புத்திசாலிகளுக்கு.. நல்ல ரசனை உள்ளவங்களுக்கு முதல் குழந்தை ‘பெண்’ணாகத் தான் பிறக்கும்.
கேட்பதற்கு கொஞ்சம் மடத்தனமாக தோன்றினாலும், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் உண்மை என்று தெரியும். புதுமையை விரும்புபவர்களுக்கு, நல்ல கிரியேட்டருக்கு, ஓப்பன் டைப்பான ஆட்களுக்கு, கொஞ்சம் அந்த மாதிரி விஷயங்களில்(லும்) ஆர்வம் உள்ளவர்களுக்கு எல்லாம் முதல் குழந்தை பெண்ணாகத் தான் இருக்கும். நான் ஆண்களைப் பற்றி மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
இந்த எண்ணம் எனக்கு எப்படி தோன்றியதென்று ஞாபகம் இல்லை. எப்போது என்றும் ஞாபகமில்லை. ஆனால் சரி என்றே தோன்றுகிறது. இப்படி யோசிக்கும் போது அதற்கு ஆதாரமாய் கமல்ஹாசன், பாரதியார், என்.எஸ்.கிருஷ்ணன், கவிஞர் ஷெல்லி, கார்ட்டூனிஸ்ட் மதன், துரை சார் இப்படி நிறைய பேர்கள் வந்து போவார்கள்.. இவர்கள் அனைவரும் மேலே உள்ள ஏதேனும் ஒரு கேட்டகிரியில் அல்லது எல்லாவற்றிலுமே அடங்குவார்கள்... துரை.. நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் எனக்கு ‘ஹெட்’டாய் இருந்தவர்.
இந்த வரிசையில் வந்திருக்க வேண்டியவர் தான் சுகுமார் சாரும்... ஆனால் வரவில்லை. சுகுமார் சாருக்கு வயது 55 இருக்கும். ஒரே ஒரு மகன்.. பிரதாப். அவன் என்னைவிட 4 வயது சிறியவன். சுகுமார் சாரும் நானும் வயது வித்தியாசம் இன்றி பழகுவோம். அதிலும் பெண்களை பற்றி பேசும் போதெல்லாம்.. தன் வயதையும் மறந்து பேசுவார்...
“சார்.. எனக்கு பொம்பளப்பிள்ளை தான் பிறக்கும்...”
“எப்படி சொல்ற..?”
“புத்திசாலிங்களுக்கு எல்லாம் பொன்னுதான் சார் பிறக்கும்...?”
முதன் முதலில் இதை அவரிடம் நான் சொன்னதும் வாய்விட்டுச் சிரித்தார்.
“நான் பார்த்தவரை நிறைய பேருக்கு அப்படி தான் பிறந்திருக்கு...”
“அப்போ ஆம்பளை பிள்ளை பிறந்தவங்கள எல்லாம் புத்திசாலி இல்லைன்றியா... அந்த வகையில பார்த்தா.. நீ ரைட்டர் சுஜாதாவ ரொம்ப புத்திசாலிம்ப... நீ சொல்ற கேரக்டர்ல நிறைய அவருக்கும் ஒத்து போகுது.. இன்னும் வைரமுத்து, ஐன்ஸ்டைன்...”
“அதான் எனக்கும் டவுட்டா இருக்கு.. இவரை மாதிரி ஒரு சில ஆட்கள் இடையில நின்னுட்டு என் கண்டுபிடிப்ப ப்ரூப் பண்ண விடமாட்டுறாங்க.. உங்களையும் சேர்த்து.. ஆனா என் கண்டுபிடிப்புல எந்த குறையும் இல்ல...”
“நீ அடிமுட்டாள்னு சொல்லுவியே.. ஜீவா.. அவன் அழகா ரெண்டு பொம்பளை பிள்ளைகள பெத்து வச்சிருக்கான்.. அப்படி பார்த்தா உன் கான்செப்ட்டே தப்பாகுதே..”
“போங்க சார்.. ரொம்ப குழப்புறீங்க.. நீங்க சொல்றத வச்சு பார்த்த அவன புத்திசாலினு நான் ஒத்துக்கனும்னு சொல்வீங்க போல.. நீங்க என்ன வேணா சொல்லுங்க.. என் கான்செப்ட் சரினு மட்டும் உள்மனசு சொல்லுது. என்னைக்காவது அதுக்கு ஒரு விடை கிடைக்கும்..”
“கண்டிப்பா கிடைக்கும்... வெயிட் பண்ணு.. விடாம திங்க் பண்ணு.. சமீபத்துல யாரும் பெருசா கண்டுபிடிச்ச மாதிரி தெரியல நீயாது அந்த குறைய தீர்த்து வை...”
“எனக்கு பிறக்க போற பொன்னுக்கு நான் பேர் கூட யோசிச்சுட்டேன்”
“என்ன?”
“வர்ஷா.. மழைனு அர்த்தம்...””“
“நல்லா இருக்கு”
“உங்களுக்கு பொன்னு பிறந்திருந்தா என்ன பேரு வச்சிருப்பீங்க?”
“நந்தினி”
“ஏன் சார்... உங்க பழைய லவ்வர் பேரா...”
“சே... சே.. அதெல்லாம் இல்ல.. அந்த பேரு எனக்கு ரொம்ப பிடிக்கும்..“
அதிலிருந்து அவ்வப்போது இதைப் பற்றி பேச்சு வரும். நான் ஆர்க்யூ பண்ணுவதும் அவர் பதில் சொல்வதும் தொடர்ந்து கொண்டே இருந்த்து. எனக்கு மற்றவர்களைப் பற்றி கூட கவலையில்லை. ஆனால் இவருக்கு ஏன் முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறக்கவில்லை என்று தோன்றும்.. என்னால் எனது கான்செப்டையும் விட்டுக் கொடுக்கவும் முடியவில்லை. இப்படி இருக்கையில் தான் ஒருநாள் காலையில் சுகுமார் சார் செத்து போய்விட்டார் என்ற செய்தி என் காதில் விழுந்தது.
ஒரு கணம் நான் இதற்கு என்ன ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அதை ஒரு செய்தியாக கூட என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இப்படி ஒரு அபத்தத்தை அந்த காலையில் நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்படியானால் இன்று மாலை.. இனி வரும் எந்த மாலையிலும் நான் அவரை சந்திக்க முடியாது.. என் விவாத்திற்கு எதிர் குரல் வராது. என் அபத்தமான பேச்சுக்கு பதிலாய் அந்த சிரிப்பு ஒலி கேட்காது.. அவர் வீட்டிற்கு போகும் பொழுதெல்லாம், நான் காலிங்பெல்லை அழுத்தினால் ஒரு போதும் அவர் வந்து திறக்கப் போவதில்லை.. ஒரே சமயத்திலேயே அவர் அமரும் நாற்காலி, படுத்துறங்கும் கட்டில், நடமாடும் வீடு, என் பைக்கின் பின் இருக்கை, அவர் குரலை எதிரொலிக்கும் வீடு எல்லாம் காலியாகப் போகிறது...நினைத்துப் பார்க்கும் போது கழுத்தை யாரோ காற்றுபுகவிடாதபடி அழுத்தி பிடிப்பதைப் போல் இருந்தது. அவசரமாய் அவர் வீட்டிற்கு ஓடினேன்.
வீட்டு வாசலருகே படுக்க வைக்கப்பட்டிருந்தார்.. பட்டென எழுந்து ‘வாடா போய்.. ஒரு டீ சாப்பிட்டுட்டு வரலாம்’ என்று சொல்வார் என்றே மனம் எதிர்பார்த்தது. இல்லை.. இனி சொல்லப் போவதில்லை.. அறிவு சொன்னாலும் கடைசி வரை மனம் கேட்கவே இல்லை.
எனக்கு நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்தவர்.நம் வாழ்நாளில் யாரை மறந்தாலும்.. நமக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தியவரை மறக்க மாட்டோம். ஏனெனில் புத்தகங்களில் பல உலகங்கள் ஒளிந்திருக்கும்.. அதை நமக்கு காட்டியவர்கள் அவர்கள்.. புதிய உலகை அறிமுகம் செய்தவர்கள்.. நாம் மறக்க நினைத்தாலும் அந்த புத்தகங்கள் மூலம் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள்...
ஏதேதோ சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருந்தன.. அவருடன் பேசிய பொழுதுகள் எல்லாம் ஊமைப்படங்களாய் மனத்திரையில் ஒன்றின் மேல் ஒன்றாய் தெரிந்து கலந்தன...
உடலை கொண்டு போய் மயானத்தில் எரிக்கும் வரை உடன் இருந்து விட்டு வெறுமையாய் வீடு திரும்பினேன்.. வரும் வழியில் நாங்கள் அடிக்கடி சந்தித்து உரையாடும் டீக்கடையை கடக்கும் போது எனது அசட்டுத்தனமான கான்செப்ட் மனதில் வந்து போனது.. ‘புத்திசாலிங்களுக்கு, நல்ல ரசனை உள்ளவங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாத்தான் பிறக்கும்.’ அந்த வேளையிலும் ஒரு மெல்லிய சிரிப்பு எனது உதட்டில் தோன்றி மறைந்தது. அப்பொழுது என்னை நோக்கி கல்லூரி படிக்கும் வயதில் ஒரு அழகான பெண் வந்தாள்.. கெட்ட மனம்.. அப்போதும் அவளை ரசித்தது.. நேராக என்னிடம் வந்தவள்,
“கொண்டு போயிட்டாங்களா?” என்றாள். நிறைய அழுதிருந்தாள். புரிந்து கொண்டு..
“இப்போ தான் கொஞ்ச நேரம் ஆச்சு.. நீங்க...? என்றேன்.
“நந்தினி. விழுப்புரத்துல இருந்து வர்றேன்” என்ற வார்த்தைகளை முழுவதுமாக முடிக்காமல் கண்ணீரோடு மயானத்தை நோக்கி ஓடினாள்...
.
arumai
ReplyDeleteintresting
ReplyDeletenice sir,,,i thing its real story,,,
ReplyDelete