Monday, August 2, 2010

அழுகை (சிறுகதை)

                 நான் செத்துட்டேன்கிறத என்னால நம்ப முடியல. ஆனா எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. என்னைய எங்க வீட்டுக்கு முன்னால இருக்கிற திண்ணையில படுக்க வச்சு கால் பெருவிரலை சேர்த்துக் கட்டி, சந்தனம் பூசி, செண்டெல்லாம் தெளிச்சு – இந்த செண்ட் இருக்கே.. மட்டமான வாடை அடிக்கும். செத்தவங்களுக்குனே தனியா விக்கிறாங்க.. விலை கொறைச்சலா. கட்டை பாஸ்கரோட மாமா செத்தப்போ அவருக்கும் கூட இதே செண்ட்தான் போட்டாங்க. ரொம்ப காட்டமா இருக்கும். பத்தி கொளுத்தி, மாலை போட்டு, ஒரு விளக்கும் ஏத்தி வச்சிருக்காங்க.


                 என்னைய சுத்தி உட்கார்ந்துகிட்டு இந்த பொம்பளைங்க ஏன்தான் இப்படி அழுதுட்டு இருக்காங்களோ தெரியல. அதுலையும் நாலாவது வீட்டுல இருக்கிற கிழவி ஒப்பாரின்ற பேர்ல காது பக்கத்துல வந்து கத்துற கத்து இருக்கே.. நல்லவேளை நான் உயிரோட இல்ல. இல்லைன்னா இந்நேரம் என் காது கிழிஞ்சிருக்கும். ரெண்டு நாளைக்கு முன்னால நான் தெருவுல கிரிக்கெட் விளையாண்டப்போ ‘லெக்’ சைடுல நான் அடிச்ச பந்து நேரா போயி இவ ‘லெக்’ல பட்டிருச்சு. அதுக்கு என்னலாம் திட்டுனா, எப்படியெல்லாம் சண்டை போட்டா.. இப்ப என்னனா.. “ரெண்டு நாளைக்கு முன்ன கூட சிரிச்சு, சிரிச்சு பேசுனானே”னு வாய் கூசாம பொய் சொல்றாளே... ‘ஒப்பாரி வைக்கும் போது கூட உண்மை பேச மாட்டாங்க போல. செத்தவன் எந்திரிச்சு வந்து சொல்ல மாட்டான்ற தைரியம்.’

                    என் கால்மாட்டுல உட்காந்து அழுதழுது முகம் சிவந்து, வீங்கிப் போயிருந்த அம்மாவ பார்க்க பாவமா இருக்குது. என் மேல அவளுக்கு ரொம்ப பிரியம். நான் எது கேட்டாலும் வாங்கித்தருவா. நேத்து நைட்டுல இருந்து அம்மா பட்டினி. இன்னிக்கு காலையிலேயும் எதுவுமே சாப்பிடல. அவ பாதிநாள் இப்படித்தான் இருக்கா...

                   எல்லாரும் சாப்பிட்ட பிறகு கடைசியா ஏதோ பேருக்கு சாப்பிடுவா.. நானும் அப்பாவும் இட்லி, தோசைனு சாப்பிட, அவளுக்கு எங்கயிருந்துதான் கிடைக்குமோ பாழாப் போன பழைய சோறு. “எம்மா.. தோசைக்கு கூட கொஞ்சம் போட்டு அரைக்கலாம்ல”னு கேட்டா, “மிஞ்சிப் போனா உங்க அப்பாகிட்ட யாரு வாங்கிக் கட்டிக்கிறது.. அதுவும் போக இவ்வளவு சோத்தையும் தூரவா கொட்டுறது”னு எதிர் கேள்வி கேட்பா. “சரி எனக்கு வை”னு சொன்னா, “ம்கூம்.. வளர்ற பிள்ளை சூடா சாப்பிடனும்”னு மழுப்பிடுவா. இப்போ கூட பாருங்க தேவியக்கா கொடுக்கிற காபிய குடிக்கமாட்டேங்குறா. “அட.. அம்மா அதையாது குடிச்சுத் தொலையேன்.”

                அப்பா, வெளிய பெஞ்சில ஒக்காந்திருக்கார். அவர் கண்ணெல்லாம் சிவந்து போயிருந்த்து. ஆனா அது அழுத்துனால வந்த்தில்லனு எனக்குத் தெரியும். பெரிய மாமா தங்கராசு தான் பாடைக்கு சொல்லுறது, மேளத்துக்கு சொல்லுறதுன்னு எல்லா வேலையையும் செஞ்சுகிட்டு இருக்காரு.

                 வாசப்பக்கம் இருந்த செம்பருத்தி செடிக்கிட்ட வச்சு ஒருத்தரு பாடை கட்டிக்கிட்டு இருக்காரு. அதுல மூனாவது குறுக்கு கம்பை சரியா கட்டாம விட்டுட்டாரு. பாடை கட்டுற மும்மூரத்துல அணைக்காம அவர் தூக்கி எறிஞ்ச பீடிய தங்கராசு மாமாவோட மக கலையரசி கவனிக்காம மிதிச்சுட்டு ‘ஸ்...ஸ்..’னு காலை தூக்கிகிட்டே நொண்டி, நொண்டி நடக்கா.. பாவமா இருக்கு.. இவளும் நானும் சின்ன வயசுல ஒரு தடவை ‘பருப்பு கடைஞ்சு’ விளையாடும் போது, ஒவ்வொரு விரலையும் சோறு, குழம்பு, கூட்டு, அப்பளம்னு சொல்லி ரெண்டு பேரும் சாப்டோம். சாப்ட்ட பிறகு ‘நண்டு வருது, நரி வருது’னு அவ இடுப்புல கிச்சு கிச்சு மூட்டிவிடும் போது அவ பாவாடை அவுந்து விழ.. அவ ‘ஓ’னு அழ.. அவ அழுவுறத பாத்து நானும் அழ... ஒரே சிரிப்பு தான்...

                     அட, கண்ணாடி சார் கூட என்னை பார்க்க வந்திருக்கார் போல.. அவர் எனக்கு கணக்கு பாடம் எடுக்கிறாரு. ‘கண்ணாடி சார்னு அவருக்கு பேர் வர ரெண்டு காரணம் இருக்கு. ஒன்னு அவர் கண்ணாடி போட்டிருப்பாரு. இன்னொன்னு.. அவர் எப்ப பாத்தாலும் சட்டை பைக்குள்ள வச்சிருக்கிற சின்ன கண்ணாடி எடுத்து பார்த்து அடிக்கடி தலைய சீவிக்கிட்டே இருப்பாரு. இவரு எத்தனையோ தடவ என்னை முட்டி போட வச்சு கைய தூக்கச் சொல்லிட்டு பின்னாலயே அடிச்சிருக்காரு. அத நினைச்சு பார்த்தா இப்போ கூட லேசா வலிக்கிற மாதிரி இருக்கு. கூடவே தமிழய்யாவும் வந்திருக்காரு. ரெண்டு பேரும் அப்பாட்ட ஏதோ பேசுறாங்க..

                   “நல்ல பையன் சார். நல்லா படிப்பான். நான் அவன ஸ்கூல் பஸ்ட் வருவான்னு எதிர்பாத்தேன். படிப்பாகட்டும், விளையாட்டாகட்டும் அவன் தான் முதல்ல நிப்பான். நான் கூட சொல்லுவேன்.. “டேய்.. உங்கப்பா ஒரு போஸ்ட்மேனா இருந்து வெயில், மழைனு பார்க்காம அலைஞ்சு, திரிஞ்சு கஷ்டப்பட்டு படிக்க வைக்காரு. அதுக்கு நீ நல்லபடியா படிச்சு ஒரு பெரிய வேலைக்கு போனினா தான் அவர் கஷ்டப்பட்டதுக்கெல்லாம் ஒரு மரியாதை. அவருக்காகவாது படிக்கனும்”னு. அவனும் “சரி”ம்பான். ஆனா இப்ப கொஞ்ச நாளாத்தான்.. ஏனோ இப்படியாகி... இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு யார் நினைச்சா.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.” என்று கண்ணாடி சார் சொன்னத நான் மட்டும் உயிரோட இருக்கும் போது கேட்டிருந்தேன்னா மனசு தூக்கி வாரி போட்டிருக்கும்.

                      “டேய்.. உங்கப்பா வீடு வீடா போய் லெட்டர் குடுத்தா.. நீ ஊர்ல இருக்கிற பொம்பளை பிள்ளைகளுக்கெல்லாம் போய் குடுக்கிறியா.. அதுவும் லவ் லெட்டரு.. அப்பன் புத்தி அப்படியே இருக்கு”னு திட்டிட்டு எப்படி மாத்தி பேசுறாரு பாத்தீங்களா.. அப்பவும் கூட நான் ஊர்ல இருக்கிற பிள்ளைகளுக்கெல்லாமா குடுத்தேன். லட்சுமிக்கு மட்டும் தான குடுத்தேன். ஓ.. உங்களுக்கு லட்சுமி யாருனு தெரியாதுல்ல..

                     லட்சுமி பதினொன்னாம் வகுப்புல எங்க ஸ்கூலுக்கு வந்து சேர்ந்தா.. என் கிளாஸ் தான். பாக்குறதுக்கு காலண்டர்ல இருக்கிற மகாலட்சுமி மாதிரி இருப்பா. அவ கண்ணை சுருக்கி சிரிக்கிறத பாக்கும் போதெல்லாம் எனக்கு ஸ்டேட் பஸ்ட் எடுத்த மாதிரி இருக்கும். உள்ளுக்குள்ள என்னமோ மாதிரி. அத எப்படி சொல்றது... ஆனா ரொம்ப சூப்பரா இருக்கும்.. பென்சில் சீவ ப்ளேடு குடுத்த்துல ஆரம்பிச்ச எங்க ப்ரெண்ட்சிப்பு கடைசியல எனக்குள்ள லவ்வாயிருச்சு.. சினிமா டயலாக் மாதிரியே இருக்குல.. ஆனா இத எனக்கு எப்படி சொல்லனு தெரியல..

                    ஒரு தடவை அவளோட ரெக்காட்டு நோட்டுல இதயம் படம் வரைஞ்சு தரச்சொன்னா.. நானும் படம் வரைஞ்சு பாகம் குறிச்சு கூடவே ஒரு சின்னத் தாள்ல கவிதைனு சொல்லி ஒரு ஆறு வரி எழுதிக்கொடுத்தேன். அந்த கவிதைய அவ பாக்காம நோட்ட அப்படியே சார்ட்ட நீட்ட... அவர் அதை எடுத்து, யார்க்கு யார் எழுதுனானு கேட்டு கூட்டத்த கூட்டிட்டாரு. எல்லாரும் அவளை கூட்டமா கூடி விசாரிச்சதுல, அவ அழுகுறா.. அது பொறுக்காம நான் தான் எழுதுனேன்னு உண்மைய ஒத்துக்கிட்டேன். அவளுக்கு நாலு திட்டும் எனக்கு பிரம்படியும் கிடைச்சுது. அது பத்தாதுன்னு எங்க அப்பாவையும் வரச்சொல்லி அவர் வந்து வாத்தியார்ட்ட இருந்த பிரம்ப வாங்கி எல்லார் முன்னாலையும் வச்சு அடி அடினு அடிச்சு பெரம்பு உடைஞ்சதும் தான் எல்லார் மனசும் ஆறுச்சு. அந்த பிரம்ப நான் தான் அதுக்கு முந்தின நாள் வாங்கிட்டு வந்திருந்தேன். அதுக்கப்புறம் லெட்சுமி என்கிட்ட பேசவே இல்ல. அவ மட்டுமில்ல எந்த பொண்ணும் என்கிட்ட பேசல. அவகிட்ட எத்தனையோ தடவை பேச போனாலும் ஒன்னு ‘உம்’முனு இருப்பா.. இல்ல அழ ஆரம்பிச்சுருவா.

                         அப்புறம் ஒருநாள் ஸ்கூல் விட்டு வரும்போது அவள என்கிட்ட பேச சொல்லி நான் கெஞ்சிக்கிட்டு இருந்த்தை எந்த புண்ணியவானோ பார்த்துட்டு போய் என் அப்பாட்ட வத்தி வைச்சுட்டான். அன்னிக்கு எங்கப்பாவுக்கு புதுசா பெல்ட் வாங்கவும், எனக்கு மருந்த வாங்கவுமா ரெட்டைச் செலவு. பிறகு ஒரு வழியா தேறி ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சேன். ரெண்டு நாள் ஒழுங்கா இருந்த நான் மூனாவது நாள் கிளாஸ் முடிஞ்சதும் அவகிட்ட போய் பேச சொல்லி கெஞ்சலா, கோவமா, அதிகாரமா, அமைதியானு மாத்தி, மாத்தி பேசுனதுல அவ. “என்னைய ஏன் இப்படி தொல்லை பண்ணுற.. உன்னால எனக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? வீட்டுல எல்லாரும் என்னையத்தான் தப்பா பேசுறாங்க. படிப்பையே நிறுத்திறனும்னு சொன்னாங்க. உன்னால எனக்கு தினம் தினம் எவ்வளவு திட்டு விழுது தெரியுமா..? அப்ப எல்லாம் செத்துறலாம் போல இருக்கு. முன்ன உன்னைய பிடிச்சிருந்துச்சோ இல்லையோ.. இப்போ உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் உண்மையிலேயே நல்லா இருக்கனும்னு நினைச்சீனா இனிமே என் முகத்துலையே முழிக்காத என்கிட்ட பெசாத.. ப்ளீஸ்”னு கத்தி அழ ஆரம்பிச்சுட்டா..

                     எனக்கு அப்போ என்ன தோணுச்சோ... கோவம் தலைக்கு ஏறிப்போச்சு. வேகமா பையில, புக்குக்குள்ள வச்சிரந்த பிளேட தேடிப் புடிச்சு எடுத்து, “நான் உயிரோட இருந்தாத்தான உன்கிட்ட பேசனும்னு சொல்வேன். உனக்கு தொல்லை கொடுப்பேன். நான் செத்தட்டா தோணாதுல.. நீயும் நிம்மதியா இருப்பீல”னு சொல்லிக்கிட்டே, என் கையில பிளேடால கீற ஆரம்பிச்சேன்.. ரத்தம் கொட்டுச்சு.. கண்ணெல்லாம் சொருகுச்சு.. அப்படியே செத்து போயிருவோம்னு தான் நினைச்சேன். முழிச்சு பார்த்தா கையில கட்டோட வீட்டுல இருக்கேன். அதுக்கப்புறம் கிட்டத் தட்ட ஒரு மாசமா ஸ்கூலுக்கே போகல. வேற ஸ்கூலுக்கு போறியானு கேட்டாங்க. முடியாதுனுட்டேன். தெருப் பையங்களோட கிரிக்கெட் விளையாடற அளவுக்கு உடம்பு தேறிடுச்சு. ஆனா லட்சுமி ஞாபகம் அடிக்கடி வரும். கனவுல கூட அவதான் வருவா.. காயம் பட்ட இடத்துல முத்தம் கொடுப்பா.. நீ கிரிக்கெட்ல லாஸ்ட் ஓவர்ல 6 சிக்ஸ் அடிச்சு பாகிஸ்தான ஜெயிச்சுட்டு வா நான் உன்னை கட்டிக்கறேம்பா.. நானும் ஓங்கி, ஓங்கி அடிப்பேன். ஆனா பந்து போகாம பக்கத்துலயே விழும். அம்பயர் எங்க வீட்டு மாட்ட பத்திக்கிட்டே கிரௌண்டுக்கு வந்து அவுட் கொடுப்பாரு. எதிர் டீம் ஜெயிச்சதும் எல்லாரும் எங்க மாட்டுல பால் கறந்து குடிப்பாங்க. இப்படி கண்ணாபின்னான கனவு வரும். இன்னொரு விஷயம் எங்க வீட்டு மாடு.. காளை மாடு. அப்புறம்.. ரெண்டு பேரும் கைகோர்த்து நடந்து போற மாதிரி கனவு வரும். டி.வி பார்க்கும் போது கூட அவதான் வருவா.. நியூஸ் வாசிப்பா, சொல்லப் போனா எங்க பார்த்தாலும் அவதான் தெரிஞ்சா.

                      ஒருநாள் என்னோட பைக்கட்ட எதுக்கோ எடுத்து துழாவுனப்போ நான் என் நோட்டுக்குள்ள வச்சிருந்த அவளோட காஞ்ச ரோஜாப்பூ, என் பேரு எழுதிக் கொடுத்த நோட்டு, அவ தின்னுட்டு அதுல பொம்மை செஞ்சு தந்த சாக்லேட் தாள். அவ ஓரம் கடிச்ச பேனா மூடி.. இதெல்லாம் பார்க்க.. பார்க்க.. எனக்க அழுகையா வந்துச்சு.. ஏதாவது செய்யனும் போல இருந்துச்சு.

                    அப்போதான் பரண் மேல தங்கராசு மாமா வயலுக்கு வாங்கி வச்சிருந்த பூச்சி மருந்து கண்ணுல பட்டுச்சு. எடுத்து ஒரே மடக்குல காலி பண்ணிட்டேன். ரொம்ப நேரம் கழிச்சுதான் உள்ள வந்த அம்மா பார்த்துட்டு கத்தி, ஊர் கூடி.. என்னைய ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போனாங்க.. போற வழியில லட்சமியோட முகம் பெரிசா.. தியேட்டர்ல நடிகரோட முகத்தை க்ளோசப்ல காட்டும் போது முத சீட்டுல உட்கார்ந்து பார்த்தா தெரியுமே.. அந்த மாதிரி தெரிஞ்சுது. கண்ணு முழுக்க அவதான் தெரிஞ்சா. அப்புறம் ஒரே இருட்டு. டாக்டர் பார்த்துட்டு எல்லா படத்துலையும் சொல்ற மாதிரி “ஒரு கால்மணி நேரம் முன்னவாச்சும் கொண்டுவந்திருக்கனும்... ம்கூம்..“னு சொல்லிட்டாரு.

                       என்னைய சுத்தி இப்படி உட்கார்ந்துகிட்டு இப்படி ஒப்பாரி வச்சு அழறது எனக்கு எரிச்சலா இருக்கு. நான் செத்துட்டதுல இவங்களுக்கு வருத்தமோ இல்லையோ.. எனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லை. நான் உயிரா நினைச்ச லட்சுமியே என்னைய பிடிக்கலனு சொல்லிட்டு போனதுக்கப்புறம் நான் யாருக்காக இருக்கனும்? அதுவும் போக நான் செத்த்துல இவங்களுக்கு ஒரு நஷ்டமும் கிடையாது.. என்ன எங்க கிரிக்கெட் டீம்ல எனக்கு பதில் கட்டை பாஸ்கர் விளையாடுவான். க்ளாஸ்ல என் இடத்துல அநேகமா மைதீன் உட்காருவான். அவனுக்கும் லட்சுமி மேல ஒரு கண்ணு. தேவியக்காவுக்கு கடைக்கு போக எனக்கு பதில் எதிர் வீட்டு முருகன் இருக்கான். அப்பாவுக்கு என்னால எந்த தொல்லையும் இல்ல. அம்மா இனிமேலாவது என்னைய பத்தி கவலைப்படாம சுடுசோறு சாப்பிடுவா. லட்சமிய கூட அவ வீட்டுல திட்ட மாட்டாங்க. என்ன நான் இருந்திருந்தா அவள கல்யாணம் பண்ணியிருந்தா அவள ரொம்ப நல்லபடியா பாத்திட்டிருந்திருப்பேன். வேறயாருக்கும் அவள நல்லா பாத்துக்க தெரியாது. அவதான் புரிஞ்சுக்கல.. ம்...நாளைக்கு பேப்பர்ல போட்டாலும் போடுவாங்க..‘காதல் தோல்வி.. மாணவர் தற்கொலை’னு போட்டு ரெண்டு பத்தி எழுதியிருப்பாங்க. போட்டோ கூட போடுறாங்களோ என்னவோ.. அப்படி போட்டா ஹால்டிக்கட்டுக்கு எடுத்த போட்டாவ போட்டா நல்லா இருக்கும். அதுல நான் அழகா இருப்பேன். பேப்பர படிக்கிறவன் கொஞ்ச நேரத்துல மறந்துடுவான். பள்ளிக்கூடத்துல கொஞ்சநாள் ஞாபகம் வச்சிருப்பாங்க. வீட்டுல ஒன்னு, ரெண்டு மாசம் நினைச்சிட்டு அப்புறம் அவங்கவங்க வேலைய பார்க்க போயிடுவாங்க. அவ்வளவு தான்.

                       இன்னும் என் உடம்ப பார்க்க ஆட்கள் வந்துகிட்டேதான் இருக்குறாங்க. உள் ரூமோட வாசல் கதவுக்கு பக்கத்துல ஏதோ தெரிஞ்ச முகமா பட, யார்னு பார்த்தேன். என் முன் பெஞ்சுல இருக்கிற புவனா.. அப்போ கண்டிப்பா மூர்த்தியும் வந்திருப்பானேனு தேடினேன். பக்கத்துலயே நின்னுட்டிருந்தான். அடுத்து இவன் தான். லேசாய் சிரித்துக் கொண்டேன். உதயராஜ், மோகன், கட்டை பாஸ்கர், லட்சு...மி. அட, லட்சுமி கூட வந்திருக்கா போல.. ஆமா இவ எதுக்கு இங்க வரனும், அதான் பிடிக்கலனு சொல்லிட்டால.. அப்புறம்

                          ஏன் வந்தா..? ஒருவேளை நான் செத்தது உண்மையானு பார்க்க வந்திருப்பாளோ..? பார்த்தா அப்படி தெரியல. கண்ணுல கண்ணீரா வந்துட்டே இருந்துச்சு.. ஒரு வேளை சாவு வீட்டுக்கு வந்தா அழனும்னு சாஸ்திரத்துக்கு அழறாளோ? ஆனா முகத்தை பார்த்தா இப்போ அழ ஆரம்பிச்சது போல தெரியல.. ரொம்ப நேரமா அழுதழுது முகம் செவக்குற வரைக்கு அழுதுருக்கா.. இன்னமும் கூட ஏங்கி.. ஏங்கி அழுதுட்டே இருக்கா.. ஏன்..? ஏன்..?

                     அதுக்குள்ள என் உடம்ப தூக்கி பாடையில வைச்சு தூக்கிட்டு போக ஆரம்பிச்சாங்க. எல்லாரோட அழுகையும் அதிகமாச்சு. எல்லாமே எனக்கு செயற்கையா பட்டுச்சு.. அவளும் அம்மாவும் அழுத்து தவிர. அவ வாய் விட்டே அழ ஆரம்பிச்சுட்டா.. மெது.. மெதுவா என்னைய வீட்டக்குள்ள இருந்து வெளிய எடுத்து வந்து ரோட்டுக்கு கொண்டு போக ஆரம்பிச்சாங்க. நாலு பேர் சேர்ந்து பாடைய உசத்தி தோளுக்கு மேல தூக்குனதுல என்னால கீழ பார்க்க முடியல. அவ கூடவே கொஞ்ச தூரம் நடந்து வந்தா.. அவ அழுகைச் சத்தம் எனக்கு கேட்டுகிட்டே வந்தது.. “ஏன் அழுற... அழாத”னு நான் சொல்லிப் பாக்குறேன் அவ காதுல விழவே மாட்டேன்குது. அவ கொஞ்சதூரம் வந்த்தும் மயக்கமாகி விழுறானு கூட இருக்கிறவங்க போடுற சத்தத்துல தெரியுது. ‘கீழ எதுவும் விழுந்துட்டாளா.. அதுக்குள்ள யாராவது புடிச்சுட்டாங்களானு நான் பாக்குறதுக்குள்ள தெருமுனை வந்துருச்சு.. நாங்க வளைஞ்சுட்டோம்.

              “லட்சுமி.. லட்சுமி...”

 
 
 
.

9 comments:

  1. arumaiyana kathai nanbararey.

    nalla ezuththu nadai...

    Superb....

    ReplyDelete
  2. very intresting
    remba feel panna vachiteenga
    also shows minds and reaction of peoples around us.

    ReplyDelete
  3. நன்றி சே.குமார், செந்தில். உங்கள் பாராட்டுகள், கருத்துக்கள் என்னை கண்டிப்பாய் உற்சாகப்படுத்துகின்றது. அடிக்கடி வாருங்கள்..

    ReplyDelete
  4. manasu valikuthu sir,,,,,,,,,

    ReplyDelete
  5. ரொம்ப உணர்ச்சிபூர்வமான கதை,அப்டியே பீல் பண்ண வைச்சிட்டிங்க.

    ReplyDelete
  6. கதை சூப்பர். ரொம்ப உணர்ச்சிபூர்வமான கதை.நன்றி.

    ReplyDelete
  7. i like this story..when i started this story to read i am in office...but after started the paragraph..finished and started office work..Good story.

    ReplyDelete
  8. jotji kumar..i love ur writing..i normally dont read stories but ur storeis made me to read non stop....u have told this story as if i am being the dead guy

    Thanks
    Raja

    ReplyDelete
  9. romba nalla irundhuchu brother. kaatchigal apadiye kannu munnadi odichu. super.

    ReplyDelete