Monday, July 19, 2010

ஒரு கவிஞனின் கதை (கவிதை)

பள்ளிப் போட்டியில் பரிசு வாங்கி - அதற்கென
வீட்டில் கொஞ்சம் பாராட்டு வாங்கி கூடவே
“உருப்பட வழியைப் பார்” என்ற பேச்சும் வாங்கினேன்

வெளியான முதல் கவிக்கு கிடைத்த பணம்..
மடங்காமல் பத்திரமாய் நோட்டுத் தாளிற்கிடையே
பார்த்து மகிழ மட்டும் பயன்படுத்திக் கொண்டேன்
பட்டினியாய் கிடந்த நாட்களிலும்

படைப்பொன்றை அனுப்பிவிட்டு
பலநாட்கள் காத்திருந்து - இதழ்
வெளியாகும் முன்தினம் இரவெல்லாம் விழித்திருந்து
பக்கங்களை புரட்டி புரட்டி ஏமாந்த நாட்கள் பல

பாவேந்தர், பாரதி பாடல்களுக்கு பக்கத்திலும்
கணிதமேதை ராமனுஜத்தின் கணக்குகளுக்கு இடையேயும்
நியூட்டனின் ஈர்ப்புக்குக் கீழும்
ஹிட்லரின் கொடுங்கோலுக்கு மேலும்
என் படைப்பும் இடம் பெற்றிருக்கும் பாடப்புத்தகத்தில்
கசிந்த என் பேனா முனையால் கிறுக்கலாய்

எனக்கு பிடிக்காமல் இல்லை..
படிப்பவர்க்கு பிடிக்கவே மாற்றிக் கொண்டேன்
பார்த்து பார்த்து தந்தை வைத்த
எனது பாட்டனார் பெயரை

உண்ணும்பொழுதும் உலவும்பொழுதும்
காலைக்கடனை முடிக்கும்பொழுதும்
கட்டிலின் மேல் கிடக்கும்பொழுதும்
எழுத நினைத்து மறந்த கவிகள்
ஏராளம்.. ஏராளம்..

விழுந்த மழையின் அழகு கண்டு
குறிப்பெடுத்த கவிகள் எல்லாம்
நனைந்து மழையில் அழியக்கண்டு
வருந்தியழுத நாளுமுண்டு

கருதேடி, கருதேடி
கவியெழுத கணக்கின்றி செலவழித்த காலத்தில்
தொழிற்கல்வி கற்றிருந்தாலும்
தொல்லையில்லாது பிழைத்திருப்பேன்
வயது முதிரா காலத்தில்
கற்பனைக் காதலி பற்றி
எழுதிய கவிதைக் கட்டு
கண்டிப்பான என்
தந்தையின் கண்ணில் பட்டு
கன்னத்தில் விழுந்த அடிகள்
இன்னும் என் நினைவில்.. தழும்புகளாய்

அப்படி, இப்படி, எப்படியோ
அம்மாவின் ஞாபகமாய் வைத்திருந்த
அரைபவுன் தோடும், அரைஞான் கொடியும்
முதல் கவிதை தொகுப்பாய் மாற

நானும் ஆகிவிட்டேன் ஒரு கவிஞனாய்





(இது எனது ஆரம்பகால கவிதைகளில் ஒன்று)



.

No comments:

Post a Comment