Monday, July 19, 2010

பெண்ணென்றால்.. (கவிதை)

எனக்குப் பெண்ணென்றால் ரொம்பப் பிடிக்கும்..

முதலில் இது அம்மாவில் தான்
ஆரம்பித்ததென நினைக்கிறேன்

தமபிக்கு பால்புகட்டும் போதும்
உச்சிமுகர்ந்து முத்தமிடும் போதும்
அருகில் அவள் சேலையில்
படுத்தபடியே நினைத்துக் கொள்வேன்
எனக்கும் இப்படித்தான் செய்திருப்பாளென்று

அவள் வாசனைதான் நான் முதலில் நுகர்ந்தது
என் முதல் மூச்சிலிருந்தே..

அடுத்ததாய்
என்னோடு மண்ணில் விளையாண்ட
என் சிறுவயது தோழி

அப்போதெல்லாம் நாங்கள்
ஆடையணிந்திருந்தோமா.. ஞாபகமில்லை
ஆனால்
அவள் கோபத்தில் இடித்துச் சென்ற
என் மணல்வீடு மட்டும் ஞாபகத்திலுள்ளது
இன்றும் சிதையாமல்..
பருவத்திற்கு வராத பள்ளித்தோழிகளோடு கைகோர்த்து
“ஒரு குடம் தண்ணியெடுத்து” விளையாடும் போதும்

யாரோடும் பங்கிட விரும்பாத தேங்காய்மிட்டாய்
அவளுக்காய் என் சட்டைமடிப்பிற்குள் கடிபடும் போதும்
என்னவென்றே தெரியாத ஏதோவொரு ஈர்ப்பில்
அவளும் நானும் அடிக்கடி பார்த்துக் கொள்வோமே..
அப்போதும் கூட

பெண்ணென்றால் ரொம்ப பிடிக்கும்

லேசாய் எனக்கு மீசை துளிர்விட்ட போது
காண்பதெல்லாம் பெண்ணின் வடிவம் தான்
கோவில் சிலைகளுக்கு வெட்கப்பட்டேன்
ஆடைவிலகி எந்தப் பெண்ணை காண நேர்ந்தாலும்
கண்களுக்குள் இதயத்துடிப்பும்
இதயத்தில் இமைத்துடிப்பும் உணர்ந்தேன்

அப்போதெல்லாம்
மறைத்து வைக்கப்படுபவை எல்லாம் அழகாய்த தெரியும்
எனக்கு அழகாய்த் தெரிபவை எல்லாம்
மறைத்து வைக்கப்பட்டிருக்கும்

ஏவாள் மீது கோபம் வரும்
துறவிகளை கிறுக்கரென்பேன்
மறைவிடங்கள் மகிழ்ச்சி தரும்
பேயில் கூட பெண் பிடிக்கும்

இந்த காலத்தில் தான்
பூமியை பெண்ணென்று ஒப்புக் கொண்டேன்
காரணங்கள் நிறையவுண்டு.. சொல்வதற்கில்லை
இப்படியாய் அப்பொழுதும்

பெண்ணென்றால் ரொம்ப பிடிக்கும்

சொர்க்கத்தையே நிச்சயித்து
சொந்தங்கள் பல கொண்டு வந்து
என்னை முழுமை செய்ய மனைவி வந்தாள்

அவள் வந்தபின் சமையலின் ருசி மட்டுமல்ல
சந்தோஷத்தின் ருசி கூட மாறித்தான் போனது

அவள் காட்டும் அன்பில்
மறந்து போய் அவ்வப்போது நானும் கூட
என் குழந்தைபோல்
“அம்மா”வென அழைத்ததுண்டு
அப்போதும் கூட

பெண்ணென்றால் ரொம்ப பிடிக்கும்

“பெண்ணென்றால் ரொம்ப பிடிக்கும்”
அடிக்கடி நான் சொல்வதற்கேற்ப
கையில் வந்தது குழந்தையொன்று

அதனோடு நடைபழகி..
வாயிலிருந்து விரலெடுத்து..
பேசக்கற்று..
சோறுண்டு..
படுக்கை நனைத்து..
உடைமாற்றி..
ஒன்றாய் தூங்கி..
பாடம் படித்து..
விளையாடிக் களைத்து..
முத்தங்கள் பரிமாறி..
கட்டிக்கொண்டு நடந்து..
கடைசியில் கண்ணீரோடு
கணவனுக்காய் விடைகொடுக்கும் போதும்

பெண்ணென்றால் ரொம்ப பிடிக்கும்

நான் கோலூன்றி நடக்கும் வேளையில் கூட
எனக்குத் தோள் கொடுக்கிறாள் என் மனைவி

இப்போதெல்லாம் இவள் பார்வையில்
அன்பையும் கடந்து ஏதோ அழகிருப்பதைக் காண்கிறேன்
அவளது ஒவ்வொரு அணைப்பிலும்
பாசத்தையும் தாண்டி ஏதோ பற்றிருப்பதைப் பார்க்கிறேன்

பேரனும், பேத்தியும் ஓடிவந்து கட்டிக் கொண்டார்கள்
என் மடியில் பேத்தி..
அவள் மடியில் பேரன்..
நான் சொன்னேன்,
“காரணம் தெரியாது.. ஆனால்,
எனக்குப் பெண்ணென்றால் ரொம்பப் பிடிக்கும்“

மெதுவாய் புன்னகைத்த அவள்
அப்போதும் கூட எதுவும் சொல்லவில்லை





(இது என் ஆரம்பகால கவிதைகளுள் ஒன்று)



.

3 comments:

  1. Fantastic!! புல்லரிக்கிது..

    //அருகில் அவள் சேலையில்
    படுத்தபடியே நினைத்துக் கொள்வேன்
    எனக்கும் இப்படித்தான் செய்திருப்பாளென்று//

    நான் கூட நெனைச்சிருக்கேன்.. :)

    //“ஒரு குடம் தண்ணியெடுத்து”//

    ஒரு குடம் தண்ணியெடுத்து ஒரு பூ பூத்தாச்சு.......பத்துக் குடம் தண்ணியெடுத்து பத்துப் பூ பூத்தாச்சு :)

    //அவளுக்காய் என் சட்டைமடிப்பிற்குள் கடிபடும் போதும்//

    Great..

    //அவள் காட்டும் அன்பில்
    மறந்து போய் அவ்வப்போது நானும் கூட
    என் குழந்தைபோல்
    “அம்மா”வென அழைத்ததுண்டு
    அப்போதும் கூட//

    அழகு!!

    மொத்தத்தில் எங்கும் படித்திராத அழகான கருத்தை உடைய அருமையான கவிதை..

    ReplyDelete
  2. ஆரம்ப காலக் கவிதையா இது ? அப்பவே அசத்தலா எழுதி இருக்கீங்க ...

    ReplyDelete