Friday, July 16, 2010

எச்சரிக்கை (சிறுகதை)

                        சமையலறையி்ல் ஏதோ உருளும் சத்தம் கேட்டது. அதை சேதுவிநாயகம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சேதுவிநாயகம் ஒரு எழுத்தாளர். தற்போது அவர் கதை போன்ற ஒன்றை ஆர்வமாய் எழுதிக்கொண்டிருக்கிறார்.. அதில்..

                        ஆத்மா சென்னையில் வசிக்கும் பணக்காரர்களில் ஒருவன். அடிக்கடி மும்பை, கொல்கத்தா, டில்லி, சில சமயம் வெளிநாடுகளுக்கு கூட சென்று வரவேண்டியிருக்கும் ஒரு நடுத்தர பிஸ்னஸ்மேன். இந்த கதை இவன் எப்படி இவ்வளவு பெரிய பணக்காரன் ஆனான்? அவனது பிஸ்னஸ் என்ன? இந்த உயரத்தை அடைய அவன் கையாண்ட வழி என்ன? என்பதையெல்லாம் பற்றியதல்ல.

                         நமக்குத் துன்பம் வரப்போவதை இயற்கை முன்கூட்டியே சில எச்சரிக்கைகளின் மூலம் நமக்கு அறிவிக்கிறது. அதை விழிப்புடன் கவனித்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், நாம் அதை கண்டுகொள்ளாதவாறு நம் வாழிவின் அவசர ஓட்டமும், ஒரு செயல் மீது கொண்டுள்ள மோகமும் தடுத்துவிடுகிறது. அது நம்மை கவனிக்க விடுவதில்லை

                         ஆத்மாவுக்கு அதுதான் நேர்ந்தது. அன்று அவன் தன் மனைவியுடன் உறவினர் திருமணத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. நெல்லை எக்ஸ்பிரஸ் ஏ.சி. கம்பார்ட்மென்டில் 12 நாட்களுக்கு முன்பே ரிசர்வ் செய்தாகிவிட்டது. இரவு ட்ரெயின். ஆனால் அன்று காலை அவனுக்கு திடீரென அலுவல் காரணமாக மும்பை செல்ல வேண்டிய கடடாயம் ஏற்பட்டது. உறவினரும் மிக நெருங்கியவர். வேலையும் கொஞ்சம் முக்கியமானது. மனைவி எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல் மும்பை செல்வதென முடிவெடுத்தான். அங்கு அவன் அந்த செயலின் மீது கொண்டிருந்த மோகம் தலைதூக்கி சாவு வரை இழுத்தது.

                         கதை எழுதிக் கொண்டிருந்த சேதுவிநாயகத்திற்கு சிகரெட் குடிக்க வேண்டும் போல் இருந்தது. ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் பொருத்திக் கொண்டு தீப்பெட்டியைத் தேடினார். அது மேசையின் மூலையில், மெழுகுவர்த்தியின் அருகில் இருந்தது. ஒன்றையெடுத்து பற்ற வைத்தார். இல்லையில்லை.. பற்ற வைக்க முயன்றார். அதற்குள் குச்சி இரண்டாக உடைந்தது.

                        அடுத்ததை எடுத்து பெட்டியில் உரச அது பற்றவேயில்லை. உற்றுகவனித்த போதுதான் அந்த குச்சியின் இரண்டு புறங்களிலும் மருந்து இல்லாதது தெரியவந்தது. வெறுப்போடு தீப்பெட்டியையும், குச்சியையும் கீழே எரிந்துவிட்டு யோசித்தார். மற்றொரு தீப்பெட்டியை எடுக்க சமையலறை வரை செல்ல இஷ்டமில்லாமல் மறுபடி தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.

                         ஆத்மாவிற்கு அன்றைய ப்ளைட்டிலேயே டிக்கெட் கிடைக்க சில நூறுகளை அதிகம் கொடுக்க வேண்டியிருந்தது. அவன் மனைவி மட்டும் தனியே திருமணத்திற்கு செல்வதென முடிவாயிற்று. அன்று டிரைவருக்கு உடம்பு சரியில்லாததால் அவன் வரவில்லை. ஆத்மாவே காரை ஓட்டிக்கொண்டு போக வேண்டி வந்தது. வாசலை கடக்கும் போது குறுக்கே போன பூனையை அவன் கண்டு கொள்ளவில்லை. பாதி வழியில் செல்லும் போது காரின் முன் டயர் பஞ்சர் ஆனது. அதை ஒர்க் ஷாப்பில் சேர்த்துவிட்டு,  ஆட்டோ பிடித்து விமானநிலையத்தை அடையும் போது விமானம் அரைமணி நேரம் லேட் என்ற செய்தி காதை எட்டியது. ஒரு மணி நேரம் கழித்து பல ‘சோதனை’களுக்குப் பின் விமானம் கிளம்பியது. பாதிவழியில் சென்று கொண்டிருந்த விமானம், அவர்கள் யாரும் எதிர்பாராமல், நீங்கள் எதிர்பார்த்தபடியே கோளாராகி வெடித்து சிதறியது. இதற்கு காரணம் என்ன?

                   இந்த கதையின் மூன்றாவது பாராவை படியுங்கள் தெரியும்.

                   சேதுவிநாயகம் ஏறத்தாழ எழுதி முடித்துவிட்டார். பஞ்சிங் செய்து பைலில் சேர்க்க வேண்டும் அவ்வளவு தான். அப்போது தான் அவர் கண்ணில் அந்த சிகரெட் மீண்டும் பட்டது. மறுபடி எடுத்து வாயில் பொருத்திக் கொண்டு மேசையின் உள்ளிருக்கும் லைட்டர் நினைவுக்கு வரவே, அதை எடுத்து ஓரிரு முயற்சிக்குப் பின் சிகரெட்டை பற்றவைத்தார். சமையறை கேஸ் சிலிண்டர் லீக்காகி வீடு முழுவதும் கேஸ் பரவியிருப்பதை உணராமல்..

3 comments:

  1. சேது விநாயகத்துக்கு மர மூக்கா??????

    வேர்டு வெரிஃபிகேஷன் ஒரு நந்தி.

    ReplyDelete
  2. மரமூக்கெல்லாம் ஒன்றுமில்லை.. காரணம் தெரிய.. கதையின் மூன்றாவது ‘பாரா’வை படியுங்கள்..

    ReplyDelete
  3. வி............... தலைவி. வலை உலக வாத்தியாரம்மா:-)

    ReplyDelete