்தானு இருந்துச்சு..
ஏமாற்றம் - 20 கி.மீ. கூட குடுக்காத பைக்க 50 கி.மீ. போகும்னு சொல்லி ..த்தா என்கிட்ட ?ழு ?த்துட்டான்டா..

நம்ப முடியாத நிலை - அவள அங்க வச்சு பார்த்ததும் ..த்தானு ஆயிடுச்சு..
அனுபவித்தல் - மச்சான், நேத்து சில்ரன்ஸ் பார்க்ல வச்சு ஒரு கிஸ் குடுத்தா பாரு.. ...த்தானு இருந்துச்சு..
வேண்டி கேட்டல் - மாப்ள... த்தா.. 500 ரூபா தானடா கேக்கேன்.. குடுறா
பகைமை - நீ ஒண்டிக்கு ஒண்டி வா.. ...த்தா பாத்துறலாம்டா
வாழ்த்துதல் - டே.. புதுமாப்ள.. கோட்டு, சூட்டுல ...த்தானு.. இருக்கடா

பொறுப்பில்லாத தன்மை (அக்கறையில்லாத) - சொன்னத கேக்கலனா என்ன பண்றது. ..த்தானு போக வேண்டியது தான்..
மனச்சங்கடம் (கவலை) - எல்லாத்துக்கும் காசு.. ...த்தானு இருக்கு.. வாழ்க்கையா இது. த்தூ..
புதிய மாறுதல் உண்டாக்கு - என்னவோ தூக்க முடியாதுன்ன ..த்தானு முடிச்சோம்ல
ஆச்சரியப்படுதல் - ஈபில் டவர் மேல ஏறி நின்னு கீழ ஊர பார்க்குறேன்.. ...த்தானு இருக்கு.. யப்பா...!


தமிழ்னா சும்மாவா.. செம்மொழியாயான.. தமிழ்மொழியேயேயேயே....



.

Monday, August 2, 2010

முகம் (சிறுகதை)

               
                    ராமநாதன் உட்கார்ந்திருந்த சோபாவின் எதிரே டிப்பாயில் இருந்த ஹிண்டு பேப்பரை பெயருக்குக்கூட புரட்டவில்லை. டாக்டர் சோலைராஜ் பெயருக்குப் பின்னால் பெயரைவிட பெரிதாய் படித்த டிகிரிகள். மொத்தத்தில் அவர் ஒரு சைக்கியாட்ரிஸ்ட். அவருக்குச் சொந்தமான க்ளினீக்கில் தான் ராமநாதன் கடந்த 32.. இதோட 33 நிமிடங்களாக இருக்கிறார். மணி மதியம் மூன்றை தொடவிருந்தது. இவருக்கு அடுத்து வந்த ஒருவர், இவரிடம் அனுமதி கேட்காமலேயே இவருக்கு முன் டாக்டரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தார். இப்போது அந்த க்ளினிக்கின் உதவியாளர் ராமநாதன் முன் வந்து நின்று தலையைச் சொறிந்து கொண்டே ஆரம்பித்தார்..
                   “சார் இவங்களுக்கு கொஞ்சம் அர்ஜெண்டா போகனுமாம். குழந்தை வேற வச்சிருக்காங்க. அதுவும் வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்கா.. அதான்... அவங்க முதல்ல டாக்டர பாத்துட்டு...” என்று இழுத்தார்.

                    ஏதோ சொல்லவந்தவர்... “ம்..“ என்றார்.

                    “தேங்க்ஸ் சார்.. அடுத்து நீங்க தான்” என்றவாரே அவளிடம் சென்றார். ஏதோ அவளிடம் சொல்ல அவள் டாக்டரின் அறைக்குள் சென்றுவிட்டாள். 8 நமிடங்களுக்கு பின்னர் அவள் வெளிவர உதவியாளர் உள்ளே சென்றார்.

                   “இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?” என்றார் டாக்டர்.

                   “மூனு பேர்..”

                  “மூனு பேரா” என்றவாரே வெளியே பார்த்தார். கதவிடுக்கின் வழியே ராமநாதன் முகம் தெரிந்தது. என்ன நினைத்தாரோ, “சரி கொஞ்ச நேரம் அவங்க வெயிட் பண்ணட்டும். அடுத்து ஆள் வந்துட்டேதான் இருப்பாங்க. அதுக்குள்ள நான் என்னோட ‘லஞ்ச்’ச முடிச்சிடுறே என்ன?” என்றார் மெலிதாய் சிரித்தவாரே..

                       ஏதோ சொல்ல வாயெடுத்தவர் ராமநாதன் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு “சரி டாக்டர்” என்றார்.

                       9 நிமிடத்திற்குப் பின் சாப்பிட்டு முடித்தார் டாக்டர். ராமநாதன் உள்ளே அழைக்கப்பட்டு டாக்டரின் எதிரே உட்கார வைக்கப்பட்டிருந்தார்.

                      “சொல்லுங்க” என டாக்டர் சொன்னது தான் தாமதம்..

                      தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளக் கூட தோன்றாமல் படபடவென பேச்சை ஆரம்பித்தார்.

                     “டாக்டர் என்னையப் பார்த்தா எல்லாருக்கும் என்ன தோணுமோ தெரியல. கடையில போய் ஏதாவது வாங்கப் போனா எல்லாருக்கும் கொடுத்துட்டு கடைசியில தான் எனக்குக் கொடுக்குறான். நான் என்னவோ ஓசியில வாங்கற மாதிரி. கோவிலுக்குப் போனா அர்ச்சகர் கூட்டத்துல எனக்கு மட்டும் பிரசாதம் தரமாட்டார். இல்லைனா கொஞ்சமா, அதுவும் கடைசியில ஏதோ வேண்டா வெறுப்பா தருவார். ஆபிஸ்ல ஸ்டாப் யாருக்காவது கல்யாணம், பங்ஷன்னா என்ன கிப்ட் வாங்குறதுனு என்னைய கலந்துக்காமலேயே எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்துடுவாங்க. வீட்டுல என் குழந்தைங்க கூட எதுனாலும் என் வொய்பத் தான் கேட்ட முடிவெடுக்கிறாங்க. என்னைய ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்ல. என் முகத்தை பார்த்தா அவங்களுக்கு என்ன தோணுமோ தெரியல.. இதுக்கு என்ன டாக்டர் காரணம்?” என்றார் உடைந்த குரலில்.

                     கொஞ்ச நேரத்திற்கு முன் கதவிடுக்கின் வழியே இந்த ராமநாதனின் முகத்தைப் பார்த்த காட்சி டாக்டரின் நினைவுக்கு ஏனோ வந்தது.



.

அழுகை (சிறுகதை)

                 நான் செத்துட்டேன்கிறத என்னால நம்ப முடியல. ஆனா எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. என்னைய எங்க வீட்டுக்கு முன்னால இருக்கிற திண்ணையில படுக்க வச்சு கால் பெருவிரலை சேர்த்துக் கட்டி, சந்தனம் பூசி, செண்டெல்லாம் தெளிச்சு – இந்த செண்ட் இருக்கே.. மட்டமான வாடை அடிக்கும். செத்தவங்களுக்குனே தனியா விக்கிறாங்க.. விலை கொறைச்சலா. கட்டை பாஸ்கரோட மாமா செத்தப்போ அவருக்கும் கூட இதே செண்ட்தான் போட்டாங்க. ரொம்ப காட்டமா இருக்கும். பத்தி கொளுத்தி, மாலை போட்டு, ஒரு விளக்கும் ஏத்தி வச்சிருக்காங்க.


                 என்னைய சுத்தி உட்கார்ந்துகிட்டு இந்த பொம்பளைங்க ஏன்தான் இப்படி அழுதுட்டு இருக்காங்களோ தெரியல. அதுலையும் நாலாவது வீட்டுல இருக்கிற கிழவி ஒப்பாரின்ற பேர்ல காது பக்கத்துல வந்து கத்துற கத்து இருக்கே.. நல்லவேளை நான் உயிரோட இல்ல. இல்லைன்னா இந்நேரம் என் காது கிழிஞ்சிருக்கும். ரெண்டு நாளைக்கு முன்னால நான் தெருவுல கிரிக்கெட் விளையாண்டப்போ ‘லெக்’ சைடுல நான் அடிச்ச பந்து நேரா போயி இவ ‘லெக்’ல பட்டிருச்சு. அதுக்கு என்னலாம் திட்டுனா, எப்படியெல்லாம் சண்டை போட்டா.. இப்ப என்னனா.. “ரெண்டு நாளைக்கு முன்ன கூட சிரிச்சு, சிரிச்சு பேசுனானே”னு வாய் கூசாம பொய் சொல்றாளே... ‘ஒப்பாரி வைக்கும் போது கூட உண்மை பேச மாட்டாங்க போல. செத்தவன் எந்திரிச்சு வந்து சொல்ல மாட்டான்ற தைரியம்.’

                    என் கால்மாட்டுல உட்காந்து அழுதழுது முகம் சிவந்து, வீங்கிப் போயிருந்த அம்மாவ பார்க்க பாவமா இருக்குது. என் மேல அவளுக்கு ரொம்ப பிரியம். நான் எது கேட்டாலும் வாங்கித்தருவா. நேத்து நைட்டுல இருந்து அம்மா பட்டினி. இன்னிக்கு காலையிலேயும் எதுவுமே சாப்பிடல. அவ பாதிநாள் இப்படித்தான் இருக்கா...

                   எல்லாரும் சாப்பிட்ட பிறகு கடைசியா ஏதோ பேருக்கு சாப்பிடுவா.. நானும் அப்பாவும் இட்லி, தோசைனு சாப்பிட, அவளுக்கு எங்கயிருந்துதான் கிடைக்குமோ பாழாப் போன பழைய சோறு. “எம்மா.. தோசைக்கு கூட கொஞ்சம் போட்டு அரைக்கலாம்ல”னு கேட்டா, “மிஞ்சிப் போனா உங்க அப்பாகிட்ட யாரு வாங்கிக் கட்டிக்கிறது.. அதுவும் போக இவ்வளவு சோத்தையும் தூரவா கொட்டுறது”னு எதிர் கேள்வி கேட்பா. “சரி எனக்கு வை”னு சொன்னா, “ம்கூம்.. வளர்ற பிள்ளை சூடா சாப்பிடனும்”னு மழுப்பிடுவா. இப்போ கூட பாருங்க தேவியக்கா கொடுக்கிற காபிய குடிக்கமாட்டேங்குறா. “அட.. அம்மா அதையாது குடிச்சுத் தொலையேன்.”

                அப்பா, வெளிய பெஞ்சில ஒக்காந்திருக்கார். அவர் கண்ணெல்லாம் சிவந்து போயிருந்த்து. ஆனா அது அழுத்துனால வந்த்தில்லனு எனக்குத் தெரியும். பெரிய மாமா தங்கராசு தான் பாடைக்கு சொல்லுறது, மேளத்துக்கு சொல்லுறதுன்னு எல்லா வேலையையும் செஞ்சுகிட்டு இருக்காரு.

                 வாசப்பக்கம் இருந்த செம்பருத்தி செடிக்கிட்ட வச்சு ஒருத்தரு பாடை கட்டிக்கிட்டு இருக்காரு. அதுல மூனாவது குறுக்கு கம்பை சரியா கட்டாம விட்டுட்டாரு. பாடை கட்டுற மும்மூரத்துல அணைக்காம அவர் தூக்கி எறிஞ்ச பீடிய தங்கராசு மாமாவோட மக கலையரசி கவனிக்காம மிதிச்சுட்டு ‘ஸ்...ஸ்..’னு காலை தூக்கிகிட்டே நொண்டி, நொண்டி நடக்கா.. பாவமா இருக்கு.. இவளும் நானும் சின்ன வயசுல ஒரு தடவை ‘பருப்பு கடைஞ்சு’ விளையாடும் போது, ஒவ்வொரு விரலையும் சோறு, குழம்பு, கூட்டு, அப்பளம்னு சொல்லி ரெண்டு பேரும் சாப்டோம். சாப்ட்ட பிறகு ‘நண்டு வருது, நரி வருது’னு அவ இடுப்புல கிச்சு கிச்சு மூட்டிவிடும் போது அவ பாவாடை அவுந்து விழ.. அவ ‘ஓ’னு அழ.. அவ அழுவுறத பாத்து நானும் அழ... ஒரே சிரிப்பு தான்...

                     அட, கண்ணாடி சார் கூட என்னை பார்க்க வந்திருக்கார் போல.. அவர் எனக்கு கணக்கு பாடம் எடுக்கிறாரு. ‘கண்ணாடி சார்னு அவருக்கு பேர் வர ரெண்டு காரணம் இருக்கு. ஒன்னு அவர் கண்ணாடி போட்டிருப்பாரு. இன்னொன்னு.. அவர் எப்ப பாத்தாலும் சட்டை பைக்குள்ள வச்சிருக்கிற சின்ன கண்ணாடி எடுத்து பார்த்து அடிக்கடி தலைய சீவிக்கிட்டே இருப்பாரு. இவரு எத்தனையோ தடவ என்னை முட்டி போட வச்சு கைய தூக்கச் சொல்லிட்டு பின்னாலயே அடிச்சிருக்காரு. அத நினைச்சு பார்த்தா இப்போ கூட லேசா வலிக்கிற மாதிரி இருக்கு. கூடவே தமிழய்யாவும் வந்திருக்காரு. ரெண்டு பேரும் அப்பாட்ட ஏதோ பேசுறாங்க..

                   “நல்ல பையன் சார். நல்லா படிப்பான். நான் அவன ஸ்கூல் பஸ்ட் வருவான்னு எதிர்பாத்தேன். படிப்பாகட்டும், விளையாட்டாகட்டும் அவன் தான் முதல்ல நிப்பான். நான் கூட சொல்லுவேன்.. “டேய்.. உங்கப்பா ஒரு போஸ்ட்மேனா இருந்து வெயில், மழைனு பார்க்காம அலைஞ்சு, திரிஞ்சு கஷ்டப்பட்டு படிக்க வைக்காரு. அதுக்கு நீ நல்லபடியா படிச்சு ஒரு பெரிய வேலைக்கு போனினா தான் அவர் கஷ்டப்பட்டதுக்கெல்லாம் ஒரு மரியாதை. அவருக்காகவாது படிக்கனும்”னு. அவனும் “சரி”ம்பான். ஆனா இப்ப கொஞ்ச நாளாத்தான்.. ஏனோ இப்படியாகி... இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு யார் நினைச்சா.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.” என்று கண்ணாடி சார் சொன்னத நான் மட்டும் உயிரோட இருக்கும் போது கேட்டிருந்தேன்னா மனசு தூக்கி வாரி போட்டிருக்கும்.

                      “டேய்.. உங்கப்பா வீடு வீடா போய் லெட்டர் குடுத்தா.. நீ ஊர்ல இருக்கிற பொம்பளை பிள்ளைகளுக்கெல்லாம் போய் குடுக்கிறியா.. அதுவும் லவ் லெட்டரு.. அப்பன் புத்தி அப்படியே இருக்கு”னு திட்டிட்டு எப்படி மாத்தி பேசுறாரு பாத்தீங்களா.. அப்பவும் கூட நான் ஊர்ல இருக்கிற பிள்ளைகளுக்கெல்லாமா குடுத்தேன். லட்சுமிக்கு மட்டும் தான குடுத்தேன். ஓ.. உங்களுக்கு லட்சுமி யாருனு தெரியாதுல்ல..

                     லட்சுமி பதினொன்னாம் வகுப்புல எங்க ஸ்கூலுக்கு வந்து சேர்ந்தா.. என் கிளாஸ் தான். பாக்குறதுக்கு காலண்டர்ல இருக்கிற மகாலட்சுமி மாதிரி இருப்பா. அவ கண்ணை சுருக்கி சிரிக்கிறத பாக்கும் போதெல்லாம் எனக்கு ஸ்டேட் பஸ்ட் எடுத்த மாதிரி இருக்கும். உள்ளுக்குள்ள என்னமோ மாதிரி. அத எப்படி சொல்றது... ஆனா ரொம்ப சூப்பரா இருக்கும்.. பென்சில் சீவ ப்ளேடு குடுத்த்துல ஆரம்பிச்ச எங்க ப்ரெண்ட்சிப்பு கடைசியல எனக்குள்ள லவ்வாயிருச்சு.. சினிமா டயலாக் மாதிரியே இருக்குல.. ஆனா இத எனக்கு எப்படி சொல்லனு தெரியல..

                    ஒரு தடவை அவளோட ரெக்காட்டு நோட்டுல இதயம் படம் வரைஞ்சு தரச்சொன்னா.. நானும் படம் வரைஞ்சு பாகம் குறிச்சு கூடவே ஒரு சின்னத் தாள்ல கவிதைனு சொல்லி ஒரு ஆறு வரி எழுதிக்கொடுத்தேன். அந்த கவிதைய அவ பாக்காம நோட்ட அப்படியே சார்ட்ட நீட்ட... அவர் அதை எடுத்து, யார்க்கு யார் எழுதுனானு கேட்டு கூட்டத்த கூட்டிட்டாரு. எல்லாரும் அவளை கூட்டமா கூடி விசாரிச்சதுல, அவ அழுகுறா.. அது பொறுக்காம நான் தான் எழுதுனேன்னு உண்மைய ஒத்துக்கிட்டேன். அவளுக்கு நாலு திட்டும் எனக்கு பிரம்படியும் கிடைச்சுது. அது பத்தாதுன்னு எங்க அப்பாவையும் வரச்சொல்லி அவர் வந்து வாத்தியார்ட்ட இருந்த பிரம்ப வாங்கி எல்லார் முன்னாலையும் வச்சு அடி அடினு அடிச்சு பெரம்பு உடைஞ்சதும் தான் எல்லார் மனசும் ஆறுச்சு. அந்த பிரம்ப நான் தான் அதுக்கு முந்தின நாள் வாங்கிட்டு வந்திருந்தேன். அதுக்கப்புறம் லெட்சுமி என்கிட்ட பேசவே இல்ல. அவ மட்டுமில்ல எந்த பொண்ணும் என்கிட்ட பேசல. அவகிட்ட எத்தனையோ தடவை பேச போனாலும் ஒன்னு ‘உம்’முனு இருப்பா.. இல்ல அழ ஆரம்பிச்சுருவா.

                         அப்புறம் ஒருநாள் ஸ்கூல் விட்டு வரும்போது அவள என்கிட்ட பேச சொல்லி நான் கெஞ்சிக்கிட்டு இருந்த்தை எந்த புண்ணியவானோ பார்த்துட்டு போய் என் அப்பாட்ட வத்தி வைச்சுட்டான். அன்னிக்கு எங்கப்பாவுக்கு புதுசா பெல்ட் வாங்கவும், எனக்கு மருந்த வாங்கவுமா ரெட்டைச் செலவு. பிறகு ஒரு வழியா தேறி ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சேன். ரெண்டு நாள் ஒழுங்கா இருந்த நான் மூனாவது நாள் கிளாஸ் முடிஞ்சதும் அவகிட்ட போய் பேச சொல்லி கெஞ்சலா, கோவமா, அதிகாரமா, அமைதியானு மாத்தி, மாத்தி பேசுனதுல அவ. “என்னைய ஏன் இப்படி தொல்லை பண்ணுற.. உன்னால எனக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? வீட்டுல எல்லாரும் என்னையத்தான் தப்பா பேசுறாங்க. படிப்பையே நிறுத்திறனும்னு சொன்னாங்க. உன்னால எனக்கு தினம் தினம் எவ்வளவு திட்டு விழுது தெரியுமா..? அப்ப எல்லாம் செத்துறலாம் போல இருக்கு. முன்ன உன்னைய பிடிச்சிருந்துச்சோ இல்லையோ.. இப்போ உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் உண்மையிலேயே நல்லா இருக்கனும்னு நினைச்சீனா இனிமே என் முகத்துலையே முழிக்காத என்கிட்ட பெசாத.. ப்ளீஸ்”னு கத்தி அழ ஆரம்பிச்சுட்டா..

                     எனக்கு அப்போ என்ன தோணுச்சோ... கோவம் தலைக்கு ஏறிப்போச்சு. வேகமா பையில, புக்குக்குள்ள வச்சிரந்த பிளேட தேடிப் புடிச்சு எடுத்து, “நான் உயிரோட இருந்தாத்தான உன்கிட்ட பேசனும்னு சொல்வேன். உனக்கு தொல்லை கொடுப்பேன். நான் செத்தட்டா தோணாதுல.. நீயும் நிம்மதியா இருப்பீல”னு சொல்லிக்கிட்டே, என் கையில பிளேடால கீற ஆரம்பிச்சேன்.. ரத்தம் கொட்டுச்சு.. கண்ணெல்லாம் சொருகுச்சு.. அப்படியே செத்து போயிருவோம்னு தான் நினைச்சேன். முழிச்சு பார்த்தா கையில கட்டோட வீட்டுல இருக்கேன். அதுக்கப்புறம் கிட்டத் தட்ட ஒரு மாசமா ஸ்கூலுக்கே போகல. வேற ஸ்கூலுக்கு போறியானு கேட்டாங்க. முடியாதுனுட்டேன். தெருப் பையங்களோட கிரிக்கெட் விளையாடற அளவுக்கு உடம்பு தேறிடுச்சு. ஆனா லட்சுமி ஞாபகம் அடிக்கடி வரும். கனவுல கூட அவதான் வருவா.. காயம் பட்ட இடத்துல முத்தம் கொடுப்பா.. நீ கிரிக்கெட்ல லாஸ்ட் ஓவர்ல 6 சிக்ஸ் அடிச்சு பாகிஸ்தான ஜெயிச்சுட்டு வா நான் உன்னை கட்டிக்கறேம்பா.. நானும் ஓங்கி, ஓங்கி அடிப்பேன். ஆனா பந்து போகாம பக்கத்துலயே விழும். அம்பயர் எங்க வீட்டு மாட்ட பத்திக்கிட்டே கிரௌண்டுக்கு வந்து அவுட் கொடுப்பாரு. எதிர் டீம் ஜெயிச்சதும் எல்லாரும் எங்க மாட்டுல பால் கறந்து குடிப்பாங்க. இப்படி கண்ணாபின்னான கனவு வரும். இன்னொரு விஷயம் எங்க வீட்டு மாடு.. காளை மாடு. அப்புறம்.. ரெண்டு பேரும் கைகோர்த்து நடந்து போற மாதிரி கனவு வரும். டி.வி பார்க்கும் போது கூட அவதான் வருவா.. நியூஸ் வாசிப்பா, சொல்லப் போனா எங்க பார்த்தாலும் அவதான் தெரிஞ்சா.

                      ஒருநாள் என்னோட பைக்கட்ட எதுக்கோ எடுத்து துழாவுனப்போ நான் என் நோட்டுக்குள்ள வச்சிருந்த அவளோட காஞ்ச ரோஜாப்பூ, என் பேரு எழுதிக் கொடுத்த நோட்டு, அவ தின்னுட்டு அதுல பொம்மை செஞ்சு தந்த சாக்லேட் தாள். அவ ஓரம் கடிச்ச பேனா மூடி.. இதெல்லாம் பார்க்க.. பார்க்க.. எனக்க அழுகையா வந்துச்சு.. ஏதாவது செய்யனும் போல இருந்துச்சு.

                    அப்போதான் பரண் மேல தங்கராசு மாமா வயலுக்கு வாங்கி வச்சிருந்த பூச்சி மருந்து கண்ணுல பட்டுச்சு. எடுத்து ஒரே மடக்குல காலி பண்ணிட்டேன். ரொம்ப நேரம் கழிச்சுதான் உள்ள வந்த அம்மா பார்த்துட்டு கத்தி, ஊர் கூடி.. என்னைய ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போனாங்க.. போற வழியில லட்சமியோட முகம் பெரிசா.. தியேட்டர்ல நடிகரோட முகத்தை க்ளோசப்ல காட்டும் போது முத சீட்டுல உட்கார்ந்து பார்த்தா தெரியுமே.. அந்த மாதிரி தெரிஞ்சுது. கண்ணு முழுக்க அவதான் தெரிஞ்சா. அப்புறம் ஒரே இருட்டு. டாக்டர் பார்த்துட்டு எல்லா படத்துலையும் சொல்ற மாதிரி “ஒரு கால்மணி நேரம் முன்னவாச்சும் கொண்டுவந்திருக்கனும்... ம்கூம்..“னு சொல்லிட்டாரு.

                       என்னைய சுத்தி இப்படி உட்கார்ந்துகிட்டு இப்படி ஒப்பாரி வச்சு அழறது எனக்கு எரிச்சலா இருக்கு. நான் செத்துட்டதுல இவங்களுக்கு வருத்தமோ இல்லையோ.. எனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லை. நான் உயிரா நினைச்ச லட்சுமியே என்னைய பிடிக்கலனு சொல்லிட்டு போனதுக்கப்புறம் நான் யாருக்காக இருக்கனும்? அதுவும் போக நான் செத்த்துல இவங்களுக்கு ஒரு நஷ்டமும் கிடையாது.. என்ன எங்க கிரிக்கெட் டீம்ல எனக்கு பதில் கட்டை பாஸ்கர் விளையாடுவான். க்ளாஸ்ல என் இடத்துல அநேகமா மைதீன் உட்காருவான். அவனுக்கும் லட்சுமி மேல ஒரு கண்ணு. தேவியக்காவுக்கு கடைக்கு போக எனக்கு பதில் எதிர் வீட்டு முருகன் இருக்கான். அப்பாவுக்கு என்னால எந்த தொல்லையும் இல்ல. அம்மா இனிமேலாவது என்னைய பத்தி கவலைப்படாம சுடுசோறு சாப்பிடுவா. லட்சமிய கூட அவ வீட்டுல திட்ட மாட்டாங்க. என்ன நான் இருந்திருந்தா அவள கல்யாணம் பண்ணியிருந்தா அவள ரொம்ப நல்லபடியா பாத்திட்டிருந்திருப்பேன். வேறயாருக்கும் அவள நல்லா பாத்துக்க தெரியாது. அவதான் புரிஞ்சுக்கல.. ம்...நாளைக்கு பேப்பர்ல போட்டாலும் போடுவாங்க..‘காதல் தோல்வி.. மாணவர் தற்கொலை’னு போட்டு ரெண்டு பத்தி எழுதியிருப்பாங்க. போட்டோ கூட போடுறாங்களோ என்னவோ.. அப்படி போட்டா ஹால்டிக்கட்டுக்கு எடுத்த போட்டாவ போட்டா நல்லா இருக்கும். அதுல நான் அழகா இருப்பேன். பேப்பர படிக்கிறவன் கொஞ்ச நேரத்துல மறந்துடுவான். பள்ளிக்கூடத்துல கொஞ்சநாள் ஞாபகம் வச்சிருப்பாங்க. வீட்டுல ஒன்னு, ரெண்டு மாசம் நினைச்சிட்டு அப்புறம் அவங்கவங்க வேலைய பார்க்க போயிடுவாங்க. அவ்வளவு தான்.

                       இன்னும் என் உடம்ப பார்க்க ஆட்கள் வந்துகிட்டேதான் இருக்குறாங்க. உள் ரூமோட வாசல் கதவுக்கு பக்கத்துல ஏதோ தெரிஞ்ச முகமா பட, யார்னு பார்த்தேன். என் முன் பெஞ்சுல இருக்கிற புவனா.. அப்போ கண்டிப்பா மூர்த்தியும் வந்திருப்பானேனு தேடினேன். பக்கத்துலயே நின்னுட்டிருந்தான். அடுத்து இவன் தான். லேசாய் சிரித்துக் கொண்டேன். உதயராஜ், மோகன், கட்டை பாஸ்கர், லட்சு...மி. அட, லட்சுமி கூட வந்திருக்கா போல.. ஆமா இவ எதுக்கு இங்க வரனும், அதான் பிடிக்கலனு சொல்லிட்டால.. அப்புறம்

                          ஏன் வந்தா..? ஒருவேளை நான் செத்தது உண்மையானு பார்க்க வந்திருப்பாளோ..? பார்த்தா அப்படி தெரியல. கண்ணுல கண்ணீரா வந்துட்டே இருந்துச்சு.. ஒரு வேளை சாவு வீட்டுக்கு வந்தா அழனும்னு சாஸ்திரத்துக்கு அழறாளோ? ஆனா முகத்தை பார்த்தா இப்போ அழ ஆரம்பிச்சது போல தெரியல.. ரொம்ப நேரமா அழுதழுது முகம் செவக்குற வரைக்கு அழுதுருக்கா.. இன்னமும் கூட ஏங்கி.. ஏங்கி அழுதுட்டே இருக்கா.. ஏன்..? ஏன்..?

                     அதுக்குள்ள என் உடம்ப தூக்கி பாடையில வைச்சு தூக்கிட்டு போக ஆரம்பிச்சாங்க. எல்லாரோட அழுகையும் அதிகமாச்சு. எல்லாமே எனக்கு செயற்கையா பட்டுச்சு.. அவளும் அம்மாவும் அழுத்து தவிர. அவ வாய் விட்டே அழ ஆரம்பிச்சுட்டா.. மெது.. மெதுவா என்னைய வீட்டக்குள்ள இருந்து வெளிய எடுத்து வந்து ரோட்டுக்கு கொண்டு போக ஆரம்பிச்சாங்க. நாலு பேர் சேர்ந்து பாடைய உசத்தி தோளுக்கு மேல தூக்குனதுல என்னால கீழ பார்க்க முடியல. அவ கூடவே கொஞ்ச தூரம் நடந்து வந்தா.. அவ அழுகைச் சத்தம் எனக்கு கேட்டுகிட்டே வந்தது.. “ஏன் அழுற... அழாத”னு நான் சொல்லிப் பாக்குறேன் அவ காதுல விழவே மாட்டேன்குது. அவ கொஞ்சதூரம் வந்த்தும் மயக்கமாகி விழுறானு கூட இருக்கிறவங்க போடுற சத்தத்துல தெரியுது. ‘கீழ எதுவும் விழுந்துட்டாளா.. அதுக்குள்ள யாராவது புடிச்சுட்டாங்களானு நான் பாக்குறதுக்குள்ள தெருமுனை வந்துருச்சு.. நாங்க வளைஞ்சுட்டோம்.

              “லட்சுமி.. லட்சுமி...”

 
 
 
.

Saturday, July 31, 2010

மீசை (சிறுகதை)


                 
                  அகிலனுக்கு வெளியே தலைகாட்ட முடியவில்லை. ஏதோ பெரிய அவப்பேரோ, கடன் தொல்லையோ என்றெல்லாம் நினைக்க வேண்டாம். பிரச்சனை இரண்டு அங்குல மீசை தான்.

                  இன்று காலை ஷேவிங் செய்யும் போது, திடீரென ஒரு எண்ணம்.. ‘மீசையில்லாவிட்டால் எப்படியிருப்பேன்’ கண்களை மேலே உயர்த்தி நினைத்துப் பார்த்தான். மாதவன், ஷாருக்கான், சச்சின், ஏ.ஆர்.ரஹ்மான், என ஆரம்பித்து அப்துல்கலாம் வரை நினைவிற்கு வரவே, ஒரு வினாடி சிலிர்த்துப் போய் கொஞ்சமும் யோசிக்காமல் மீசையை எடுத்துவிட்டான்.

                 ஆனால் மீசையின்றி இருந்த அகிலனைப் பார்த்த ஒருவரது ரியாக்ஷனும் அவ்வளவு சொல்லிக் கொள்வது போல் இல்லை.

                அம்மா, “என்னடா இது கண்றாவி” என்றாள். அப்பா எதுவும் சொல்லாமல் தலையிலடித்துக் கொண்டார். அப்படியே திரும்பி அருகில் விளையாடிக் கொண்டிருந்த அக்காவின் இரண்டு வயதுக் குழந்தையை பார்த்து அசட்டுத்தனமாய் சிரிக்க, அது மிரண்டு போய் கையிலிருந்த பொம்மையை கீழே போட்டுவிட்டு தன் அம்மாவை நோக்கி பாய்ந்தது. அக்கா அவளைத தூக்கிக் கொண்டு இவனைப் பார்த்து, “உனக்கு என்னாச்சு, எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்.. எந்த பொண்ணு சொன்னானு இப்படி கோபுர வாசலிலே கார்த்திக் மாதிரி மீசைய எடுத்திருக்க” என்றாள்..

                “நல்லாயில்ல..?”

                “கருத்து சொல்ல விரும்பல” என்றாள் அனுபவ அரசியல்வாதி போல்..

               ஆனால் அவன் நண்பன் பார்த்தி என்ற பார்த்தசாரதி கருத்து சொன்னான். சொன்ன கருத்து தான் வெளியே சொல்லமுடியாதபடி  இருந்தது. அதைக் கேட்ட அகிலனுக்கு ஏன்டா மீசையை எடுத்தோமென்று ஆகிவிட்டது. இப்படியே காலேஜிற்குப் போனால் என்னவாகும் என்று நினைத்தவனுக்கு 2012 அழியப் போவதாய் சொல்லும் உலகம் இப்போதே அழியக்கூடாதா என்று தோன்றியது... 

                   பழைய மாதிரி வளர்வதற்கு எப்படியும் ஒரு வாரமாவது ஆகும். அதுவரை காலேஜ் போகாமலிருப்பதென்பதும் முடியாது. பிராக்டிகல்ஸ் வேறு நெருங்குகிறது.. என்ற நிர்பந்தத்தில் காலேஜிற்குப் போக பைக்கில் ஏறி உட்கார்ந்தவனின் குறுக்கே, ஒரு பூனை கடந்து போனது. போய்க் கொண்டிருந்த பூனை நின்று இவனை ஒருமுறை உற்றுப் பார்த்தது. இவனும் உற்றுப்பார்க்க, அது தன் வலது காலைத்தூக்கி தனது மீசையை தடவி விட்டுக் கொண்டு ‘மியாவ்’ என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டு சென்றது. இவனுக்கு அது தன்னைக் கிண்டல் பண்ணுவதாய் தோன்ற, கோபத்தில் பைக்கின் கிக்கரை உதைத்துக் கிளப்பினான்.

                    வழியில் ஒருவர் மொட்டை போட்டு தலையில் தொப்பி வைத்தபடி இவனைக்கடந்து போனார். ‘இவரை மாதிரி தலைய ஷேவிங் பண்ணிருந்தாலாவது இந்த மாதிரி தொப்பி வச்சு மறைக்கலாம். முகத்தை எப்படி...? ஒட்டுமீசை.. ம்கூம்.. அதுசரிப்படாது. காட்டிக் கொடுத்துட்டா ரொம்ப கேவலமாயிடும்..” என்று புலம்பியபடியே பைக்கை ஒருவர் மேல் விடப்போய் கடைசி வினாடியில் பிரேக்கடித்து திட்டுவாங்கி கட்டிக் கொண்டான்.

                ரோட்டில் போகிறவர்களெல்லாம் தன்னையே உற்றுப் பார்ப்பது போலிருந்தது. யாரேனும் சிரித்தால் தன் மீசையில்லா முகத்தைப் பார்த்தே சிரிப்பது போலிருந்தது.

                 காலேஜில் கேட்கவே வேண்டாம். எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொண்டு கை தட்டி, ‘கொக்கர கோழி கூவுறவேளை.. ராசாதிராசன் வாரண்டி புள்ள’ என்று பாட்டுப் பாட அவன் மழுப்பலாய்ச் சிரித்துக் கொண்டே, “ஷேவ் பண்ணும் போது.. பை மிஸ்ட்டேக்கா..” என எத்தனையோ காரணங்களைச் சொன்னாலும், உள்ளுக்குள் பயங்கரமாய் கத்திக் கொண்டிருந்தான். அவனால் ‘மயிரே போச்சு’ என்று இருக்க முடியவில்லை.

                 அன்று சுவாலஜி புரொபசர் கரப்பான்பூச்சி படம் வரைந்து பாடமெடுத்துக் கொண்டிருக்க அவனோ அதற்கிருக்கும் பெரிய மீசையை மட்டுமே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

                  இனி யாராவது தன் மீசை சமாத்தாரத்தைப் பற்றிக் கேட்டால் அவர்களை கொலையே பண்ணிவிடும் அளவிற்கு வாழ்க்கையே வெறுத்துப் போய் வந்து கொண்டிருந்தவன் முன்னே வந்து நின்றாள் சுபஜா.

                 சுபஜாவும், இவனும் இதுவரை ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமல் (காதல் பற்றி..) உள்ளுக்குள்ளேயே லவ் பண்ணுகிறார்கள்..

                ‘இவள் மட்டும் இப்போது தன் முகத்தைப் பார்த்தால்..’ நினைத்தவனுக்கு வயிற்றில் சுனாமி பாய்வது போலிருந்தது. முகத்தை மூடிக் கொண்டு வேறு பக்கம் நோக்கி நடக்க முயன்றவனை அவள் குரல் தடுத்து நிறுத்தியது.

               “அகில்..”

              “ம்..” என்றான் மூக்கைத் தடவுவது போல் பாவனை செய்து மறைத்துக் கொண்டு..

              “ உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்னு ரொம்ப நாளா..” வெட்கத்தில் குனிந்து சொல்லிக் கொண்டிருந்தவள் அவன் முகத்தைப் பார்த்து நிறுத்திவிட்டு, “ஹேய்.. உங்க கைய எடுஙக்” என்றாள்

                அவனும் வேறு வழியின்றி மழுப்பலாய் சிரித்துக் கொண்டே கையை எடுத்தான்.

                “ வாவ்.. மீசையை எடுத்துட்டீங்களா. ஸோ.. நைஸ்.. இப்போ நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா?”

                “ நிஜமாவா?”

                “ ம்... நிஜ்ஜம்மா..”

                “எவ்ளோ...?”

                “ என்னை மாதிரி ஒரு சுமாரான  பொன்னு லவ் பண்ணுற அளவுக்கு..”

                இவன் ஆச்சரியமாய், “நிஜமாவே.. நிஜமாவா?” என்றான்

                “ம்.. ம்.. என்றாள் வெட்கத்தில் தலையைக் கவிழ்த்து சிரித்துக் கொண்டே..

                 அகிலன் மகிழ்ச்சி தாளாமல் “நீங்களும் தான்” என்றான்

                 “என்ன?”
 
                 “மீசையில்லாம ரொம்ப அழகாயிருக்கீங்க”

                 அவள் ‘க்ளுக்’கென சிரித்தாள்.




.

Friday, July 30, 2010

மிக மிக மிக மிக முக்கியம்..

                     அன்பார்ந்த Bloggerகளே.. உங்க எல்லோருக்கும் ஒரு ஹாய்.. நான் கடந்த 2 வாரங்களாகத் தான் Blog எழுத ஆரம்பித்திருக்கிறேன். எனது கிறுக்கல்களை ஒன்றிரண்டு இணையதளத்தில் (இன்ட்லி, தமிழிமணம் போல்) பதிந்து சிலர் பார்க்கும் வகையில் அமைத்துள்ளேன். இப்போது நான் கேட்பது என்னவென்றால்... (ஒருவழியா விஷயத்துக்கு வந்தாச்சு..) எந்தெந்த தளங்களில் நமது பதிவை (இன்ட்லி போல்) இணைக்கலாம் என்பதை எனக்கு தெரிவித்து உதவுமாறு மிக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன்... இணையத்தள முகவரியைச் சொல்லும் அனைவரின் பதிவுக்கும் ஒருவார காலத்திற்கு தவறாமல் வந்து ஒவ்வொரு பதிவையும் படித்து கருத்தை கட்டாயம் பதிவு செய்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்.. நன்றி


இப்படிக்கு
கடமையை ஃபிகர் போல கருதி ஃபாலோ பண்ணும்,
நாடோடி



பின்குறிப்பு - நான் மிக மிக முக்கியம் என்று சொன்னது.. எனக்கு. ஹி.. ஹி..




.

பெயர் (‘குட்டி’கதை)

              
                 கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி என் கண்ணில்பட்டாள். ஓரிரு முறை என்னைப் பார்த்து மெலிதாய் சிரிக்கக்கூட செய்தாள். ‘போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற(?) வேண்டியது தான்’ என்று முடிவுசெய்தேன்.. பந்தி முடிந்து வரும் வழியில் தனியே மாட்டினாள்..

             “ஹாய்.. ஐ ம் அருண்..” என்றபடி அவளிடம் கையை நீட்டினேன்..

            “ம்..” என்றாள் கேள்வித் தோரணையில்.

            “ ஓ.. இங்கிலீஷ் தெரியாதா.. உன் பேரு என்னன்னு கேட்டேன்”

            “ அதற்கும் “ம்..” என்றே பதில் தந்தாள்..

            “ச்.. தமிழுமா.. ஆப்கா... நாம்..க்யா ஹே..” என்றேன் எனது ப்ராத்மிக் ஹிந்தியை மனதில் கொண்டு வந்து...

            “ ஹிந்தியும் இல்லைனா என்ன... தெலுங்கா...” எனக்கு தெலுங்கெல்லாம் தெரியாது.. டி.வி.டியில படம் பாக்குறதோட சரி...

            இதற்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. தலையை திருப்பி யாரையோ தேடினாள்..

             கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. “ஆங்.. கண்டுபிடிச்சுட்டேன்.. கேரளா... மலையாளம்.. கலரா இருக்கும் போதே நினைச்சேன்... இப்போ சொல்லு.. நிண்ட பேரு எந்தா?”

             இப்போது அவள் மெதுவாய் என்னைப்பார்த்துப் புன்னகைத்தாள்..

              “என் நிலைமை சிரிப்பா இருக்குதா.. இதப்பாரு எனக்கு வேற மொழியெல்லாம் தெரியாது அதனால நீயே சொல்லிடு.. அட்லீஸ்ட் ஏதாவது பேசு அதவச்சாது நீ எந்த மாநிலம்னு தெரிஞ்சுக்கறேன்” என்றேன்

             “..............”

             அப்போது அங்கு வந்த எனது மனைவி காயத்ரி, “ஐயோ.. அருண்.. அவளுக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகலை. பேச்சு வராத குழந்தைய கேட்டா எப்படி பதில் சொல்லுவா? அவ பேரு சுபா” என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்.




.
(உங்கள் கருத்து மறக்காமல் பதிவு செய்யுங்கள்)

Thursday, July 29, 2010

கான்செப்ட் (சிறுகதை)

                   புத்திசாலிகளுக்கு.. நல்ல ரசனை உள்ளவங்களுக்கு முதல் குழந்தை ‘பெண்’ணாகத் தான் பிறக்கும்.


                  கேட்பதற்கு கொஞ்சம் மடத்தனமாக தோன்றினாலும், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் உண்மை என்று தெரியும். புதுமையை விரும்புபவர்களுக்கு, நல்ல கிரியேட்டருக்கு, ஓப்பன் டைப்பான ஆட்களுக்கு, கொஞ்சம் அந்த மாதிரி விஷயங்களில்(லும்) ஆர்வம் உள்ளவர்களுக்கு எல்லாம் முதல் குழந்தை பெண்ணாகத் தான் இருக்கும். நான் ஆண்களைப் பற்றி மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

                     இந்த எண்ணம் எனக்கு எப்படி தோன்றியதென்று ஞாபகம் இல்லை. எப்போது என்றும் ஞாபகமில்லை. ஆனால் சரி என்றே தோன்றுகிறது. இப்படி யோசிக்கும் போது அதற்கு ஆதாரமாய் கமல்ஹாசன், பாரதியார், என்.எஸ்.கிருஷ்ணன், கவிஞர் ஷெல்லி, கார்ட்டூனிஸ்ட் மதன், துரை சார் இப்படி நிறைய பேர்கள் வந்து போவார்கள்.. இவர்கள் அனைவரும் மேலே உள்ள ஏதேனும் ஒரு கேட்டகிரியில் அல்லது எல்லாவற்றிலுமே அடங்குவார்கள்... துரை.. நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் எனக்கு ‘ஹெட்’டாய் இருந்தவர்.

                    இந்த வரிசையில் வந்திருக்க வேண்டியவர் தான் சுகுமார் சாரும்... ஆனால் வரவில்லை. சுகுமார் சாருக்கு வயது 55 இருக்கும். ஒரே ஒரு மகன்.. பிரதாப். அவன் என்னைவிட 4 வயது சிறியவன். சுகுமார் சாரும் நானும் வயது வித்தியாசம் இன்றி பழகுவோம். அதிலும் பெண்களை பற்றி பேசும் போதெல்லாம்.. தன் வயதையும் மறந்து பேசுவார்...

                   “சார்.. எனக்கு பொம்பளப்பிள்ளை தான் பிறக்கும்...”

                   “எப்படி சொல்ற..?”

                   “புத்திசாலிங்களுக்கு எல்லாம் பொன்னுதான் சார் பிறக்கும்...?”

                   முதன் முதலில் இதை அவரிடம் நான் சொன்னதும் வாய்விட்டுச் சிரித்தார்.

                    “நான் பார்த்தவரை நிறைய பேருக்கு அப்படி தான் பிறந்திருக்கு...”

                    “அப்போ ஆம்பளை பிள்ளை பிறந்தவங்கள எல்லாம் புத்திசாலி இல்லைன்றியா... அந்த வகையில பார்த்தா.. நீ ரைட்டர் சுஜாதாவ ரொம்ப புத்திசாலிம்ப... நீ சொல்ற கேரக்டர்ல நிறைய அவருக்கும் ஒத்து போகுது.. இன்னும் வைரமுத்து, ஐன்ஸ்டைன்...”

                     “அதான் எனக்கும் டவுட்டா இருக்கு.. இவரை மாதிரி ஒரு சில ஆட்கள் இடையில நின்னுட்டு என் கண்டுபிடிப்ப ப்ரூப் பண்ண விடமாட்டுறாங்க.. உங்களையும் சேர்த்து.. ஆனா என் கண்டுபிடிப்புல எந்த குறையும் இல்ல...”

                     “நீ அடிமுட்டாள்னு சொல்லுவியே.. ஜீவா.. அவன் அழகா ரெண்டு பொம்பளை பிள்ளைகள பெத்து வச்சிருக்கான்.. அப்படி பார்த்தா உன் கான்செப்ட்டே தப்பாகுதே..”

                     “போங்க சார்.. ரொம்ப குழப்புறீங்க.. நீங்க சொல்றத வச்சு பார்த்த அவன புத்திசாலினு நான் ஒத்துக்கனும்னு சொல்வீங்க போல.. நீங்க என்ன வேணா சொல்லுங்க.. என் கான்செப்ட் சரினு மட்டும் உள்மனசு சொல்லுது. என்னைக்காவது அதுக்கு ஒரு விடை கிடைக்கும்..”

                    “கண்டிப்பா கிடைக்கும்... வெயிட் பண்ணு.. விடாம திங்க் பண்ணு.. சமீபத்துல யாரும் பெருசா கண்டுபிடிச்ச மாதிரி தெரியல நீயாது அந்த குறைய தீர்த்து வை...”

                    “எனக்கு பிறக்க போற பொன்னுக்கு நான் பேர் கூட யோசிச்சுட்டேன்”

                    “என்ன?”

                    “வர்ஷா.. மழைனு அர்த்தம்...””“

                    “நல்லா இருக்கு”

                    “உங்களுக்கு பொன்னு பிறந்திருந்தா என்ன பேரு வச்சிருப்பீங்க?”

                    “நந்தினி”

                    “ஏன் சார்... உங்க பழைய லவ்வர் பேரா...”

                    “சே... சே.. அதெல்லாம் இல்ல.. அந்த பேரு எனக்கு ரொம்ப பிடிக்கும்..“

                    அதிலிருந்து அவ்வப்போது இதைப் பற்றி பேச்சு வரும். நான் ஆர்க்யூ பண்ணுவதும் அவர் பதில் சொல்வதும் தொடர்ந்து கொண்டே இருந்த்து. எனக்கு மற்றவர்களைப் பற்றி கூட கவலையில்லை. ஆனால் இவருக்கு ஏன் முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறக்கவில்லை என்று தோன்றும்.. என்னால் எனது கான்செப்டையும் விட்டுக் கொடுக்கவும் முடியவில்லை. இப்படி இருக்கையில் தான் ஒருநாள் காலையில் சுகுமார் சார் செத்து போய்விட்டார் என்ற செய்தி என் காதில் விழுந்தது.

                    ஒரு கணம் நான் இதற்கு என்ன ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அதை ஒரு செய்தியாக கூட என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இப்படி ஒரு அபத்தத்தை அந்த காலையில் நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்படியானால் இன்று மாலை.. இனி வரும் எந்த மாலையிலும் நான் அவரை சந்திக்க முடியாது.. என் விவாத்திற்கு எதிர் குரல் வராது. என் அபத்தமான பேச்சுக்கு பதிலாய் அந்த சிரிப்பு ஒலி கேட்காது.. அவர் வீட்டிற்கு போகும் பொழுதெல்லாம், நான் காலிங்பெல்லை அழுத்தினால் ஒரு போதும் அவர் வந்து திறக்கப் போவதில்லை.. ஒரே சமயத்திலேயே அவர் அமரும் நாற்காலி, படுத்துறங்கும் கட்டில், நடமாடும் வீடு, என் பைக்கின் பின் இருக்கை, அவர் குரலை எதிரொலிக்கும் வீடு எல்லாம் காலியாகப் போகிறது...நினைத்துப் பார்க்கும் போது கழுத்தை யாரோ காற்றுபுகவிடாதபடி அழுத்தி பிடிப்பதைப் போல் இருந்தது. அவசரமாய் அவர் வீட்டிற்கு ஓடினேன்.

                         வீட்டு வாசலருகே படுக்க வைக்கப்பட்டிருந்தார்.. பட்டென எழுந்து ‘வாடா போய்.. ஒரு டீ சாப்பிட்டுட்டு வரலாம்’ என்று சொல்வார் என்றே மனம் எதிர்பார்த்தது. இல்லை.. இனி சொல்லப் போவதில்லை.. அறிவு சொன்னாலும் கடைசி வரை மனம் கேட்கவே இல்லை.

                       எனக்கு நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்தவர்.நம் வாழ்நாளில் யாரை மறந்தாலும்.. நமக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தியவரை மறக்க மாட்டோம். ஏனெனில் புத்தகங்களில் பல உலகங்கள் ஒளிந்திருக்கும்.. அதை நமக்கு காட்டியவர்கள் அவர்கள்.. புதிய உலகை அறிமுகம் செய்தவர்கள்.. நாம் மறக்க நினைத்தாலும் அந்த புத்தகங்கள் மூலம் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள்...

                          ஏதேதோ சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருந்தன.. அவருடன் பேசிய பொழுதுகள் எல்லாம் ஊமைப்படங்களாய் மனத்திரையில் ஒன்றின் மேல் ஒன்றாய் தெரிந்து கலந்தன...

                           உடலை கொண்டு போய் மயானத்தில் எரிக்கும் வரை உடன் இருந்து விட்டு வெறுமையாய் வீடு திரும்பினேன்.. வரும் வழியில் நாங்கள் அடிக்கடி சந்தித்து உரையாடும் டீக்கடையை கடக்கும் போது எனது அசட்டுத்தனமான கான்செப்ட் மனதில் வந்து போனது.. ‘புத்திசாலிங்களுக்கு, நல்ல ரசனை உள்ளவங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாத்தான் பிறக்கும்.’ அந்த வேளையிலும் ஒரு மெல்லிய சிரிப்பு எனது உதட்டில் தோன்றி மறைந்தது. அப்பொழுது என்னை நோக்கி கல்லூரி படிக்கும் வயதில் ஒரு அழகான பெண் வந்தாள்.. கெட்ட மனம்.. அப்போதும் அவளை ரசித்தது.. நேராக என்னிடம் வந்தவள்,

                      “கொண்டு போயிட்டாங்களா?” என்றாள். நிறைய அழுதிருந்தாள். புரிந்து கொண்டு..

                      “இப்போ தான் கொஞ்ச நேரம் ஆச்சு.. நீங்க...? என்றேன்.

                      “நந்தினி. விழுப்புரத்துல இருந்து வர்றேன்” என்ற வார்த்தைகளை முழுவதுமாக முடிக்காமல் கண்ணீரோடு மயானத்தை நோக்கி ஓடினாள்...



 
.

Wednesday, July 28, 2010

உளறல் (சிறுகதை)

            ‘குடித்துவிட்டு உளறாமல் இருப்பது எப்படி?’ என்று ஏதேனும் புத்தகம் இருந்தால் யாரேனும் எனக்கு அனுப்பி வைக்கவும். வி.பி.பி.யில் பெற்றுக் கொண்டு பணம் அனுப்பி வைக்கிறேன்.

             எங்கள் ரூமில் உள்ள ஐந்து பேரில்  நானும், நண்பர் நடராசும் மட்டுமே குடிமகன்கள். மீதமுள்ள மூன்று பேரும் காலியான குவாட்டர் பாட்டிலை ஏதோ செத்த எலியை தூக்குவது போல் தூக்கிப் போடுபவர்கள். எங்கள் இருவரிலும் நான் சமீபத்தில் தான் ஓப்பனிங் செய்து ‘குறைகுடம் கூத்தாடும்’ என்பதற்கேற்ப ஆடிக்கொண்டிருப்பவன். சக குடியானவர் பீடிங் பாட்டிலிலேயே ஊற்றி அடிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். அவர் உளர்வதோ, அதிகமாய் தள்ளாடுவதோ கிடையாது. ம்... நிறைகுடம்.

                இதே போல் தான் அன்று தண்ணியடித்துவிட்டு ‘மயூரி’ பற்றி கமெண்ட் அடித்து எல்லோரையும் வெறுப்பேற்றியிருக்கிறேன். மயூரி எங்கள் காலேஜில் படிக்கும் ஒரு மாடர்ன் மாதுசிராமணி..

                ‘ஏன்டா.. இந்த மயூரிக்கென்ன ஏஞ்சலினாஜோலினு நினைப்பா. இல்ல இந்த எழவு ஊர அமெரிக்கானு நினைச்சாளா? எப்ப பாரு ஜீன்ஸ், லெக்கின்ஸ், டி-சர்ட்... குட்டியானை மாதிரி இருந்துட்டு அவ சைஸ்க்கு இதெல்லாம் தேவையா.. அதுவும் அந்த ஜீன்ஸ் போட்டுகிட்டு தைச்சது மாதிரி அவ்வளவு டைட்.. அவசரம்னா எப்படித்தான்....’ என்ற ரேஞ்சுக்கு உளறியிருக்கிறேன்.

                    இன்னும் கூட யாரைப் பற்றியெல்லாமோ உள்ளே அடக்கி வைத்திருந்த அத்தனை விஷயத்தையும் போட்டு உடைத்திருக்கிறேன். என் அப்பாவை, என்னை சின்னதிலிருந்தே கோ-எஜிகேஷனில் சேர்க்காமல் பாய்ஸ் ஸ்கூலில் சேர்த்ததற்காக திட்டியிருக்கிறேன். லஷ்மியை சைட்டடிக்கிறானென்று என்னோடு படிக்கும் ஒருவனை, என் ரூம் மேட்களிடம் ஆளுக்கொரு கெட்ட வார்த்தை சொல்லச் சொல்லி அதைக் கொண்டே திட்டியிருக்கிறேன். லஷ்மி நான் ரூட் போட்டுக் கொண்டிருக்கும் பெண். இது போன்று எனக்கு பிடிக்காத நண்பர்கள்(!) பற்றியெல்லாம் பேசியதில் எங்களுக்கிடையேயான நட்பு கான்ட்ராக்ட் விட்டு கட்டிய பாலம் போல விரிசல் கண்டது. இதனால் தான் நான் புத்தகம் தேடுமளவுக்கு இந்த விஷயம் தீவிரமடைந்துள்ளது.

                “உளரல் ஏன் வருகிறது” என்று அந்த சக சிட்டிசனிடம் கேட்டதில், ‘மனசுக்குள்ள எதைப் பத்தியாது நினைச்சுகிட்டே தண்ணியடிச்சோம்னா.. அதப்பத்தி உளர ஆரம்பிச்சிடுவோம். அதான் லவ் பெயிலியர்ல தண்ணியடிக்கிறவன் காதலிய பத்தியே புலம்பிட்டிருக்கான்’ என்று சைக்கியாட்ரிஸ்ட் ரேஞ்சில் விளக்கம் கொடுத்தான்.

                அப்படியானால் இன்று எதைப்பற்றியும் நினைக்கக்கூடாதென முடிவெடுத்தேன். ஆமாம்.. இன்று நான் தண்ணியடிக்கப் போகிறேன். என் சக சிட்டிசன் ஏற்கனவே பாட்டில் வாங்க போய்விட்டான்... இதோ.. வந்தும்விட்டான்.

                     பாட்டிலைத் தட்டி, திறந்து, கலந்து பூமாதேவிக்கு கொஞ்சம் சமர்ப்பனம் பண்ணிவிட்டு குடிக்கப் போனவன், ஒருமுறை என் மனதை நோட்டம் விட்டேன். ஏதேனும் நினைத்திருக்கிறேனா என்று.. எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியானால் இன்று உளர மாட்டேன் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டோ, சந்தோஷப்படுத்திக் கொண்டோ குடிக்க ஆரம்பித்தேன்.

                       காலை.. மிகவும் சோம்பலாய் எழுந்தேன்.. லேசாய் தலைவலித்தது. உளறல் பற்றி ஞாபகம் வரவே, நண்பர்களை நோக்கி ஆர்வமாய்க் கேட்டேன்..

            “நைட்டு ஏதாவது உளறினேனா?”

            “ம்... ரொம்ப” என்றான் ஒருவன் சலிப்பாக..

            “ மாட்டேனே.. ஏன்னா நான் எதையுமே நினைச்சுட்டிருக்கலையே. அதனால கண்டிப்பா உளறியிருக்க மாட்டேனே... சான்சே... இல்ல..”

            “இதையே சொல்லிச் சொல்லிதான் நைட்டெல்லாம் உயிரை வாங்குன. இன்னும் தெளியலையா? என்றனர் கோபம் கலந்த கோரசாக.




.

Saturday, July 24, 2010

கிஸ்-ஓ-தெரப்பி

                  முத்்...’
                  ஊடலுக்கு முடிவாகவும்..
                  கூடலுக்கு தொடக்கமாகவும் இருக்கும் இந்த முத்தத்தை அன்பின் வெளிப்பாடாக மட்டும் கொடுத்து வந்தோம்.. அதையே கொஞ்சம் உற்சாகமாய் ‘கிரியேட்டிவாக’ மாற்றினால்.. இன்னும் நன்றாக (வாழ்க்கை)இருக்குமே என்ற யோசனையின் விளைவு தான்.. இந்த ‘கிஸ்-ஓ-தெரப்பி’.. சில புதுமையான, குழந்தைத்தனமான, விளையாட்டுத்தனமான, ஏன் சில கூடலுக்கு தொடக்கமான முத்த முறைகளும் இதில் இடம்பெறப் போகின்றன. நீங்களும் கூட மல்லாந்து படுத்து யோசித்தோ அல்லது செயல்படுத்திக்(!) கொண்டிருப்பதையோ பகிர்ந்து கொள்ளலாம்..

               குறிப்பு - இந்த முத்தங்கள், தனது காதலர்களும், கணவன்-மனைவியும் செயல்படுத்தி பார்க்க மட்டுமே.. மற்றவர்களிடம் செயல்படுத்தி பார்ப்பதால் ஏற்படும் பின் (முன்) விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல... ஹி.. ஹி...


Elephant Kiss :

                    அதென்ன யானை முத்தம்னு மிரள வேண்டாம். முத்தம் கொடுத்துக்க போற ரெண்டு பேரும் எதிரெதிர சின்ன குழந்தைங்கள நாம யானை ஏத்திட்டு போவோமே அந்த மாதிரி போஸ்ல நின்னுக்கங்க. உங்க ரெண்டு பேரோட முகமும் ஒருத்தர ஒருத்தர் பார்க்குற மாதிரி வச்சுகங்க. இப்போ ஒருத்தர் மத்தவங்களுக்கு கொஞ்சம் முன் பக்கமா அசைஞ்சு முத்தம் கொடுங்க.. ‘எங்க முத்தம் கொடுக்கிறது’னு கேக்காதீங்க.. முத்தம்னாலே உதட்டுல கொடுக்கிறது தான். உங்களுக்கு டவுட் இருந்தா உங்க மொபைல எடுத்து 'Write Message'ல Dictionaryய On பண்ணிட்டு  Kissனு டைப் பண்ணி பாருங்க... என்ன ஆச்சரியம் Lipsனு வரும். So, ரெண்டு பேரும் லிப்ஸ சேர்த்து வச்சிகிட்டு யானை முட்டுற மாதிரி முன்னயும் பின்னயும் போய், போய் வந்து குடுக்கனும்... ம்... நமக்கு மூச்சு முட்டுதுப்பா... Reference வேணும்னா Five Star (தமிழ்) படத்துல திரு.. திருடா.. பாட்ட பாருங்க..



Book Kiss :
             
                    சில வீட்டுல சில சமயம் ஆணோ, பெண்ணோ புத்தகப்புழுவா இருப்பாங்க.. எப்பவும் நியூஸ்பேப்பரையோ, அல்லது கையில கிடைக்கிற புத்தகத்தை எடுத்து வச்சு படிச்சிட்டே இருப்பாங்க.. பார்ட்னர் சமையல் பண்ணுறது, வீட்ட ஒதுங்க வைக்கிறது, துவைக்கிறதுனு ஏதாவது வேலை பார்த்துகிட்டு இருப்பாங்க.. சில சமயம் இரண்டு பேருமே சேர்ந்து வேலை பார்த்துட்டு இருப்பாங்க. அப்படி வேலைபார்க்குற சமயங்கள்ல கொஞ்சம் ரிலாக்ஸா ஆகிக்கிட.. ஆள் இருந்தும் தனியா இருக்கிற மாதிரி பீல் பண்ணாம இருக்க..  வாங்குற முத்தம் தான் புத்தக முத்தம்.. இத வாங்க.. படிச்சிட்டிருக்கிற ஆள்கிட்ட திடீர்னு போய் நில்லுங்க.. அவங்க படிச்சிட்டிருக்கிற புத்தகத்த பிடுங்கியோ.. அல்லது ஏதாவது ஒரு பெரிய புத்தகத்தையோ எடுத்துட்டு போய் அவங்ககிட்ட கொடுத்தோ திறக்க சொல்லுங்க.. அதுல இரட்டை படையில வற்ற பக்கங்கள்ல இரண்டாவதா என்ன நம்பர் இருக்கோ அத்தனை முத்தங்களை கம்பல்சரியா கேட்டு வாங்கிக்கங்க.. (உதாரணத்துக்கு 46 வது பக்கம்னா 6 முத்தம்.. ) அப்புறமா வேலைய கண்டினியூ பண்ணுங்க... ஆனா பார்ட்னரால இனி படிக்கிறத கண்டினியூ பண்ணமுடியுமானு தான் தெரியல...



Speed-O-Meter Kiss :

                  ஸ்பீடாமீட்டர் கிஸ் என்றதும் பைக்குக்கும் கிஸ்க்கும் என்ன சம்பந்தம்னு உதட்ட சுழிக்க வேண்டாம்... சம்பந்தம் இருக்கு.. இப்போ பெரும்பாலான வீட்டுல கணவனோ மனைவியோ வேலைக்கு போக பைக்க, ஸ்கூட்டரை பயன்படத்துறது வழக்கம். அப்படி களைப்பா வேலைக்கோ.. வெளியவோ போயிட்டு வந்ததும் களைப்ப போக்க கொடுக்கிறது தான் ஸ்பீடாமீட்டர் கி்ஸ்.. இந்த கிஸ் கொடுக்க இரண்டு கன்டிஷன்கள் ஒன்று உங்களிடம் பைக் இருக்க வேண்டும்.. இரண்டு... அதன் ஸ்பீடாமீட்டர் ஓட வேண்டும். வெளியே சென்று வந்ததும்... அதி்ல் ஓடியிருக்கும் எண்களை எல்லாம் கூட்டி (உதாரணத்திற்கு 256891 கி.மீ என்றால் அதை 2+5+6+8+9+1= 31  அதையும் கூட்ட, 3+1 = 4 )  4 முத்தங்கள் கொடுத்து மனைவியோ, காதலியோ வரவேற்கலாம்... இன்னும் ‘தாங்கு சக்தி’ அதிகம் உள்ளவர்கள் 31 கூட கொடுக்கலாம்...

(முதல்ல ஸ்பீடாமீட்டரை சரிபண்ணனும்னு உங்க மைன்ட் வாய்ஸ் சொல்றது கேட்குது)
                        


(முத்தங்கள் தொடரும்..)



.

Thursday, July 22, 2010

‘அ’ ஜோக்

தாத்தா செத்து போனத துக்கம் விசாரிக்க பேரன் வந்திருந்தான்.

“பாட்டி, தாத்தா எப்படி செத்து போனாரு..?”

அதுக்கு பாட்டி சொன்னாள்...

“நானும் தாத்தாவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சரியா பகல் 12 மணிக்கு அப்படி இப்படி இருப்போம்...”

“இந்த வயசுலயுமா..”

“ஆமாடா... குறுக்க பேசாம கேளு...”

“ஓ.கே... ஓ.கே... சொல்லுங்க..”

“அதோ அந்த தெருமுனையில தெரியுது பாரு மணிக்கூண்டு அதுல 12 மணி ஆனதும் ‘டங்...    டங்....     டங்.....      டங்...’னு மணியடிக்கிற சத்தம் வரும். அப்போ அதுக்கு ஏத்த மாதிரியே அவரும் பண்ணுவாரு..

“அசத்தியிருக்காரு...”

“அன்னிக்கும் அப்படித்தான்.. 12 மணி ஆகப்போறப்போ நாங்களும் ரெடியா இருந்தோம்.. அப்போ பார்க்க ஒரு ஃபயர் எஞ்சின் வண்டி இந்த வழியா க்ராஸ் பண்ணுச்சு.... அவரும் மணிக்கூண்டுல தான் மணியடிக்க ஆரம்பிச்சிருச்சுனு நினைச்சு அந்த சவுண்டுக்கு ஏத்தமாதியே பண்ண ஆரம்பிச்சார்... அதோட போனவர் தான்...”

‘டன்..டன்..டன்..டன்.. டன்.. டன்.. டன்.. டன்.. டன்.. டன்.. டன்..’

“அந்த ஃபயர் எஞசின் மட்டும் வராம இருந்திருந்தா.. இந்நேரம் உயிரோட இருந்திருப்பார்... ம்...”



(குறிப்பு - எங்கோ படித்த ஆங்கில ஜோக்கின் தமிழாக்கம். இந்த ஜோக்குக்கு வர்ற ரெஸ்பான்ஸ பொறுத்து இந்த சேவைய (!) தொடரவா வேண்டாமான முடிவு பண்றேன்..)

Tuesday, July 20, 2010

ஆஃபர் (குட்டிகதை)

                             
                       ரம்யாவின் மொபைலில் இருந்த S.M.Sகள் தான் நீங்கள் கீழே பார்ப்பது.



ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..
ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ.. ப்ளீஸ் லவ் மீ..

Sender:
லூசு 2 (4.16 pm)


ரம்யா, லவ் கேட்டு வரக்கூடாது. ஆனா கேட்டாலும் வர மாட்டேங்குது.. அதான் வருத்தமா இருக்கு.. ப்ளீஸ் லவ் மீ..

Sender:
லூசு 2 (4.21 pm)


கணவனும் மனைவியும் ஒரு ஸ்கூட்டரின் இரண்டு சக்கரம் போன்றவர்கள். ஒன்று பஞ்சரானால் கூட அடுத்த அடி நகரமுடியாது. எனவே தான் புத்திசாலிகள் எப்போதும் ஒரு ஸ்டெப்னியை கூடவே வைத்திருக்கிறார்கள்.

Sender :
சுபா (5.47pm)


உனக்காகத் தான் நான் செல்போன் வாங்குனேன், சிகரெட்ட குறைச்சுகிட்டு காசு சேர்த்து லைப் டைம் வேலிடிட்டி போட்டேன். நீ என்னைய லவ் பண்ணுனா அப்புறம் 10 பைசால பேசலாம்னு யோசிச்சு உன் நெட்வொர்க்குக்கு மாறுனேன். எப்போதாவது மனசு மாறி போன் பண்ணுவ. ஒரு SMSஆவது அனுப்புவனு காத்திருக்கேன்... ஆனா இதுவரை பண்ணல..

Sender :
லூசு 2 (6.32 pm)



உனக்கு எப்படி வித்தியாசமா குட்மார்னிங் சொல்றது, குட்நைட் சொல்றதுனு யோசிக்கிறதுல டைம் வேஸ்ட் பண்ணிதான் படிக்க முடியாம போன எக்ஸாம்ல பெயிலானேன். ஆனா உன்கிட்ட இருந்து எந்த பதிலும் இல்ல.. ப்ளீஸ்.. ஒரே ஒரு SMS பண்ணு.. ‘ஐ லவ் யூ’னு..

Sender :
லூசு 2 (6.36 pm)


‘பார்க்’ல உட்கார்ந்து அப்பாவும் அவரோட குட்டி பையனும் பேசிக்கிட்டாங்களாம்..

சிறுவன் - அப்பா, நான் எப்படி பிறந்தேன்?
அப்பா       - ஆ..ங்.... இந்த பார்க்குக்கு ஒரு முறை நானும்  அம்மாவும்            வந்திருந்தோமா.. அப்போ ஒரு தேவதை வந்து ஒரு ஆப்பிள் கொடுத்துச்சு.. அத சாப்பிட்டதும் நீ பிறந்த..
சிறுவன் - நீங்க எப்படி பிறந்தீங்க?
அப்பா       - அதே மாதிரி தாத்தாவும், பாட்டியும் வந்திருந்தப்போ அந்த  தேவதை கொடுத்த ஆப்பிளை அவங்க சாப்பிட்டதும் நான் பிறந்தேன்..
சிறுவன் - அப்பா, எனக்கொரு சந்தேகம் நம்ம குடும்பத்துல யாருக்கும் மேட்.. *some text missing*

Sender :
அமுதா (7.29 pm)


ரம்யா, நான் என் லவ்வ எத்தனையோ முறை SMS மூலமா உனக்கு சொல்லிட்டேன். ஆனா நீ இதுவரை எந்த பதிலும் சொல்லல. இனியும் உனக்கு காத்திருக்கிறதுல பலன் இல்ல. உனக்கு உண்மையிலேயே என் மேல காதல் இருந்தா இன்னிக்கு நைட் 12 மணிக்குள்ள எனக்கு SMS பண்ணு. அப்படி பண்ணலைனா நீ என்னை லவ் பண்ணலைனு முடிவு செஞ்சுக்கறேன். அதுக்கு பிறகு என்ட்ட இருந்து SMS எதுவும் வராது. இது தான் என் கடைசி SMS. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ் லவ் மீ...

Sender :
லூசு 2  (7.54pm)


ஹாய் ரம்ஸ்.. இன்னிக்கு SMS மன்னன் என்ன சொன்னான்?

Sender :
காயத்ரி (8.15pm)


நிஜமாவா? திடீர்னு எப்படி இப்படி? வேற ஏதும் ஆஃபர் வந்திருக்குமோ? சரி விடு. அவன் கிடக்கான் 5.3. ஆறறிவுல அவனுக்கு கொஞ்சம் கம்மிடி.

Sender :
காயத்ரி (8.18pm)


ஒரு பொன்னு அவளோட ட்ரெஸ்ஸை எல்லாம் கழட்டி அவ பாய் பிரண்டு மேல போட்டபடியே சொன்னாள்..
“ நீ இப்போ என்னை உன் பொண்டாட்டி மாதிரி நினைச்சுக்க”
உடனே அவனும் தன்னோட ட்ரெஸ்ஸ எல்லாம் கழட்டிட்டு அவகிட்ட சொன்னான்..
“ஓ.கே. அப்போ ஒன்னு செய்.. ரெண்டு போ் டிரஸ்ஸையும் துவைச்சுடு”

Sender :
காயத்ரி (8.20pm)


ஹாய் செல்லக்குட்டி, என்ன பண்ற?

Sender :
9840865301 (10.23pm)


ஏன்.. ?

Sender :
9840865301 (10.24pm)


எப்படி டவுட் வந்தது?

Sender :
9840865301 (10.24pm)


ஓ.கே..
உம்ம்ம்ம்ம்மா..

Sender :
9840865301 (10.25pm)


இன்று முதல் நமது நெட்வொர்க்கில் ஒவ்வொரு  SMSக்கும் 50 பைசா வசூலிக்கப்படும். தடையில்லா சேவையை வழங்க இது அவசியமாகிறது. தொடர்ந்து எங்கள் சேவையை சிறப்பாக செய்ய உதவுவதற்கு நன்றி.

Sender :
ஏர்வாய்ஸ் (12.00 am)

Monday, July 19, 2010

விதி (கவிதை)

நாளை என் கதையொன்று பிரசுரமாகும் நாள்

நாளை எங்கள் தெருமுனை கிரிக்கெட் பைனலுக்கு
விளையாட வருவதாய் சொல்லியிருக்கிறேன்

நாளை ‘ரேங்க் கார்டு’ தரும் நாள்
விஷேசமாய் இந்தமுறை ‘ஆல் பாஸ்’
பக்கத்து பெஞ்ச் ஹரி
நாளை என்னிடம் வாங்கிய இருபது ரூபாயைத்
திருப்பித் தருவதாய் சொல்லியிருக்கிறான்

நான் ‘சைட்’டடிக்கும் லஷ்மி
நாளை என் காதலுக்கு
பதில் சொல்லவிருக்கிறாள்
ஐயோ!
இப்போதா வந்து தொலைய வேண்டும்
எனக்கிந்த சாவு



(இது என் ஆரம்பகால கவிதைகளுள் ஒன்று)
 
 
 
.

முரண் (கவிதை)

வயதுக்கு வந்த பெண்ணை
விளையாட விட மறுக்கும் மரகதமும்

பெண்கள் சீட்டில் உட்கார்ந்த ஆணை
பேருந்து கேட்க திட்டும் திவ்யாவும்

கவர்மெண்ட் மாப்பிள்ளைக்கு
50 பவுனும் 5 லட்சமும் வரதட்சனை தந்து
பெண்ணை கட்டிக் கொடுத்த பிரதீபாவும்

வயதுக்கு வந்த பெண்
அப்பாவின் மேல் தொற்றிக் கொண்டால்
திட்டித் தீர்க்கும் திலகாவும்

சளைக்காமல் கேட்கிறார்கள்
பெண்ணுக்கு சமஉரிமை



(இது என் ஆரம்பகால கவிதைகளுள் ஒன்று)
 
 
 
.

பெண்ணென்றால்.. (கவிதை)

எனக்குப் பெண்ணென்றால் ரொம்பப் பிடிக்கும்..

முதலில் இது அம்மாவில் தான்
ஆரம்பித்ததென நினைக்கிறேன்

தமபிக்கு பால்புகட்டும் போதும்
உச்சிமுகர்ந்து முத்தமிடும் போதும்
அருகில் அவள் சேலையில்
படுத்தபடியே நினைத்துக் கொள்வேன்
எனக்கும் இப்படித்தான் செய்திருப்பாளென்று

அவள் வாசனைதான் நான் முதலில் நுகர்ந்தது
என் முதல் மூச்சிலிருந்தே..

அடுத்ததாய்
என்னோடு மண்ணில் விளையாண்ட
என் சிறுவயது தோழி

அப்போதெல்லாம் நாங்கள்
ஆடையணிந்திருந்தோமா.. ஞாபகமில்லை
ஆனால்
அவள் கோபத்தில் இடித்துச் சென்ற
என் மணல்வீடு மட்டும் ஞாபகத்திலுள்ளது
இன்றும் சிதையாமல்..
பருவத்திற்கு வராத பள்ளித்தோழிகளோடு கைகோர்த்து
“ஒரு குடம் தண்ணியெடுத்து” விளையாடும் போதும்

யாரோடும் பங்கிட விரும்பாத தேங்காய்மிட்டாய்
அவளுக்காய் என் சட்டைமடிப்பிற்குள் கடிபடும் போதும்
என்னவென்றே தெரியாத ஏதோவொரு ஈர்ப்பில்
அவளும் நானும் அடிக்கடி பார்த்துக் கொள்வோமே..
அப்போதும் கூட

பெண்ணென்றால் ரொம்ப பிடிக்கும்

லேசாய் எனக்கு மீசை துளிர்விட்ட போது
காண்பதெல்லாம் பெண்ணின் வடிவம் தான்
கோவில் சிலைகளுக்கு வெட்கப்பட்டேன்
ஆடைவிலகி எந்தப் பெண்ணை காண நேர்ந்தாலும்
கண்களுக்குள் இதயத்துடிப்பும்
இதயத்தில் இமைத்துடிப்பும் உணர்ந்தேன்

அப்போதெல்லாம்
மறைத்து வைக்கப்படுபவை எல்லாம் அழகாய்த தெரியும்
எனக்கு அழகாய்த் தெரிபவை எல்லாம்
மறைத்து வைக்கப்பட்டிருக்கும்

ஏவாள் மீது கோபம் வரும்
துறவிகளை கிறுக்கரென்பேன்
மறைவிடங்கள் மகிழ்ச்சி தரும்
பேயில் கூட பெண் பிடிக்கும்

இந்த காலத்தில் தான்
பூமியை பெண்ணென்று ஒப்புக் கொண்டேன்
காரணங்கள் நிறையவுண்டு.. சொல்வதற்கில்லை
இப்படியாய் அப்பொழுதும்

பெண்ணென்றால் ரொம்ப பிடிக்கும்

சொர்க்கத்தையே நிச்சயித்து
சொந்தங்கள் பல கொண்டு வந்து
என்னை முழுமை செய்ய மனைவி வந்தாள்

அவள் வந்தபின் சமையலின் ருசி மட்டுமல்ல
சந்தோஷத்தின் ருசி கூட மாறித்தான் போனது

அவள் காட்டும் அன்பில்
மறந்து போய் அவ்வப்போது நானும் கூட
என் குழந்தைபோல்
“அம்மா”வென அழைத்ததுண்டு
அப்போதும் கூட

பெண்ணென்றால் ரொம்ப பிடிக்கும்

“பெண்ணென்றால் ரொம்ப பிடிக்கும்”
அடிக்கடி நான் சொல்வதற்கேற்ப
கையில் வந்தது குழந்தையொன்று

அதனோடு நடைபழகி..
வாயிலிருந்து விரலெடுத்து..
பேசக்கற்று..
சோறுண்டு..
படுக்கை நனைத்து..
உடைமாற்றி..
ஒன்றாய் தூங்கி..
பாடம் படித்து..
விளையாடிக் களைத்து..
முத்தங்கள் பரிமாறி..
கட்டிக்கொண்டு நடந்து..
கடைசியில் கண்ணீரோடு
கணவனுக்காய் விடைகொடுக்கும் போதும்

பெண்ணென்றால் ரொம்ப பிடிக்கும்

நான் கோலூன்றி நடக்கும் வேளையில் கூட
எனக்குத் தோள் கொடுக்கிறாள் என் மனைவி

இப்போதெல்லாம் இவள் பார்வையில்
அன்பையும் கடந்து ஏதோ அழகிருப்பதைக் காண்கிறேன்
அவளது ஒவ்வொரு அணைப்பிலும்
பாசத்தையும் தாண்டி ஏதோ பற்றிருப்பதைப் பார்க்கிறேன்

பேரனும், பேத்தியும் ஓடிவந்து கட்டிக் கொண்டார்கள்
என் மடியில் பேத்தி..
அவள் மடியில் பேரன்..
நான் சொன்னேன்,
“காரணம் தெரியாது.. ஆனால்,
எனக்குப் பெண்ணென்றால் ரொம்பப் பிடிக்கும்“

மெதுவாய் புன்னகைத்த அவள்
அப்போதும் கூட எதுவும் சொல்லவில்லை





(இது என் ஆரம்பகால கவிதைகளுள் ஒன்று)



.

பாடத்திட்டம் (கவிதை)

இன்று வகுப்பறையில்
பூனையிடமிருந்து தப்பி வந்த எலி ஒன்று
தமிழய்யரவிடம் தஞ்சம் புகுந்தது

“உயிர்களை கொல்வது பாவம்” என்று
பாடம் நடத்தி
பரிவுடன் பக்கத்தில் வைத்து பாதுகாத்தார்

அடுத்த பாடவேளைக்கான மணியடித்தது தான் தாமதம்
வேகமாய் வந்த விலங்கியல் ஆசிரியர்
எலியின் கைகால்களை விரித்து
ஆணியடித்து அறுத்து அழகாய் விளக்கினார்
“இதுதான் இதயத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம்”



(இது என் ஆரம்பகால கவிதைகளுள் ஒன்று)
 
 
 
.

நினைவலைகள்.. (கவிதை)

மழலையர் பள்ளிக்கு
மணிக்கணக்கில் தயாராகி
அழுதுகொண்டே நான் சென்ற மாட்டுவண்டி..
தினம் ஒரு “பாட்ஜ்” தொலைத்து
டீச்சரின் அடிக்கு பயந்து
திட்டுடன் அன்னையிடம் வாங்கிய ஒரு ரூபாய்..

அதிகாலை வேளையிலே
ஆச்சியுடன் அளவளாவி
நான் போகும் பால்பண்ணை பயணம்..

என் முகம்பிடித்து தலைவாரவும்
தொடையில் அடித்து பாடம் சொல்லவும்
என் சிற்றன்னை பயன்படுத்திய சீப்பு..
வெள்ளையடிக்கும் பண்டிகை நாளில்
வீட்டினை ஒதுங்க வைக்கையில்
பார்த்து மகிழ்ந்த பழைய புகைப்படங்கள்..
சிறாரோடு சேர்ந்தமர்ந்த
சினிமா கதை பேசி
சிரித்து சிரித்து வந்த கண்ணீர்..

பெண்வேடம் நான் அணிந்து
பள்ளிவிழாதனில் கலந்து
பாராட்டுடன் வாங்கிய பரிசு..

செய்திகள் வாசிக்க டி.வி.யில் வருவது
ஆணென்றும் பெண்னென்றும் கருத்து சொல்லி
போட்டியிடட பால்ய நண்பர்கள்..

தூரத்தில் இருந்து வந்து
இனந்தெரியா பயமேற்படுத்தும்
இரவுநேரத் தொழுகை ஒலி..

மேளக்காரன் கைகள் போல
விரலுக்கொன்றாய் மாட்டி
கடித்து ருசிபார்த்த அப்பளப்பூக்கள்..

விடுமுறையில் வரும் உறவுகளுடன்
முதல்நாள் ஒட்ட மறுத்து
கடைசிநாள் பிரிய மறுக்கும் அழுகை..

இன்னும்.. இன்னும்..

அடுக்குமாடிக் குடியிருப்பின் ஓர் அறைக்குள்
தூக்கம் வராமல் நான் புரண்டு படுக்கையிலெல்லாம்
இந்த பழைய ஞாபகங்கள் தான் வந்து
தாலாட்டிப் போகின்றன



(இது என் ஆரம்பகால கவிதைகளுள் ஒன்று)
 
 
.

ஒரு கவிஞனின் கதை (கவிதை)

பள்ளிப் போட்டியில் பரிசு வாங்கி - அதற்கென
வீட்டில் கொஞ்சம் பாராட்டு வாங்கி கூடவே
“உருப்பட வழியைப் பார்” என்ற பேச்சும் வாங்கினேன்

வெளியான முதல் கவிக்கு கிடைத்த பணம்..
மடங்காமல் பத்திரமாய் நோட்டுத் தாளிற்கிடையே
பார்த்து மகிழ மட்டும் பயன்படுத்திக் கொண்டேன்
பட்டினியாய் கிடந்த நாட்களிலும்

படைப்பொன்றை அனுப்பிவிட்டு
பலநாட்கள் காத்திருந்து - இதழ்
வெளியாகும் முன்தினம் இரவெல்லாம் விழித்திருந்து
பக்கங்களை புரட்டி புரட்டி ஏமாந்த நாட்கள் பல

பாவேந்தர், பாரதி பாடல்களுக்கு பக்கத்திலும்
கணிதமேதை ராமனுஜத்தின் கணக்குகளுக்கு இடையேயும்
நியூட்டனின் ஈர்ப்புக்குக் கீழும்
ஹிட்லரின் கொடுங்கோலுக்கு மேலும்
என் படைப்பும் இடம் பெற்றிருக்கும் பாடப்புத்தகத்தில்
கசிந்த என் பேனா முனையால் கிறுக்கலாய்

எனக்கு பிடிக்காமல் இல்லை..
படிப்பவர்க்கு பிடிக்கவே மாற்றிக் கொண்டேன்
பார்த்து பார்த்து தந்தை வைத்த
எனது பாட்டனார் பெயரை

உண்ணும்பொழுதும் உலவும்பொழுதும்
காலைக்கடனை முடிக்கும்பொழுதும்
கட்டிலின் மேல் கிடக்கும்பொழுதும்
எழுத நினைத்து மறந்த கவிகள்
ஏராளம்.. ஏராளம்..

விழுந்த மழையின் அழகு கண்டு
குறிப்பெடுத்த கவிகள் எல்லாம்
நனைந்து மழையில் அழியக்கண்டு
வருந்தியழுத நாளுமுண்டு

கருதேடி, கருதேடி
கவியெழுத கணக்கின்றி செலவழித்த காலத்தில்
தொழிற்கல்வி கற்றிருந்தாலும்
தொல்லையில்லாது பிழைத்திருப்பேன்
வயது முதிரா காலத்தில்
கற்பனைக் காதலி பற்றி
எழுதிய கவிதைக் கட்டு
கண்டிப்பான என்
தந்தையின் கண்ணில் பட்டு
கன்னத்தில் விழுந்த அடிகள்
இன்னும் என் நினைவில்.. தழும்புகளாய்

அப்படி, இப்படி, எப்படியோ
அம்மாவின் ஞாபகமாய் வைத்திருந்த
அரைபவுன் தோடும், அரைஞான் கொடியும்
முதல் கவிதை தொகுப்பாய் மாற

நானும் ஆகிவிட்டேன் ஒரு கவிஞனாய்





(இது எனது ஆரம்பகால கவிதைகளில் ஒன்று)



.

காவல் தெய்வம் (கவிதை)

ஊருக்கு வெளிய
ஒசரமா ஒரு சாமி

காரை பேந்து
கலர் கலரா பெயிண்டடிச்சு

ஒரு கையில வெட்டருவா
அதுல அங்கங்க பறவையெச்சம்

மறுகையில தீச்சட்டி - அதுல
குருவியிருக்கு குடும்பமா கூடுகட்டி

செல்லாத சில காசோட
சீலுவச்ச உண்டியலு
வேட்ட நாயி சாமி கூட
ஒத்தகாலு ஒடஞ்சு போயி
எப்பவோ போட்ட மாலை
நாரு மட்டும் கழுத்துல

பொங்க வச்சு பூச செய்ய
வரும் சனங்க வருசத்துக்கொருக்க

புயலையும் மழையையும்
பொறுக்கத்தான் செய்யனும் சாமி

பாவம் சனங்க என்ன செய்யும்
ஊர காக்கும் காவல் தெய்வம்

நானும், இவளும், அவளும்... (கவிதை)

ஒவ்வொருமுறை கொசுவர்த்தி சுருளின்
சாம்பல் உதிர்ந்து விழும்பொழுதும்
சற்றே பிரகாசமாய்
இவள் முகம்

எங்களின் இன்பக் களியாட்டத் தருணங்களின்
பெருமூச்சுக் காற்றின் ஓசைக்கிடையே
எழும் பேச்செல்லாம்
அவளை பற்றியதாகவே இருக்கும்

அவளது அழகு..
அவளது பார்வை..
அவளது ஈர்ப்பு..
அவளது காதல்..
இப்படியாக..

அவளிடையே எனக்குள்ள காதலின் நெருக்கம்
இவளிடையே எனக்குள்ள இடைவெளியி்ல் விளக்கப்படும்

எங்களின் காதலின் ஆழம்
இவளின் ஆழத்தில் அறிவிக்கப்படும்

இப்படித்தான்
அவள் மீதுள்ள எனது காதல்
இவளுக்கு சொல்லப்பட்டது.. படுகிறது

சாத்தானின் அகராதி (கவிதை)

நண்பனின் அழகான மனைவி..

காதலுக்கு முன்னும் பின்னும் காதலி..

அறியா வயதில்
சிறு சீண்டல்களுக்கு ஒத்துக் கொள்ளும்
உடன்படிக்கும் மாணவி..

அறிந்தும் தப்பு செய்யத் தூண்டும்
அடுத்தவீட்டானின் துணைவி..

ஜாடைமாடையாய் பேசும்
சகோதரியின் சினேகிதிகள்..
அடிக்கடி சிந்திக்க நேர்ந்து
அவ்வப்போது வார்த்தைகள் பேசி
பிரிந்து சென்றுவிடும் பிரயாணிப்பெண்..

இரட்டையர்த்த பேச்சுக்கும்
இங்கொன்றும் அங்கொன்றுமாய் உரசலுக்கும்
அனுமதிக்கும் அலுவலக பணிப்பெண்..

மனைவியாகாமல் போன
மற்ற பெண்கள்..

இவர்களுக்கெல்லாம் இன்னொரு பெயர் வைத்தால்
தோழி



.

நாளும் நடப்பவை (கவிதை)

சாலையில்..
எதிர்ப்பட்டு கையேந்தும் பிச்சைக்காரனை
ஏளனமாய் ஆராயும் மனம்

உண்மையில் ஊனமா..
ஊரை ஏமாற்றுகிறானா..

காசு போடுவதா..
கண்டுகொள்ளாமல் விடுவதா..
போடுவதானால் எவ்வளவு..

சில்லரையாக இருக்குமா..
சில்லரையேனும் இருக்குமா..

யாரேனும் கவனிக்கிறார்களா..
எனைப்பற்றி ஏதேனும் நினைப்பார்களா..

இப்படியாய் யோசனையில் நான் நின்றிருக்க..
அவன் என்னை விட்டு நகர்ந்திருந்தான்


.

சுவாஸம் தேடும் வாசம் (கவிதை)

வாசனைகள் தீராதிருக்க ஏதேனும் வழியுள்ளதா
இருந்தால் சொல்லுங்கள்

சேமிக்க நிறையவுள்ளது என்னிடம்
என் இதயப் பெட்டிக்குள் அவை இற்றுப் போகின்றன

அனைத்தும் மெல்லியவை
அடிக்கடி எடுத்து அனுபவிக்க வேண்டியவை

முகம் புதைத்துப் படுத்த
அம்மாவின் புடவை வாசனை..

வீட்டில் நட்டு வளர்த்த ரோஜாவின்
முதல் மொட்டு விரிந்த வாசனை..

வேலை முடித்து வரும் அப்பாவின்
தோளில் சாய்கையில் வீசும் வியர்வை வாசனை..

பள்ளிப்பருவ நோட்டுப் புத்தகத்தில்
பக்கம் பக்கமாய் நுகர்ந்த வாசனை..

படித்து முடித்து பரணில் போட்ட
பழைய புத்தக வாசனை..

அடிக்கடி திறந்து அந்தரங்கங்களை
அசைபோட்டுப் பார்க்கும் அலமாரி வாசனை..

முதல் மோகத்தின் போது
மூளை தொட்ட முத்த வாசனை..

முடிந்தால் காற்றை நிறுத்தி விடுங்கள்
அதுதான் என் முதல் எதிரி

கொஞ்ச காலத்திற்குத் தான்
என் மூச்சுக் காற்று நிற்கும் வரை.



.

தேடல்.. (கவிதை)

ஒவ்வொருமுறை வெளியே செல்ல நேர்கையிலும் தேடுகிறேன்

கடக்கும் வாகனங்களின்
சன்னலோர முகங்களில்..

வெயிலுக்காய் புத்தகத்தில்
முகம் மறைப்பவர்களில்..

பேருந்து நிறுத்தத்தில்
பின்பக்கம் காட்டிப் பேசிக் கொள்பவர்களில்..

தொலைவில் செல்லும்
ஒற்றை உருவத்தில்..

மழையைக் காரணங்காட்டி
குடையால் முகம் மறைப்பவர்களில்...

கவனித்துப் பார்க்கும் முன்பே
கடைக்குள் நுழைந்தவர்களில்..

மங்கிய தெருவிளக்கொளியில்
தெளிவின்றித் தெரியும் முகங்களில்..

இன்னும்.. இன்னும்..

முயற்சித்துப் பார்த்து பின் முகம் சுளிக்கிறேன்
இல்லையில்லை
இதுவல்ல நான் தேடும் முகமென்று
ஒவ்வொரு எனது பயணத்திலும் வேகம் காட்டுகிறேன்
வேகமாய்ச் சென்றால் பிடித்துவிடலாமென்று
ஒருவேளை அந்தமுகம் எனக்குப் பின்னால் வந்தால்..?!
வேகம் குறைத்துப் பின்
மெதுவாய்த் தொடரும் என் பயணம்

நான் போகும் பாதை
இரண்டு மூன்றாய் பிரிந்துவிட்டால் இன்னும் குழப்பம்
எதில் சென்று தேடுவதென
ஒவ்வொரு பாதையிலும் நுழைந்து
சிறிது தூரம் சென்று
பின் திரும்பி விடுகிறேன்

ஒருவேளை அந்த பாதையில் போயிருக்கக் கூடுமோ?

இப்படியாய் இப்போதும் கூட
வெளியே செல்லும்பொழுதெல்லாம் தேடுகிறேன்

அந்த “யாரோ”வை

ஒரு மழைநாளில்.. (கவிதை)

கண்ணில் பட்ட கம்பியில் எல்லாம்
குறுக்கும் நெடுக்குமாய் கயிறு கட்டி
வீட்டுக்குள் துணி உலர்த்தினர் சிலர்

பின்வாசல் வழி வந்த நீரை
முன்வாசல் வழி வெளியேற்ற
பக்கெட், பாத்திரம், பாதியான குடம் கொண்டு
இடைவிடாது முயன்று இடுப்பொடிந்தனர் சிலர்

கைபேசியின் கடைசிக் கோட்டு லோ-பேட்டரியில்
சிக்னலுக்காய் மொட்டைமாடி ஏறி நின்றும்..
கடுகுடப்பாவில் கண்டெடுத்த காசெடுத்து
காயின்பாக்ஸ் தொலைபேசி கண்டுபிடித்தும்..
யார் யார்க்கோ லைன்போட்டுப் பேசிடுவார்
தான் இருக்கும் ஏரியா நிலவரத்தை சிலர்

இரண்டாம் ட்யூ கட்ட எடுத்துப்போன பைக்
இடுப்பளவு தண்ணிரில் இருமிக்கொண்டு நின்றுவிட
கண் மறைக்கும் மழைநீரை கையால் துடைத்துக் கொண்டு
பல்சரை தள்ளிப் போவான் ஒரு பச்சை சட்டைக்காரன்

ட்ரைனேஜில் சுழன்று இறங்கும் மழைநீர்..
சிறுவர்கள் தள்ளிச் செல்லும் ஆட்டோ..
ஒற்றைச் செருப்பைத் தேடும் கிழவன்..
சுடிதார் ஒட்டிப் போகும் பெண்கள்..
சேலை தூக்கி நடக்கும் மாமியென
மழைக்கு ஒதுங்கியபடி வேடிக்கை பார்த்து
தம்மடித்து டீக்குடித்து சூடேற்றிக் கொள்வர் சிலர்

டீக்கடை செய்தித்தாளில் சேர்த்த விவரம்
உள்ளங்கை ரேடியோவி்ல் கேட்ட செய்தி
குத்துபாடல்களுக்கு இடையே குத்துமதிப்பாய் பார்த்தவை
காற்றுவாக்கில் காதில் விழுந்த புரளியென
குடைகீழ் நின்று கூடிப்பேசி பிரிவர் சிலர்

ஊரெல்லாம் இப்படி ஒவ்வொரு வேலை பார்க்க
நான் அரையிருட்டில் மறைவாய் நின்று
முட்டிய ஒன்னுக்கை முற்றத்திலேயே போனதை
யார் பார்த்திருக்கப் போகிறார்கள்..




(மறக்காமல் க.க.போ.கவும்.)
(ருத்துக்களை ச்சிதமாகபதிந்து போகவும்.)


.

நியூட்டனின் 3ம் விதி (கவிதை)

வீடு திரும்பும் அப்பாவிடம் ஓடிச்சென்று
கழுத்தைக்கட்டிக் கொண்டு
காதுகளி்ல் கிசுகிசுப்பேன்

“பட்டம் ஒன்று வாங்கித்தாயேன்”
“பைசா இல்லை”யென பதில் தந்து
என்னையும் உற்சாகத்தையும்
இறக்கிவிட்டுப் போவார்

கதவுக்குப் பின்நின்று
கனவுகளையும் சுற்றுலாவுக்கான கடைசி நாளையும்
தயங்கியபடி சொல்வேன்

“அடுத்தமுறை பார்த்துக்கலாம்”
அப்போதும் அதே பதிலை அழுத்தமாய் சொல்லிப் போவார்
சைக்கிளுக்கும் சர்க்கஸ்க்கும்
சந்தோஷ சினிமாவுக்கும்
பேனாவுக்கும் கிரிக்கெட்பேட்டிற்கும்
பிறந்தநாள் பரிசுக்கும்
பணமில்லை என்பதை பதிலாய் தந்த அப்பாவுக்கு
இன்று நான் சொல்கிறேன்

“பணம் எவ்வளவு வேணுமோ வாங்கிகோங்க
பார்க்க வரமுடியாது”




"அன்பு நிராகரிக்கப்படும் போது ஏற்படும் வலி நிரந்தரமானவை.. அவை நிலவில் விழுந்த கறையாய்.. வாழ்வின் தனிமை இருட்டின் பொழுதெல்லாம் சற்று பிரகாசமாய் தெரிந்து நம்மை பயமுறுத்தும்..




.

வேலைதேடும் பேச்சுலரின் ஒருநாள் இரவு.. (கவிதை)

ஒரு பேச்சுலரின் மனம் எவ்வளவு கலைந்து கிடக்கிறது என்பதை, அவன் இருக்கும் அறை கலைந்து கிடப்பதைக் கொண்டு அளவிடலாம். அந்த குப்பைக்குள் நீங்கள் நீலப்படங்களையும் காணலாம்.. நீட்ஷேவையும் தேடலாம். உங்கள் கண்ணில் முதலில் படுவதைக் கொண்டு அவனை முடிவு செய்யாதீர்கள்.. இன்னும் சொல்லப்போனால் பேச்சுலர் அறையில் தான் ஒருவன் அசலாய் இருக்கிறான். அதை நீங்கள் இந்த கவிதையில் உணரலாம்...



கவிழ்த்து வைக்கப்பட்ட “ஜீ.கே.டுடே”க்கும்
“காம்படீஷன் சக்ஸஸ்”க்கும் இடையே
சுற்றிச் சுற்றி வரும்
கொசுக்களின் ரீங்காரத்தோடு
“ரீசனிங்”கின் ஐந்தாவது பட சிந்தனை

“ஆஸ்ட்ரே”வாகிப் போன
“கோல்கேட்” டப்பாவின் கீழ் படபடக்கும்
ஊரிலிருந்து வந்திருக்கும் லெட்டர்
அதில்
உறவினர் யாருக்கேனும் கல்யாணம் நடந்திருக்கும்
நண்பர்கள் யாருக்கேனும் வேலை கிடைத்திருக்கும்
“உனக்கு எப்போது?” என்னும் வார்த்தைகள்
எழுத நினைத்து விடப்பட்டிருக்கும்

ஒவ்வொரு கடிதத்திலும் இடம்பெற்றிருக்கும்
வார்த்தைகூட மாறாமல்
உடம்ப பார்த்துக்கோவும்
கடவுள் சீக்கிரம் நல்ல வழிகாட்டுவாரும்
கடைசி வரிகளாய்

வார இதழின் நடுப்பக்கங்களிலும்
ஜன்னலின் வழியே தெரியும் வானவெளியிலும்
தெரிந்தும் மறைந்தும் விளையாடிப் போகும்..
வருங்கால மனைவி பற்றிய கற்பனைகள்

குல்பி ஐஸ் மணியோசை..
எப்.எம். பாடலோசை..
எங்கேயேனும் கேட்கும் அலாரஓசை..
மற்றும்
மனதினுள் ஒலிக்கும் மௌனத்தின் ஓசை..
இப்படியாய் நகரும்

வேலை தேடும் பேச்சுலரின் ஒவ்வொரு இரவும்



.

சூழல் (கவிதை)

காலைப் புல்லின் பனித்துளி..
பூவைச் சுற்றும் பட்டாம்பூச்சி..

சாரல் மழை வானவில்..
மழைநீரில் காகித ஓடங்கள்..

குழந்தையின் தளிர்நடை..
அழகிய பெண்ணின் புன்னகை..

சாயுங்கால வானம்..
கடற்கரை காலடிகள்..

இலையுதிர்கால மரத்தடி..
மெழுகுதிரி வெளிச்சத் தனிமை..

மொட்டைமாடி நிலவு..
சின்னச் சின்னக் கண்ணீர்த்துளிகள்..

“சே... எனக்குத்தான் கவிதையெழுத வரவில்லை”



.

சென்னை வாழ்க்கை (கவிதை)

சாலையோர உணவகத்தில் நின்று
இட்லிக்கு சாம்பார் கேட்கையில்
“சாக்லேட்டை உள்ளே வந்து தின்னு” என்னும்
அம்மாவின் வார்த்தைகள்
நினைவிற்கு ஏனோ வருகின்றன



.

முதல் கவிதை (கவிதை)

அது அம்மாவைப் பற்றியதாகவோ அல்லது
தாமரைப்பூவை பற்றியதாகவோ இருக்கலாம்

அதிகபட்சம் மூன்று வரிகளில்
ஓரிரு எழுத்துப் பிழைகளுடன் இருந்திருக்கும்
அது எப்படித் தோன்றியிருக்கும்..? தெரியாது
எங்கேயேனும் கேட்டதை எழுதியிருக்கலாம்
எதையாவது படித்ததன் பாதிப்பில் எழுதியிருக்கலாம்
அது இப்போது ஞாபகமில்லை
ஆனால்..

ஒவ்வொரு கவிதையின் கடைசி வரியை முடிக்கும் போதும்
நெஞ்சில் ஓர் ஓரமாய் உறுத்தும்

“அந்த கவிதை எழுதிய நோட்டை இன்னும் கொஞ்சம்
பத்திரமாய் பாதுகாத்திருக்கலாம்” என்று..

ஹைக்கூsss..

               
                          இவற்றை ‘ஹைக்கூ’ என்று சொன்னால் ஜப்பானிய சாமிக்கள் கண்ண குத்திரும்.. ஏனென்றால் ‘ஹைக்கூ’ எழுத பல விதிமுறைகள் உண்டு. மேலும் ‘ஹைக்கூ’ ஜப்பானிய கவிதை வடிவம்.. அதை தமிழில் செய்வது ரொம்ப கஷ்டம். நம் நாட்டில் பல சிறிய, பெரிய கவிஞர்கள் முயற்சி செய்துள்ளனர். புத்தகமும் வெளியிட்டுள்ளனர். அவை எல்லாம் மேற்சொன்னபடி முயற்சிகளே.. பெரும்பாலும்.. அவை உண்மையிலேயே ‘ஹைக்கூ’ இல்லை. இதுவும் கூட ‘ஹைக்கூ’ இல்லை. ‘ஹைக்கூ’ மாதிரி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.. ‘ஹைக்கூ’வின் முக்கிய அம்சம்.. தான் பார்த்ததை, எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல உள்ளதை உள்ளபடி சொல்வது.. அதை படிக்கும் ரசிகனும் அதை உணர்ந்தால் அந்த கவிதையின் வெற்றியாக அது கொள்ளப்படும்.. நான் முயற்சி செய்தவை சில உங்கள் பார்வைக்கு...




ஓய்ந்தது மழை
தேங்கி நின்ற நீரில்
சிதறிய வானத்துண்டுகள்







காரை பெயர்ந்த
பழைய சுவற்றில்
சித்திரங்கள்







கடக்கும் ரயில் பெட்டிகளின்
எண்ணிக்கை விட்டுப் போனது
ஜன்னலோரமாய் பெண்








இலைகள் விடுபட்ட மரத்தில்
மாட்டிக் கொண்ட
பட்டம்









அந்த வீட்டைக்
கடக்கும் பொழுதெல்லாம்
அதே வாசனை








இந்த மழைக்காற்று
சுகமாய் இல்லை
சிகரெட் புகை










கனவு கைகூடும் நேரத்தில்
எங்கோ அடிக்கிறது
அலார கடிகாரம்









படிவைத்து மணல் வீடு
பக்கத்திலே பள்ளிச் சிறுமி
முன்னேறும் கடலலை











விடிந்த பின்னும்
அணைக்க மறந்த தெருவிளக்குகளோடு
நிலா

அம்மு அந்தாதி - 4 (கவிதை)

.

ஒவ்வொரு மழையின் போதும்
நனைய நீ அடம்பிடிப்பாய்

அன்பாய் அதட்டி மறுக்கும்
அம்மாவின் குரல்
மேகமெல்லாம் வருத்தப்பட்டு
கண்ணீர் சிந்தி வான் திரும்பும்..

அன்று நீ வீதி வழி
வீடு திரும்பிக் கொண்டிருந்தாய்
தொலைவில் பார்த்த மேகக்கூட்டம்
ஓடி வந்து சூழ்ந்து கொண்டது
பின்
மழை உன்னில் நனைந்து சென்றது



.

அம்மு அந்தாதி - 3 (கவிதை)

.

இருவரும் கைகளை இறுகப் பற்றி நடந்தோம்
கூட்டத்தில் தொலைந்துவிடாமல் இருக்க நீயும்..
உன்னில் தொலைந்து போனதால் நானும்..


.

அம்மு அந்தாதி - 2 (கவிதை)

.

இரவு வந்த கனவில்
பேய்களைக் கண்டு
வருத்தத்தில் இருப்பாய்
பேய்களோ..
தேவதையைக் கண்ட
மகிழ்ச்சியில் இருக்கும்


.

அம்மு அந்தாதி - 1 (கவிதை)

.
குட்டி குட்டியாய் பூச்செடிகள்
நட்டு வளர்க்கிறாய் தொட்டிகளி்ல்
‘பூக்கள் ஏன் பறிப்பதில்லை’யெனக் கேட்டால்
‘வேண்டாம் வலிக்கும்’ என்கிறாய்
பூவுக்கா.. உனக்கா..


.

காதலுதிர்காலம் - 4 (கவிதை)

நீ திருமணமாகிப் போகும் நாளில்

உன் வீட்டில்
மறந்து போய் விட்டுச் சென்ற
நம் காதல் கணங்களை
ஓடியோடி சேகரிக்கிறேன்

காலை எழுந்து..
கணவனுக்கு காபி கொடுத்து..

உணவாக்கி..
உடைக்க சுறுக்கெடுத்து..

பையனை பள்ளிக்கு அனுப்பி..
பக்கெட் துணிகள் துவைத்து..

பாத்திரம் கழுவி எடுத்து..
பால் பாக்கெட் வாங்கி பத்திரப்படுத்தி..

உணவை உண்டு முடித்து..
மிஞ்சும் உணவை சுண்ட வைத்து இறக்கி..

மங்கையர் மலரில் கதைபடித்து..
மாலை கோலத்திற்கு குறிப்பெடுத்து..

பின்
மதியம் போடும் குட்டி தூக்கத்திற்கு முன்

நினைவு வந்து நீ கேட்டால் கொடுக்கலாம் என்று


.
(கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு.. So..கருத்து சொல்லுங்க..)


.

காதலுதிர்காலம் - 3 (கவிதை)

உச்சிவெயில் நாள் ஒன்றில்
வீதியெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கும்

தெருநாய்கள் நிழல் பார்த்து
அங்கங்கு படுத்துறங்கும்

சூரியன் மட்டும் எனைத்தேடி வந்து
தலையில் கொட்டிவிட்டு சிரித்துப் போகும்

துரித உணவகங்களும் தேனீர் கடைகளும்
அருகில் வராதேயென அனல் அடிக்கும்

உன் வீதிகடக்கும் போதெல்லாம்
பாதங்களின் வேகம் பாதியாய் குறையும்

சாலைகளில் தெரியும் கானல்நீர் போல்
உன் நினைவுகள் மேலெழும்

எதிர்ப்படும் உருவங்களில் எல்லாம்
உன் முகம் தேடும் கண்களுக்கு

உள்மனம் மெதுவாய்ச் சொல்லும்..
சின்னதாய் சில கொலைகள் செய்தால் தப்பல்ல என்று

காதலுதிர்காலம் - 2 (கவிதை)

செல்பேசியின் ஒவ்வொரு அழைப்பிலும்
உன்னையே எதிர்பார்க்கும் மனம்

தோன்றும் எண்களுக்கெல்லாம்
உனதுருவம் கொடுத்துப் பார்க்கும் கண்கள்

காதலை எதிர்பார்த்து
ஓடிப்போய் ஆவல் எடுக்கும்

எதிர் முனையில்

நாராசமாய் ஒரு குரல்
நலம் விசாரிக்கும்

‘நாசமாய் போ’ என பதிலளித்துவிட்டு
இதயம் இன்னும் கொஞ்சம் செத்துப் போகும்.

தேடலும்.. தொலைதலும்.. (கவிதை)

கவிதை தேடி அலைந்த ஒரு காலத்தில் தான்
நான் உன்னைக் கண்டேன்

அப்போது முதல்
நான் தொலைந்து போனேன்
அதன் பின்
என்னைத் தேட ஆரம்பித்தேன்
என்னைத் தேடும் தேடலின்போதெல்லாம்
நீயே கிடைத்தாய்

பின் அதுவே சுவாரஸ்யமாகிப் போக

என்னைத் தேடுவதை விடுத்து
உன்னைத் தேட ஆரம்பித்தேன்

நீயோ நான் தேட ஆரம்பித்தவுடன்
தொலைந்து போயிருந்தாய்

இருந்தும் தேடிக்கொண்டே இருக்கிறேன்

ஆனால்

கவிதைகள் மட்டுமே கிடைக்கின்றன

காதலுதிர் காலம் (கவிதை)

விரல்கள் கடித்து வெட்கப்படு

கண்கள் விரித்து ஆச்சரியம் காட்டு
கைகள் அசைத்து சைகை தெரிவி

சொற்களில் கொஞ்சம்
புன்னகையில் மீதம் பேசு
கைகள் குலுக்கி செல்லமாய் கிள்ளு
அபிநயத்தோடு பாடல்கள் பாடு

‘அண்ணா’வென அழைத்து
அசட்டுத்தனமாய் சிரி

புகைப்படம் எடுக்கையில்
முன் வந்து முகம் சுழி

உணவோடு
என்னையும் பகிர்ந்து உண்

உயரத்திலே வளர்ந்தாலும்
குழந்தையாய் இரு

‘வராதே’ எனச் சொல்லி காதல் வந்ததை சொல்
தொலைபேசியை கொஞ்சம் தூதனுப்பு
ரகசிய பார்வைகள் பார்
விருப்பம் ஒன்றானாலும் குறும்புக்கேனும் மறுத்திடு

நான்கைந்து நாட்கள் காதலி - அதன் பின்
நட்பும்கூட இல்லையென சொல்.

காதலின் இரண்டாம் நிலை (கவிதை)

அங்கங்கு கைபட..
அருகில் வந்து உரசி நிற்க..
கைகள் பிடித்து எழுதி காண்பிக்க..
பாதி தின்ற பண்டம் பகிற..

வரம்பு மீறும் வார்த்தைகள் பேச..
எல்லை தாண்டி ஏளனம் செய்ய..

உரிமையோடு சில உடைமைகள் வாங்க..
ரகசியமாய் சில உண்மைகள் உளர..
நமக்குள் இருப்பது
நட்பா, காதலா, காமமா என்றால்

போகிற போக்கில் சொல்லிச் செல்கிறாய்
‘சும்மா’ என்று

மஞ்சுவுக்கு கல்யாணம் (கவிதை)

(ஒவ்வொரு கல்யாணவீட்டின் மேளச்சத்தமும்
ஓரிரு ஏளனச் சிரிப்புகளையும்
ஒருசில ஏக்கப் பெருமூச்சின் சத்தத்தையும் மறைத்து விடுகிறது)



மஞ்சுவுக்கு கல்யாணம்
மதுரை பி.இ.டி. வாத்தியார் கூட
மஞ்சுவுக்கு கல்யாணம்

மூக்குமுட்ட தின்னுபுட்டு
மொய்கவர் செஞ்சுபுட்டு
மூனே முக்கா பஸ்க்கு திரும்பிரலாம்னு
மூனாம் தெரு சினேகிதங்கயெல்லாம்
முச்சூடும் கௌம்பிட்டோம்

பாயாசத்துக்கு உப்பில்லைனும்
பாவக்காவுல இனிப்பில்லைனும்
அஞ்சாவது ரவுண்டு சோறுவாங்கையில
அபிப்பிராயம் சொல்லிப்புட்டு
அம்பதறுபத கவர்ல போட்டு
அவ கையில கொடுக்கப் போனோம்

“மகேஸ் அண்ணே
மாங்கா அடிக்கிறதுல கெட்டிக்காரர்..
குமாரண்ணே குளத்துல முங்குனா
வெளிய வர நாளாகும்..

பூமாரியண்ணே வீட்டு புக்குக்கு நடுவுல
போத்தி படுத்தாலும் தெரியாது...

அப்புறம்...
புருஸோத்தண்ணே புதுசா குடிவந்திருக்காக” என்று
பொதுவா சொல்லிவச்சா புது புருஷன்ட்ட

“வீட்டுபக்கம் அடிக்கடி வாங்கண்ணே“னு
வெத்தல பாக்கும் குடுத்தனுப்பிச்சா..

நமட்டு சிரிப்புமா நாலுகால் பாய்ச்சலுமா
வீடு வந்து சேர்ந்தோம்

புருஸோத்து தான் புலம்பிக்கிட்டே வந்தான்
அவன் அவள லவ் பண்ணுனானாம்



.