Monday, August 2, 2010

முகம் (சிறுகதை)

               
                    ராமநாதன் உட்கார்ந்திருந்த சோபாவின் எதிரே டிப்பாயில் இருந்த ஹிண்டு பேப்பரை பெயருக்குக்கூட புரட்டவில்லை. டாக்டர் சோலைராஜ் பெயருக்குப் பின்னால் பெயரைவிட பெரிதாய் படித்த டிகிரிகள். மொத்தத்தில் அவர் ஒரு சைக்கியாட்ரிஸ்ட். அவருக்குச் சொந்தமான க்ளினீக்கில் தான் ராமநாதன் கடந்த 32.. இதோட 33 நிமிடங்களாக இருக்கிறார். மணி மதியம் மூன்றை தொடவிருந்தது. இவருக்கு அடுத்து வந்த ஒருவர், இவரிடம் அனுமதி கேட்காமலேயே இவருக்கு முன் டாக்டரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தார். இப்போது அந்த க்ளினிக்கின் உதவியாளர் ராமநாதன் முன் வந்து நின்று தலையைச் சொறிந்து கொண்டே ஆரம்பித்தார்..
                   “சார் இவங்களுக்கு கொஞ்சம் அர்ஜெண்டா போகனுமாம். குழந்தை வேற வச்சிருக்காங்க. அதுவும் வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்கா.. அதான்... அவங்க முதல்ல டாக்டர பாத்துட்டு...” என்று இழுத்தார்.

                    ஏதோ சொல்லவந்தவர்... “ம்..“ என்றார்.

                    “தேங்க்ஸ் சார்.. அடுத்து நீங்க தான்” என்றவாரே அவளிடம் சென்றார். ஏதோ அவளிடம் சொல்ல அவள் டாக்டரின் அறைக்குள் சென்றுவிட்டாள். 8 நமிடங்களுக்கு பின்னர் அவள் வெளிவர உதவியாளர் உள்ளே சென்றார்.

                   “இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?” என்றார் டாக்டர்.

                   “மூனு பேர்..”

                  “மூனு பேரா” என்றவாரே வெளியே பார்த்தார். கதவிடுக்கின் வழியே ராமநாதன் முகம் தெரிந்தது. என்ன நினைத்தாரோ, “சரி கொஞ்ச நேரம் அவங்க வெயிட் பண்ணட்டும். அடுத்து ஆள் வந்துட்டேதான் இருப்பாங்க. அதுக்குள்ள நான் என்னோட ‘லஞ்ச்’ச முடிச்சிடுறே என்ன?” என்றார் மெலிதாய் சிரித்தவாரே..

                       ஏதோ சொல்ல வாயெடுத்தவர் ராமநாதன் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு “சரி டாக்டர்” என்றார்.

                       9 நிமிடத்திற்குப் பின் சாப்பிட்டு முடித்தார் டாக்டர். ராமநாதன் உள்ளே அழைக்கப்பட்டு டாக்டரின் எதிரே உட்கார வைக்கப்பட்டிருந்தார்.

                      “சொல்லுங்க” என டாக்டர் சொன்னது தான் தாமதம்..

                      தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளக் கூட தோன்றாமல் படபடவென பேச்சை ஆரம்பித்தார்.

                     “டாக்டர் என்னையப் பார்த்தா எல்லாருக்கும் என்ன தோணுமோ தெரியல. கடையில போய் ஏதாவது வாங்கப் போனா எல்லாருக்கும் கொடுத்துட்டு கடைசியில தான் எனக்குக் கொடுக்குறான். நான் என்னவோ ஓசியில வாங்கற மாதிரி. கோவிலுக்குப் போனா அர்ச்சகர் கூட்டத்துல எனக்கு மட்டும் பிரசாதம் தரமாட்டார். இல்லைனா கொஞ்சமா, அதுவும் கடைசியில ஏதோ வேண்டா வெறுப்பா தருவார். ஆபிஸ்ல ஸ்டாப் யாருக்காவது கல்யாணம், பங்ஷன்னா என்ன கிப்ட் வாங்குறதுனு என்னைய கலந்துக்காமலேயே எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்துடுவாங்க. வீட்டுல என் குழந்தைங்க கூட எதுனாலும் என் வொய்பத் தான் கேட்ட முடிவெடுக்கிறாங்க. என்னைய ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்ல. என் முகத்தை பார்த்தா அவங்களுக்கு என்ன தோணுமோ தெரியல.. இதுக்கு என்ன டாக்டர் காரணம்?” என்றார் உடைந்த குரலில்.

                     கொஞ்ச நேரத்திற்கு முன் கதவிடுக்கின் வழியே இந்த ராமநாதனின் முகத்தைப் பார்த்த காட்சி டாக்டரின் நினைவுக்கு ஏனோ வந்தது.



.

1 comment:

  1. அருமையான நடையில் அற்புதமான சிந்தனை..வாழ்த்துக்கள் நண்பரே!!!!!!!!!

    ReplyDelete