(ஒவ்வொரு கல்யாணவீட்டின் மேளச்சத்தமும்
ஓரிரு ஏளனச் சிரிப்புகளையும்
ஒருசில ஏக்கப் பெருமூச்சின் சத்தத்தையும் மறைத்து விடுகிறது)
மஞ்சுவுக்கு கல்யாணம்
மதுரை பி.இ.டி. வாத்தியார் கூட
மஞ்சுவுக்கு கல்யாணம்
மூக்குமுட்ட தின்னுபுட்டு
மொய்கவர் செஞ்சுபுட்டு
மூனே முக்கா பஸ்க்கு திரும்பிரலாம்னு
மூனாம் தெரு சினேகிதங்கயெல்லாம்
முச்சூடும் கௌம்பிட்டோம்
பாயாசத்துக்கு உப்பில்லைனும்
பாவக்காவுல இனிப்பில்லைனும்
அஞ்சாவது ரவுண்டு சோறுவாங்கையில
அபிப்பிராயம் சொல்லிப்புட்டு
அம்பதறுபத கவர்ல போட்டு
அவ கையில கொடுக்கப் போனோம்
“மகேஸ் அண்ணே
மாங்கா அடிக்கிறதுல கெட்டிக்காரர்..
குமாரண்ணே குளத்துல முங்குனா
வெளிய வர நாளாகும்..
பூமாரியண்ணே வீட்டு புக்குக்கு நடுவுல
போத்தி படுத்தாலும் தெரியாது...
அப்புறம்...
புருஸோத்தண்ணே புதுசா குடிவந்திருக்காக” என்று
பொதுவா சொல்லிவச்சா புது புருஷன்ட்ட
“வீட்டுபக்கம் அடிக்கடி வாங்கண்ணே“னு
வெத்தல பாக்கும் குடுத்தனுப்பிச்சா..
நமட்டு சிரிப்புமா நாலுகால் பாய்ச்சலுமா
வீடு வந்து சேர்ந்தோம்
புருஸோத்து தான் புலம்பிக்கிட்டே வந்தான்
அவன் அவள லவ் பண்ணுனானாம்
.
No comments:
Post a Comment