Wednesday, August 4, 2010

பறத்தல் (சிறுகதை)

              
                      நடராஜ்க்கு கடந்த ஒரு மாதத்திற்குள் மூன்று, நான்கு முறை இந்த கனவு வந்துவிட்டது. கனவில் அவர் மேலே ஃபேன் ஓடுவதை  பார்த்தவாறு படுத்திருக்கிறார். திடீரென தன்னை லேசாய் உணர்கிறார். மெதுவாய்.. காற்றில் எழும்பி மூன்றடி உயரத்தில்... அந்தரத்தில் மிதக்கிறார். பின் வாசல் பக்கமாய் பார்த்து வளைந்து மெது மெதுவாய் கைகளை மேலும் கீழும் அசைத்து பறந்து செல்கிறார். திடுக்கிட்டு கனவு கலைந்து விழித்துப் பார்த்தால் கீழே படுக்கையில் கிடக்கிறார்.

                    அந்த கனவின் தாக்கமோ என்னவோ நடராஜ் இப்போது உறுதியாக நம்ப ஆரம்பித்து விட்டார்.. தன்னால் நிச்சயம் பறக்க முடியுமென்று. அதுவும் கடைசி முறை தான் கண்டது கனவல்ல நிஜமாகவே பறந்ததாக நம்புகிறார்.

                    அன்று ஆபிஸிற்கு லீவு போட்டு விட்டு தான் வழக்கமாய் படுக்கும் அதே இடத்தில் தலையணை போர்வை சகிதமாய் படுத்துவிட்டார். வீட்டில் மனைவி மட்டும் தான் இருந்தாள். பிள்ளைகள் ஸ்கூலுக்கு போய்விட்டிருந்தார்கள். ‘இன்று எப்படியும் பறந்தே தீருவது’ என மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டார். அறைக்குள் வெளிச்சம் அதிகமாய் இருக்கவே எழுந்து போய் சன்னல்களை மூடி இருட்டை உண்டாக்கினார். மறுபடியும் வந்து இழுத்து மூடி படுத்துக் கொண்டவரை அறையின் கதவு திறக்கும் ஓசை விழித்துப் பார்க்கச் செய்தது. வாசலில் மனைவி நின்றிருந்தாள்.

                       “உடம்புக்கு ஏதாச்சும் முடியலையா?”

                       “அதெல்லாம் ஒன்னுமில்ல..”

                       “பிறகு படுத்திருக்கீங்க”

                       “ உடம்புக்கு முடியலைனாதான் படுக்கனுமா? என்னைய கொஞ்ச நேரத்துக்கு தொந்தரவு பண்ணாத“

                      அவள் எதுவும் பேசாமல் கதவை மூடிவிட்டு சென்றுவிட்டாள்.

                      ‘கடைசி முறை நான் கண்டிப்பா பறந்தேன்.... பறந்திருப்பேன். கண்டிப்பா ஒரு அடி உயரமாது இருக்கும்.. மிதக்குறேன். அப்போ பார்க்க யாரோ சனியன் மாதிரி வந்து கத்தி எழுப்பி... எழுப்பி இல்ல.. அது.. அத.. எப்படி சொல்லுறது... ஆனா சத்தியமா பறந்தேன். என்னல பறக்க முடியும்.. பறந்திடுவேன். 

                       குப்புறவாக்கில் படுத்து போர்வையை முழுவதுமாய் போர்த்திக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டார்.

                     ‘இன்னும் கொஞ்ச நேரத்தல் பறந்துவிடலாம்..’

                    அமைதியாக காத்திருந்தார். சிறிது நேரம் கழிந்தது. எந்த மாற்றமும் இல்லை.

                    ‘இன்னும் ஏன் பறக்க ஆரம்பிக்கவில்லை.?’

                    புரண்டு படுத்து போர்வையை விலக்கி பார்த்தார்.

                    ‘ஓ.. இது தான் காரணமா? வேற போர்வை இது. அன்னிக்கு நான் போர்த்தியிருந்த போர்வைய எங்க?’ எழுந்தவர் நேராக சமையலறைக்கு வந்தார்.

                   “லஷ்மி... லஷ்மி...”

                   “என்ன..?”

                   “அந்த ப்ளு போர்வைய எங்க?”

                  “ அதுவா.. அழுக்கா இருக்கேனு துவைக்க எடுத்துப் போட்டிருக்கேன். வேற போர்வை எடுத்து வச்சிருக்கேன் பாருங்க”

                  “ ஊற வச்சுட்டியா?”

                 “ இல்ல.. ஊற வைக்க எடுத்துப் போட்டிருக்கேன்”

                 “எங்க?”

                 “ அது ரொம்ப அழுக்கு..”

                 “ எங்....க?”

                 “ சோபா மேல இருக்கு”

மனதிற்குள் ஏதோ முணுமுணுத்தபடி கொதிக்கும் சாம்பாரில் கவனத்தை திருப்பினாள்.
            
                  போர்வையொடு வந்தவர் மீண்டும் படுத்து உடலில் ஒரு பாகமும் தெரியாத அளவு போர்த்திக் கொண்டு கண்களை மூடிக்கொண்டார்.

                   ‘இப்போது பிரச்சனையில்லை.. பறந்து விடலாம்’

                   சிறிது நேரம் காத்திருந்தார்.

                  ‘ இன்னும் பறக்கலையே.. முதல்ல பறக்கனும்னா தூக்கம் வரணும். அப்போ தான் பறக்க முடியும்னு நினைக்கேன். தூக்கம் வர என்ன செய்யலாம்..? ஒன்னு, ரெண்டு எண்ணுனா தூக்கம் வரும்னு சொல்லுவாங்க. முன்னயெல்லாம்.. மயக்க மருந்து கண்டுபிடிக்கிறதுக்கு முன்னனு நினைக்கேன், ஆஸ்பிடல்ல ஒருத்தன மயக்கத்துக்கு கொண்டு போக அவன சாய்ச்சு படுக்க வச்சு அவனுக்கு முன்னால ஒரு டாலரையோ ஏதோ ஒன்ன செயின்ல கட்டி ஆட்டுவாங்களாம். அப்படி ஆட்டும் போது... அவனை, அதை பார்த்துகிட்டே ஒன்னு, ரெண்டு சொல்லச் சொல்லுவாங்களாம். எல்லாரும் எப்படியும் நூறு எண்ணுறதுக்குள்ள ஏன் அதுக்கு முன்னாலேயே மயக்கமாயிடுவாங்களாம். அது அவங்க அவங்க மனச பொறுத்தது. சிலர் கொஞ்சம் அதிகமாகவும் எண்ணிட்டிருப்பாங்களாம். இப்படித்தான் ஒருத்தன உட்காரவச்சு ஒரு டாக்டர் முன்னால இருந்து செயின ஆட்டிகிட்டே இருந்தாராம். அவன் ஒன்னு, ரெண்டு சொல்லிகிட்டு இருந்தானாம். ரொம்ப நேரம் ஆயிடுச்சாம்.. டாக்டர் தூங்கி போயிட்டார். அவன் எண்ணிக்கிட்டே இருந்தானாம். இருபத்தி மூனு லட்சத்து அறுபத்தாராயிரத்து நானுத்தி எழுபத்தெட்டு.. இருபத்தி மூனு லட்சத்து அறுபத்தாராயிரத்து நானுத்தி எழுபத்தொன்பது.. இருபத்தி மூனு லட்சத்து...’

                     அவர் உள்ளுக்குள் லேசாய் சிரித்துக் கொண்டார்.

                    ‘சரி இப்போ நாம என்ன செய்யலாம். கடிகார சத்தத்தை கேட்டுகிட்டே இருந்தாலும் தூக்கம் வரும்னு சொல்லுவாங்க. இத செய்யலாம்.. இந்த ரூம்லயே ஒரு வால்கிளாக் இருக்கே.. அது சத்தத்தை கேட்கலாம்.’

                   காதை கூர்மையாக தீட்டிக் கொண்டு கவனமாகக் கேட்டார். எந்த சப்தமும் இல்லை. லேசாய் கேட்பது போல் இருந்தது. பின் நின்று விட்டது. பின் கேட்டது. இன்னும் கவனமாக கேட்க ஆரம்பித்தவர் காதில் சீறிப் புறப்படும் தீபாவளி ராக்கெட் போல் குக்கரின் விசில் சப்தம் பாய்ந்தது. திடுக்கிட்டு விழித்தார். கோபம் முட்டிக்கொண்டு வந்தது. போர்வையை எடுத்து விசிறியடித்து விட்டு எழுந்து உட்கார்ந்தார். விசில் சத்தம் நிற்கும் வரை காதை இரு கைகளாலும் மூடிக்கொண்டார். நின்றதும் எழுந்து வேகமாய் சமையலறையை நோக்கி நடந்தார். அங்கு அவர் மனைவி இல்லாது போகவே,

                     “லஷ்மி... லஷ்.......மி” என்று கத்தினார்..

                     “என்னங்க... என்னாச்சு” என்றபடி கையில் சோப்பு நுரையோடு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள்...

                    “குக்கரை இங்க வச்சுட்டு அங்க என்ன பண்ணுற?”

                    “ துணிய ஊர வச்சிட்டிருந்தேன். ஏன் என்னாச்சு?”

                    “ ஏன் இப்படி ஊரை கூட்டுற மாதிரி சத்தம் போடுது?” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அடுத்த விசில்  அடிக்க ஆரம்பித்தது. மறுபடியும் காதை மூடிக்கொண்டார். விசில் நின்றதும்.. “இதோ.. இப்படி.” என்றார்.

                     “எப்பவும்  போலத் தான் அடிக்குது”

                    “ எப்பவும் போலத் தான் அடிக்குது. ஆனா.. அத நிறுத்து. எரிச்சலா இருக்கு.”

                    “ஏன்... இன்னிக்கு உங்களுக்கு என்னாச்சு? காலையில இருந்தே..” அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் இடைமறித்து,
                   
                   “சும்மா, சும்மா கேள்வி கேட்காத. நிறுத்துனா.. நிறுத்து”

                   “இன்னும் ஒரு விசில் அடிக்க வேண்டி இருக்கு அடிச்சிரட்டும்”

                   “அதெல்லாம் முடியாது. இன்னும் ரெண்டு, மூனு மணி நேரத்துக்கு எந்த சத்தமும் கேட்கக் கூடாது அவ்வளவு தான்..” என்றபடியே உள்ளே சென்றவர் மறுபடியும் திரும்பி வந்து, “அப்புறம்.. ஊற வச்சிருக்கிற துணிய ‘டொம்.. டொம்’னு அடிச்சு துவைக்குறேன் பேர்வழினு உயிர வாங்காத.. சத்தம் வரக்கூடாது சொல்லிட்டேன்” என்றபடி திரும்பிச் செல்ல முயல்கையில் அடுத்த விசில் அடிக்க ஆரம்பித்தது. திரும்பிப் பார்த்து முறைத்தார்.

                    “முடிஞ்சிருச்சு.. முடிஞ்சிருச்சு..” என்று சத்தமாய் சொல்லிவிட்டு ‘என்னாச்சு இன்னிக்கு இந்த மனுஷனுக்கு’ என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு ஸ்டவ்வை அணைத்தாள்..

                    வந்து படத்தவருக்கு மனதினுள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். திருப்தி. எவ்வளவு பெரிய காரியத்தை செய்யப் போறோம். இதுவரை யாரும் செய்யாத சாதனைய.. சில ஞானிகள் பறந்ததா சொல்லுவாங்க.. யாரு பாத்திருக்கா..? நான் மட்டும் பறக்க ஆரம்பிச்சுட்டேன்னா என் பேரை வரலாற்றுல எழுதுவாங்க. இந்த மாதிரி.. நடராஜ் என்பவர் தான் மனித குலத்திலேயே முதன் முதலில் பறக்கும் சக்தி பெற்றிருந்தார்னு.. அப்போ இவ பேரை கூட எழுதுவாங்க. இவருக்கு லஷ்மினு அவரை புரிந்து கொள்ளாத ஒரு மனைவி இருந்தாள்னு. இந்த மாதிரி தான் ஐன்ஸ்டீனுக்கு கூட அவர புரிஞ்சுக்காத மனைவி வாய்ச்சுதாம். அவருக்கு மட்டுமில்ல நிறைய புத்திசாலிங்களுக்கு இப்படித்தான். அட அந்த கதையெல்லாம் நமக்கு எதுக்கு நாம ஆக வேண்டிய கதைய பார்ப்போம்.

                  மறுபடியும் போர்வையையும், கண்களையும் இறுக மூடிக்கொண்ட அப்படியே ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். சிறிது நேரத்தில் லேசாய் தூக்கம் வருவது போல் இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். திடீரென அவருக்கு மேலே எழுவதாய் தோன்றியது. அந்தரத்தில் மிதந்தார். போர்வையேதும் விலகவில்லை. ஆனால் அவர் மட்டும் அப்படியே அந்தரத்தில் மிதந்தார். இப்போது அவராலேயே அவரது போர்வை மூடியிருக்கும் உடலை பார்க்க முடிந்தது. அவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ‘கடைசியாய் நான் நினைத்தது நடந்துவிட்டது’ அப்போது சொன்னால் யாரும் நம்பியிருப்பார்களா..? இப்போது நம்பி தான் ஆகவேண்டும்.. ’ இன்னும் கொஞ்சம் மேலே எழும்பி அந்த அறையை ஒரு சுற்று சுற்றி வந்தார். அவருக்கு தனது உடலை ஒரு பஞ்சை விட மென்மையாய் உணர்ந்தார். இனி யார் தடுத்தாலும் நான் பறப்பதை நிறுத்த முடியாது. உடனே தனது மனைவியை கூப்பிட்டு காட்ட வேண்டும் என விரும்பியவர்,

                    “லஷ்மி.. லஷ்மி.. ” என்றார்

                      எந்த பதிலும் இல்லை. ‘நாம் ஏன் இங்கிருந்து கத்துவானேன்.. நேரடியாக பறந்து போய் அவள் முன்னால் நிற்கலாம்’ என நினைத்த போது கதவை திறந்து கொண்டு லஷ்மி உள்ளே வந்தாள். மேலே மிதந்து கொண்டிருந்த அவரை அவள் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. மெதுவாய் கீழே இருக்கும் உடலை அங்கங்கு தொட்டுப் பார்த்தாள். இவர் இறங்கி வந்து அவளது எதிரில் போய் நின்றார். அவள் கவனித்த மாதிரி தெரியவில்லை. மறுபடியும் கொஞ்சமாய் “என்னங்க.. என்னங்க..” என்று சொல்லி உடலை அப்படியும் இப்படியுமாய் அசைத்து, மூக்கிலும், நெஞ்சிலும்... கையையும், காதையும்  வைத்துப் பார்த்துவிட்டு கதறி அழ ஆரம்பித்தாள்..

                   “ஐயோ.. என்னை இப்படி தனியா விட்டுட்டு போயிட்டீங்களே”     

                  



(உங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவுசெய்யவும்..)



.

5 comments:

  1. விறு விறுன்னு போகுது.. ஆனா நிறைய இடங்கள் தேவையில்லை என நினைக்கிறேன்.. அடுத்த கதையில் சரி செய்து பதிவிடுங்கள்...

    ReplyDelete
  2. கதையின் முடிவை கொஞ்சம் வித்யாசமாக வைத்திருக்கலாம்.ஆனால் நல்ல விறு விறுப்பா போகுது.இன்னும் நிறையா எழுதுங்கள்.வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நல்லா இருக்கு பாஸ்,தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  4. நாடோடி நண்பரே ...

    இயல்பான விகடம் தெறிக்கும் வரிகள்....
    துல்லியமான, நேர்த்தியான வெளிப்பாடு....

    உங்கள் வலைப்பூ கோடி இதயங்களை வலைக்கட்டும் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete