Monday, July 19, 2010

ஒரு மழைநாளில்.. (கவிதை)

கண்ணில் பட்ட கம்பியில் எல்லாம்
குறுக்கும் நெடுக்குமாய் கயிறு கட்டி
வீட்டுக்குள் துணி உலர்த்தினர் சிலர்

பின்வாசல் வழி வந்த நீரை
முன்வாசல் வழி வெளியேற்ற
பக்கெட், பாத்திரம், பாதியான குடம் கொண்டு
இடைவிடாது முயன்று இடுப்பொடிந்தனர் சிலர்

கைபேசியின் கடைசிக் கோட்டு லோ-பேட்டரியில்
சிக்னலுக்காய் மொட்டைமாடி ஏறி நின்றும்..
கடுகுடப்பாவில் கண்டெடுத்த காசெடுத்து
காயின்பாக்ஸ் தொலைபேசி கண்டுபிடித்தும்..
யார் யார்க்கோ லைன்போட்டுப் பேசிடுவார்
தான் இருக்கும் ஏரியா நிலவரத்தை சிலர்

இரண்டாம் ட்யூ கட்ட எடுத்துப்போன பைக்
இடுப்பளவு தண்ணிரில் இருமிக்கொண்டு நின்றுவிட
கண் மறைக்கும் மழைநீரை கையால் துடைத்துக் கொண்டு
பல்சரை தள்ளிப் போவான் ஒரு பச்சை சட்டைக்காரன்

ட்ரைனேஜில் சுழன்று இறங்கும் மழைநீர்..
சிறுவர்கள் தள்ளிச் செல்லும் ஆட்டோ..
ஒற்றைச் செருப்பைத் தேடும் கிழவன்..
சுடிதார் ஒட்டிப் போகும் பெண்கள்..
சேலை தூக்கி நடக்கும் மாமியென
மழைக்கு ஒதுங்கியபடி வேடிக்கை பார்த்து
தம்மடித்து டீக்குடித்து சூடேற்றிக் கொள்வர் சிலர்

டீக்கடை செய்தித்தாளில் சேர்த்த விவரம்
உள்ளங்கை ரேடியோவி்ல் கேட்ட செய்தி
குத்துபாடல்களுக்கு இடையே குத்துமதிப்பாய் பார்த்தவை
காற்றுவாக்கில் காதில் விழுந்த புரளியென
குடைகீழ் நின்று கூடிப்பேசி பிரிவர் சிலர்

ஊரெல்லாம் இப்படி ஒவ்வொரு வேலை பார்க்க
நான் அரையிருட்டில் மறைவாய் நின்று
முட்டிய ஒன்னுக்கை முற்றத்திலேயே போனதை
யார் பார்த்திருக்கப் போகிறார்கள்..




(மறக்காமல் க.க.போ.கவும்.)
(ருத்துக்களை ச்சிதமாகபதிந்து போகவும்.)


.

1 comment: